பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 24 / 47

காட்சி 24

காட்சி 24

மூல ஸ்கேன் 100, 101

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(பைத்தியம் போல நடித்து அரசன் உலகப்பனால் அழைத்துச் செல்லப்பட்டபின்)

குரு: மாண்புமிக்க சீமான்களே! பகவானின் அருள் பெற்ற செல்வர்களே! இந்த மணிமகுடபுரி சாம்ராஜ்யத்தில் பாவச் செயல்களின் தொகை பெருகி விட்டது! காவி அணிந்தோரைத் தூற்றி வாழும் கூட்டமும் அதிகரித்து விட்டது! அதன் பலனைத் தான் சற்று முன்னர் நாம் இந்தத் திருச்சபையிலே கண்ணால் கண்டோம்!

மக்கள் செய்யும் பாவம், மன்னவன் தலையில் விழுகிறது. மக்கள் தலைவனன்றோ, மன்னவன்! எம்பெருமானைப் பிடித்த கோபாக்கினி தான் கோவேந்தனின் பித்த முதிர்ச்சிக்குக் காரணம். இனியும் இந்த ராஜ்யத்தில் நாத்திகம் பேசுவோரையும் நாத்தழும்பேறியோரையும் அனுமதித்துக் கொண்டேயிருந்தால், இப்போது மன்னனைப் பிடித்திருக்கிற இந்த நோய் பின்னர் ஒவ்வொரு சீமானையும் பிடித்து வாட்டும் - அதன் பிறகு ஒவ்வொரு பிரஜையையும் பிடித்து வருத்தும்! அவ்வளவு ஏன்? ஆண்டவனே, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாக மாறி மணிமகுடபுரி சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவார் - என்னைத் தவிர!

சீமான் 1: உண்மைதான் - குருநாதர் சொல்வது உண்மைதான்! கோயில் கட்ட உடனே கல் நாட்டு விழா செய்து, ஆண்டவன் கோபத்தை தணிக்க வேண்டும்!

சீமான் 2: ஆமாம்! அதை நான் ஆமோதிக்கிறேன்.

எல்லாச் சீமான்களும்: எல்லோருமே ஆமோதிக்கிறோம்!

குரு: மார்கழி ஏழாம் நாள் - என் மனதுக்குப் பிடித்தமான நல்ல நாள்! அன்றைய தினம் கோயில் திருப்பணிக்குக் கல் நாட்டு விழா!

சீமா: மிகவும் சரி! கல்நாட்டு விழாவை அரசரே வந்து நடத்தி வைக்க வேண்டும்.

குரு: சந்தோஷம் - அரசரையே கல் நாட்டு விழாவுக்கு அழைத்து வருகிறோம். ஆனால் அதற்குள் அவர் நோய் தீர வேண்டும்! சீமான்களே! இந்த நாட்டுக்கு ஒரு குறையும் வராமல் காப்பதற்கு, இன்றிரவு நான் என் அந்தராத்மாவை ஆண்டவனுடன் பேச அனுமதிப்பதென்று முடிவு செய்து விட்டேன். ஆண்டவன் என்னுடன் விரைவில் வந்து பேசுவதற்காக மணிமகுடபுரியின் க்ஷேமலாபத்தில் அக்கரை கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இச்சபையில் அவன் திருநாமத்தைத் தோத்திரம் செய்ய வேண்டுகிறேன்!

அமை: ஏகமனதாக எல்லாத் தீர்மானங்களும் நிறைவேறுகின்றன. இப்போது பிரார்த்தனை ஆரம்பமாகலாம்!

(எல்லா சீமான்களும் பஜனை செய்கிறார்கள்)