காட்சி 23 / 47
காட்சி - 23
காட்சி - 23
மூல ஸ்கேன் 95, 96, 97, 98, 99, 100
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(சீமான்கள் சபை - பத்து சீமான்களும் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களும் தனியிடத்தில் கூடியிருக்கிறார்கள். குரு நாதர், அரிஹரநாதர், அமைச்சர் ஆகியோர் இருக்கிறார்கள்)
அமை: (எழுந்து) பெருமைக்குரிய, மணிமகுடத்தின் பிரதிநிதிகளே! பொதுமக்களே! இன்றைய தினம் அரசர் பெருமான் மணிமாற ராஜன் அவர்கள், நமதுசபைக்கு விஜயம் செய்கிறார் - சீமான்கள் சபைக்கும் அரசருக்கும் கோயில் கட்டுதல் சம்பந்தமாக ஏதோ மனவருத்தமிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்காகவே உடல்நிலை சரியில்லாமலிருந்துங் கூட அரசர் அவர்கள் சபைக்கு வர இசைந்துள்ளார்கள். ஆண்டவன் ஆணையாக, இந்த சீமான்கள் சபையிலே பிளவு ஏதுமில்லை. அரசருக்கும், அதிகார பீடத்திற்கும் எந்தவிதமான அபிப்பிராய பேதமுமில்லை. ஒரே ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் நமது மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு சிறிது மூளைக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்திக்கு ஏற்பட்டுள்ள அந்த மூளை நோயையும், நமது சனாதன சக்கரவர்த்தி குருநாதர் அவர்கள் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். விரைவில் குணமாகிவிடும், குணமாக வேண்டும் என்று நாமெல்லாம், ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக! இப்போது அரசர் வரும் நேரமாகி விட்டது. நான் இத்துடன் என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்.
(அரசனும் உலகப்பனும் வருகிறார்கள்)
உலக: மணி மகுடபதி - மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் - மணிமாற ராஜன் - வருகை! வருகை!
(அரசன் அங்கு வந்ததும், அனைவரும் எழுந்து வணங்குகிறார்கள். அரசன் கம்பீரத்தோடு அனைவரையும் பார்க்கிறான். அரச பீடத்தில் போய் அமருகிறான். சபையில் நிசப்தம் நிலவுகிறது. அரசன் எழுகிறான். சபையைப் பார்த்து பல் இளிக்கிறான். ‘அமைச்சரே’ என்று அழைக்கிறான்.)
அமை: அரசே! கொடிக்கால் நகரைப் பற்றிய தீர்மானம்...
அரசர்: கொடிக்கால்! கொடிக்கால்! கொடிக்கு கால் ஏதய்யா? கொடிக்காலாம் கொடிக்கால்! ஓ...! கொடிக்குக் கால் உண்டு! உண்டு! பெண்களைப் பூங்கொடி என்கிறார்கள். பெண்களுக்குக் கால் இருக்கிறது. ஆகையினாலே கொடிக்குக் கால் உண்டு. உம் சரி - அமைச்சரே! என்ன சொன்னீர்? கொடிக்காலை... என்ன செய்ய வேண்டும்?
அமை: காலி செய்ய வேண்டுமென்று...
அர: அய்யோ! காலை காலி செய்து விட்டால், எப்படி நடப்பது? முடியாது முடியாது - நடக்க முடியாது... இப்படித்தான் நடக்க வேண்டும்.
(என்று நொண்டியைப் போல நடக்கிறான். அதைக் கண்டு சீமான்களும், மக்களும் பரிதாபப்படுகிறார்கள்.)
சீமான்: அமைச்சர் அவர்களே! அரசர் உடல்நல மில்லாமலிருப்பதால் அவரை அரண்மனைக்கு அழைத்துப்போவது நல்லது!
அர: அரண்மனை! அரண் என்றால் கோட்டை - மனை என்றால் வீடு - கோட்டை வீடு! கோட்டை விடு! கோட்டை விடு!! எதைக் கோட்டை விடுவது?
அமை: அரசே! அரண்மனைக்குச் செல்லலாம்.
அர: முடியாது - நான் ஆரண்யத்துக்குத்தான் செல்வேன் - நான் திரும்பி வர பதினாலு வருஷங்கள் பிடிக்கும் - அதுவரையில் இந்த நாட்டை என் கிரீடம் ஆளட்டும் - இந்தாரும் அமைச்சரே! இந்த கிரீடத்தின் மீது சிம்மாசனத்தை தூக்கி வைத்து, எனக்குப் பதிலாக நீர் ஆளும்; இல்லாவிட்டால் நெருப்பு ஆளட்டும்.
(என்று கிரீடத்தை அமைச்சர் கையில் கொடுக்கிறான் - பிறகு வெளியே போவது போல நடக்கிறான், பின் திரும்பி வந்து)
அடடே! அமைச்சரே! கிரீடத்தையா கொடுத்து விட்டேன்? இதை சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதே... பாபமாயிற்றே... சிம்மாசனம் அழுக்காகிவிடும்.. இதோ இதை சிம்மாசனத்தில் வையும்...
(என்று கிரீடத்தை வாங்கிக் கொண்டு தன் பாதரக்ஷைகளைக் கழற்றி, அமைச்சர் கையிலே கொடுக்கிறான். அவரும் அவைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்.)
அர: (கிரீடத்தைப் பார்த்தபடி) உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, ராஜபோகத்திலே, அதிகாரத்திலே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? (பாட்டை முடித்து) ஏ! கிரீடமே நவரத்தினங்களும், முத்துக்களும் வைத்து இழைக்கப்பட்ட தங்கக் கூரையே! என் தலைக்கு நீ ஒரு பாறையே!
(என்று கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறான்... அமைச்சர் கையிலே இருக்கும் பாதுகைகளைப் பார்க்கிறான்.)
அர: (அமைச்சரிடம்) இது என்ன அதிசயம்! மந்திரியாரே - பாதுகையை கையிலே போட்டுக் கொண்டு நிற்கிறீர்? ஓகோ! பாதுகை என்றதும், கையிலே மாட்டிக் கொண்டீரோ - மகா புத்திசாலி அய்யா நீர் - இது பாதக்கை! அதனால், பாதத்தில் மாட்டிக் கொள்ளும் - பாதுகையே - பாதுகையே!
(என்று பாடுகிறான்)
குருநாதர்: (எழுந்து) அமைச்சரே!... அரசரின் நிலை எனக்கு மனக்கிலேசம் தருகிறது.. காணச் சகிக்கவில்லை. உடனே அழைத்துப் போக ஏற்பாடு செய்யுங்கள்!
அர: (அதைக் கேட்டு விட்டு) ஏ... உலகம்!
உலக: அரசே!
அர: யார் அது? அந்தப்பிராணி யார்?
உலக: அவர்தான்பிரபு, நமது குருநாதர்.
அர: குரு - நாதர் - ஓ - குரு என்ற பெண்மணிக்கு இவர் நாதரோ? - அது என்னடா, பெண்ணுக்குப் போய் குரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
உல: இல்லை பிரபு - குருநாதர் என்றால் பெரிய மகான்!
அர: ஆங்! (ஆச்சரியமாக) யானை பெரிசு!
உல: இல்லை சிறந்த பக்திமான்!
அர: யாருடா இவன்? யானையா என்று கேட்டால் மான் என்கிறான் - மான்! ஏ மானே! (குருநாதரிடம் போய்) வள்ளிமானே! ஒரு புள்ளிமான் - (என்று கேலியாகப் பாடுதல்) ஆகா - அமைச்சரிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு காட்டுக்கல்லவா வந்திருக்கிறேன் - அப்படியானால் இந்த மான் - வள்ளி மானுமல்ல, புள்ளிமானுமல்ல, இது மாயமான் மாரீச மான்! இது ராமா! ராமா! என்று கத்தும் - (உலகப்பனைப் பார்த்து) ஏ லக்ஷ்மணா! பக்தியோடு கத்துகிறது என்று ஏமாந்து விடாதே! எடு வில்லை! தொடு கணையை!
(என்று வாளை உருவி உலகப்பனிடம் நீட்ட, உலகப்பன் வாளைத் தொடுகிறான்.)
ஏய் தொடு கணையை, என்றால், கணையைத் தொடுகிறாயா நீ! தொடுக்க வேண்டும், என்று அர்த்தமடா, முட்டாளே!
அரி: (தயவாக) அரசே! குருவைக் கேலி செய்யாதீர்கள்! அவாள் பெரியவாள்!
அர: என்னிடமிருப்பது என்ன; சின்ன வாளா? இதுவும் பெரிய வாள் தான்! அதுவும் போர்வாள்! யார் தடுத்தாலும் பாயக் கூடிய போர் வாள்! (வாளை சுழற்றிக் கொண்டே ஆடியபடி) ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று பாடுகிறான்.
குரு: அமைச்சரே! மன்னர் பிரானை இப்படி வேடிக்கை பார்ப்பது வேதனையாக இல்லையா? உடனே அழைத்துச் செல்லுங்கள் - ஏய் உலகப்பா! என்ன செய்கிறாய்?
அர: உலகப்பனா ஆடுகின்றாய் உலகப்பா! ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா! (சீமான் சபையைப் பார்த்து) தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன் - இந்த செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்! (கம்பீரமாக) இந்நிலையில் இருப்பதனால் உலகப்பா - நீ புதுக்கணக்குப் போட்டு விடு! பொருளையெல்லாம் பொதுவாக எல்லார்க்கும் குத்தகை செய்!
(இந்த சமயம் அமைச்சரும், குருநாதரும் அரசனை அழைத்துச் செல்லும்படி சைகை காண்பிக்கின்றனர்.)
உலக: வாருங்கள் பிரபோ - உடனே சென்று பொருளையெல்லாம் பொதுவாக்க, குத்தகை செய்து விடுவோம்.
(அரசனை அழைத்துப் போக ஒரு வீரன் வணங்கி நிற்கிறான். அவனைப் பார்த்தவுடன் அரசன் நடுங்குகிறான்.)
உலக: பயப்படாதீர்கள் பிரபு! இவர் உங்கள் வீரன்!
அர: என்னது? பயமா? நானா பயப்படுகிறேன்? (குருநாதரை ஜாடை காட்டி) இந்த சிறு நரியைக் கண்டு இந்த சிங்கம் அஞ்சுவதா?
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதும் அச்சமென்பதில்லையே!”
(என்று உரத்த குரலில் பாட, உலகப்பனும் வீரனும் அரசனை உள்ளே இழுத்துச் செல்கின்றனர். கூடியிருப்போரெல்லாம் ‘இச்’ சென்ற பரிதாப ஒலியை எழுப்புகின்றனர்.)