காட்சி 21 / 47
காட்சி 21
காட்சி 21
மூல ஸ்கேன் 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மந்திரிவீடு - மந்திரி குணசீலர் ஆயாசத்தோடு வஞ்சியிடம்)
குண: ஒரே குழப்பம் - ஒரே குழப்பம்! கலாராணி எங்கு போனாள்? என்ன ஆனாள்? யாரிடம் சிக்கினாள் எதுவுமே தெரியவில்லை, இதுவரையில்! நான் அதற்காகக் கவலைப்படுவதா; அரசாங்கத்தை எதிர்த்து நாலாபுறங்களிலும் கிளம்பி விட்ட புரட்சி சக்திகளைப் பற்றிக் கவலைப்படுவதா? மக்கள் உள்ளத்தையே ஒரு எரிமலையாக மாற்றுகிறான், அந்த புதுமைப்பித்தன்! அந்த எரிமலை வெடிக்குமானால் அந்த நெருப்புக் குழம்பிலே உருகிப் போய், மறைந்து விடும் என் அதிகாரம் - அந்தஸ்து - அமைச்சர் பதவி - எல்லாமே!
வஞ்சி: பிரபு - கடற்கரையில் இருந்து கொண்டு, உப்புக்கு அலையலாமா? தங்களின் கவலைகள் அத்தனைக்கும் மருந்தாக இருக்கிறார் குருநாதர். அவரால் முடியாததா கலாராணி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க! புதுமைப்பித்தன், பொன்னழகன் கூட்டத்தை சபித்தே பொசுக்கி விடலாமே, அவர் நினைத்தால்!
குண: சரிதான், நீ சொல்வதைப் போல் நான் அந்த குருநாதரிடம் சொன்னால், அவர் என்னைப் பார்த்து என்ன தெரியுமா கேட்டார்? புதுமைப்பித்தன் ஆவி, அமைச்சர் உருவத்திலே வந்திருக்கிறதா என்று கேட்டார்! இதுமாதிரி கேள்விகளை, புதுமைப்பித்தன் தான் கேட்கிறான், அவன் பத்திரிகையில்! நாமும் கேட்டால் குருநாதருக்குக் கோபம் தான் வரும்!
வஞ்சி: அப்படியானால் குருநாதர், சக்தியற்றவரா?
குண: சத்தம் போடாதே - யார் காதிலாவது விழப் போகிறது! என்னமோ “நெய்க்குத் தொன்னை - தொன்னைக்கு நெய்” என்பார்களே, பழமொழி - அதுபோல அவருக்கு நான் ஆதாரம் - எனக்கு அவர் ஆதாரம்!
வஞ்சி: இதுமாதிரி போலி ஆதாரங்களால் புரட்சியை அடக்க முடியாது பிரபு!
குண: வஞ்சி! நீ ஒன்றும் யோசனையும் சொல்ல வேண்டாம் - போ! போ! (போகிறாள்)
(ஒரு காவலன் வந்து)
காவலன்: பிரபு! பத்திரிகையாசிரியரும், குருநாதரும் பல்லக்கில் வந்திருக்கிறார்கள். தங்களை அவசரமாகப் பேட்டி காண வேண்டுமாம்.
குண: அழைத்துவா! அழைத்துவா!
(குருநாதர், அரிஹரநாதர் இருவரும் வந்து அமருதல்)
குண: என்ன திடீரென்று?
அரி: சீமான்கள் சபை, அதிகாரப்பூர்வமில்லாமல் அவசரமாகக் கூடி, நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஆராய்ந்தோம். கோயில் கட்டுவதற்கு, அரசன் சம்மதிக்க வில்லையென்ற செய்தியை வைத்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாம். கடைசியாக அரசனே சீமான்கள் சபைக்கு வரவேண்டுமென்றும், கோயில் கட்ட சம்மதித்து கையெழுத்திட வேண்டுமென்றும், அப்படிக் கையெழுத்திட்ட பிறகே சீமான்கள் சபை, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்குமென்றும் தீர்மானித்திருக்கிறார்களாம்.
குண: இந்த முடிவுக்குக் காரணம்?
குரு: அந்த ‘மணிமகுடம்’ பத்திரிகைதான்.
குண: அய்யோ சீமான்கள் சபையிலும் நமக்கு எதிர்ப்பு ஏற்பட்டால் பிறகு சமாளிக்கவே முடியாதே!
அரி: கொடிக்கால் நகரத்திலே பொன்னழகன், அல்லி நடத்திய மறியலும், அங்கே அரசாங்கம் பெரிய அட்டூழியம் புரிந்ததாக, ‘மணிமகுடம்’ பத்திரிகையிலே வந்துள்ள செய்தியும் ஜனங்களிடம் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. இந்த சமயம் அரசனும் சீமான்கள் சபையும் நம் பக்கம் இல்லாவிட்டால் நமது பதவிகளுக்கு ஆபத்துதான்!
குரு: ஆமாம். சீமான்கள் சபைக்கு அரசன் எப்படியும் வந்தாக வேண்டும். தேவாலயத் தீர்மானத்தில் கையெழுத்திட்டாக வேண்டும் - அதற்கு அமைச்சர்தான் பொறுப்பாளி!
(அந்த சமயத்தில் பைத்தியக்காரன் போன்ற ஒரு மனிதனை இரண்டு காவலர்கள் உள்ளே இழுத்து வருகிறார்கள். அடித்தபடியே! அந்த மனிதனின் கையில் நூற்றுக்கணக்கான ‘மணிமகுடம்’ பத்திரிகைகள் இருக்கின்றன. இழுத்து வரப்படும் அவனை, அமைச்சர், குரு, அரிஹர நாதர் மூவரும் ஆச்சரியமுடன் பார்த்து)
குண: யார் இவன்?
காவலன்: பிரபு! ‘மணிமகுடம்’ விற்றுக் கொண்டு போனான். தங்கள் உத்தரவுப்படி இவனைப் பிடித்து வந்தோம்.
குண: சபாஷ்!.. குருநாதரே! ‘மணிமகுடம்’ எங்கெங்கே யார் யார் விற்கிறார்களோ, அவர்களையெல்லாம் கைது செய்ய ரகசிய உத்தரவு போட்டிருக்கிறேன். அப்படிக் கிடைத்தவர்களில் இவன் பத்தாவது ஆள்!
அரி: ஆளைப் பாருங்கள் - பைத்தியக்காரனைப் போல இருக்கிறான் (அவனிடம் வந்து) ஏய்.. இந்தப் பத்திரிகைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
அவன்: துட்டு கிடைக்கும் விற்றால்! அவ்வளவுதான் சம்பந்தம்!
குண: இதன் ஆசிரியர் புதுமைப்பித்தன் எங்கேயிருக்கிறான்.
அவன்: தெரியாதுங்க. தெருவிலே படுத்திருந்தேன். திடீர்னு ஒருஆள் வந்தார் - இந்தப் பத்திரிகைகளை விற்று துட்டுகளை நீயே எடுத்துக்க - என்றார். விற்க வந்தேன் - வந்த சமயத்தில் இவர்கள் பிடித்துக் கொண்டார்கள் சாமி! என்னை விட்டுவிடுங்கள்! பிரபு! நான் போகட்டுமா?
குண: சீ! எங்கேடா போகிறாய்? (கன்னத்தில் அறைகிறார். காவலனிடம்) ஏய் இவனைக் கைது செய்து பூட்டி வையுங்கள். இந்தப் பத்திரிகைகளுக்கு தீ வைக்கச் செய்யுங்கள்!
குரு: ஆமாம் - கண்ணுளிரப் பார்ப்போம்; இங்கேயே நடக்கட்டும்!
(காவலர் அவனிடமிருந்த பத்திரிகைகளை வாங்கி, கீழே போட்டு அவன் கையாலே தீ வைக்கச் சொல்லி, வற்புறுத்துகிறார்கள். அவன் தயங்கவே, காவலர்கள் அடிக்கிறார்கள். பிறகு, சிறு தீப்பந்தத்தால் அந்த ஏடுகளுக்கு அவனே தீயிடுகிறான். தீயிடும்போது - அவன் ‘யானுமிட்ட தீ மூள்கவே மூள்கவே!’ என்று கத்துகிறான். குருநாதர் வெறிச் சிரிப்புடன் பத்திரிகைகள் எரியும் காட்சியைப் பார்க்கிறார்... அப்போது அரண்மனை மெய்க்காப்பாளன் உலகப்பன் அங்கு வருகிறான். அவன் உடம்பெல்லாம் நடுங்குவது போல் தெரிகிறது. அவன் பரபரப்பைக் கண்டதும்)
குணசீலர்: உலகப்பா - என்ன நடந்தது?
உலக: ஆபத்து பிரபு! ஆபத்து! அரசர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார்! அரச பதவியைத் துறந்து விட்டார்!
குண: என்ன?
உல: இதோ அவர் கொடுத்து விட்டுப்போன கடிதம்!
(குணசீலர் கடிதம் படித்தல்)
அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு,
நாட்டிலே ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் என்னைப் பயமுறுத்துகின்றன. எந்த நேரத்திலும் புரட்சிக்காரர்கள் கையில் இந்த நாடு சிக்கி விடலாம். அந்த சமயம் அவர்களால் கைது செய்யப்பட்டு, அவமானப்படுவதை விட இப்போதே ஓடி விடலாம் என்று தீர்மானித்து அதன்படி வெளியேறி விட்டேன். அரச பதவியை மட்டுமல்ல; இந்த உலகத்தையே துறந்து நிம்மதியாக மேல் உலகு செல்ல முடிவு கட்டி விட்டேன். என் ஆத்மா சாந்தி அடைவதற்கான சடங்குகள் எல்லாம், குரு நாதரைக் கொண்டு நடத்தி வையுங்கள்! எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி அதுதான்! வருகிறேன்.
மணிமாறன் மணிமகுடத்தின் மாஜி மன்னன்
அரி: நம்முடைய திட்டங்கள் எல்லாம் கவிழ்ந்தன - இந்தச் செய்தி வெளியே தெரிந்தால் போதும் - அடுத்த வினாடியே நமது ஆட்சி ஒழிந்து விடும் - நாமெல்லாம் சிறைக் கோட்டங்களைத் தான் அலங்கரிக்க வேண்டும்.
உல: அதற்கும் சிறையிலே இடமில்லை - ஆயிரம் பேரை அடைக்க வேண்டிய சிறையில் நாலாயிரம் பேரை அடைத்திருக்கிறோம், ஆடு மாடுகளைப் போல!
மணிமகுடம் விற்ற மனிதன்: (குறுக்கிட்டு) இவங்க எல்லாம் உள்ளே போனா, அவுங்க எல்லாம் வெளியே வந்து விடுவாங்களே!
(காவலன், ஆத்திரத்தோடு அவனை அறைந்து ‘பேசாதே’ என்று எச்சரிக்கிறான்)
குரு: தெருவிலே போவோரும் வருவோரும், ஏழையும், மேழையும், இதுபோன்ற பத்திரிகை விற்கும் அனாதைகளும், கூலி கூட்டங்களும், அரசாங்கத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் அது பெரிய ஆபத்து அமைச்சரே! நான் வெளியிலே சொல்வதில்லையே தவிர, எனக்கு நன்றாய்த் தெரியும். ஒரு தேசத்திலே இதுபோன்ற தேய்ந்து போனதுகள் (பத்திரிகை விற்பவனைக் காட்டி) கொஞ்சம் தெளிவு பெற்றாலே, பிறகு ஏற்ப்பட்ட இரும்பு ஏகாதிபத்தியங்களும் தூள் தூளாகி விடும்!... இந்த நேரத்திலேதான், அமைச்சரே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
குண: குருநாதரே! மேலும் மேலும் பயமுறுத்தாதீர்கள். அரசன் இல்லை என்ற செய்தி, தீ போல பரவுவதற்கு முன் ஒரு திட்டம் தீட்டுங்கள்!
குரு: திட்டம் - நான் தீட்ட வேண்டும்,
(என்று கூறியபடி, மணிமகுடப் பத்திரிகை வியாபாரியிடம் முன்னோக்கி நடக்கிறார்; அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறார்; அவன் மிரளுகிற அளவுக்கு, அங்குள்ளோர் அனைவரும் (வியப்படைகிற அளவுக்கு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அங்கு மாட்டப்பட்டுள்ள அரசனுடைய படத்தையும் பார்க்கிறார். படத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கிறார், திடீரென்று கூச்சலிடுகிறார்!)
குரு: அரசன் கிடைத்து விட்டான், அமைச்சரே - அரசன் கிடைத்து விட்டான்!
குண: என்ன?
உல: எங்கே? எங்கே? எங்க ராஜா எங்கே?
குரு: அமைச்சரே? அரசன், மேல் உலகம் செல்லப் போவதாக ஓலையில் எழுதியிருக்கிறான் அல்லவா? சபாஷ்! சபாஷ்! அப்படியானால் இதோ அரசன் கிடைத்து விட்டான்.. நம் மனம் போல் ஆட்டி வைக்க ஒரு மன்னன் கிடைத்து விட்டான்! (அவனைப் பார்த்து) ஏ! நாடோடிப் பயலே! நீ நாடாளுகிறாயா?
அவன்: அப்படின்னா என்னங்க?
குரு: நாடு! நாடு - தேசத்தின் ராஜாவாக ஆகிறாயா என்றார்.
அவன்: ராஜாவா? ஐயையோ! வேண்டாங்க.. ராஜாவாக இருந்தா ஆபத்துங்க...
குரு: என்னடா ஆபத்து! குணசீலரே!... நமது அரசனைப் போலவே இருக்கிறான் ஏறத்தாழ! ராஜ உடைகளைப் போட்டால், அரசனாகவே தோற்றமளிப்பான்! இதுமாதிரி ஒரு பொம்மை, மணிமகுடத்தின் கொலுவை அலங்கரிக்கட்டுமே! அரசன் வெளியேறினான் என்ற செய்தியையே மூடி விடலாம் அல்லவா!
குண: ஆமாம் - சரியான யோசனை!
அரி: யாருக்கும் தோன்ற முடியாத யோசனை... இவனே தான் இனி ராஜா...
உல: ஆகா! சுக்ரதிசை தான் - ஆளு பெரிய அதிர்ஷ்டசாலி!
அவன்: நான் ராஜாவாக இருக்க மாட்டேங்க - என்னை விட்டுடுங்க... ராஜான்னா சண்டைக்கு போகணும் - ஜனங்களிட்ட கெட்ட பேரு வாங்கணும் - எந்நேரமும் வாளும் கையுமா நிக்கணும் - யாரு படையெடுப்பானோ, எவன் கோட்டையை வளைப்பானோ, அப்படின்னு பயந்து சாகணும்! வேண்டாங்க, அந்த உயிர் கொடுக்கிற வேலை! வேணும்னா நான் குருநாதரா இருக்கிறேன்.
குண: குருநாதராகவா?
அவன்: ஆமாங்க.. அதாங்க கஷ்டப்படாம புகழ் வாங்குகிற வேலை! கத்தி கபடா தூக்காம வாழலாம். யார் ஆண்டா என்ன; யார் செத்தானென்ன? நம்ப வாழ்க்கை சுகமாயிருக்கும்! அந்த வேலையே கொடுங்க!
குண: டே முட்டாள்!.. சொல்வதைக் கேள்! நீ ராஜாவாகவே இரு!... ஒரு ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இதை மறுத்தாயானால் மரண தண்டனை கிடைக்கும் உனக்கு! இப்போது சொல்; நீ மறுத்து மரண தண்டனை அனுபவிக்கிறாயா? அல்லது, ஒப்புக் கொண்டு பலருக்கு மரண தண்டனை கொடுக்கிறாயா?
அவன்: ஒப்புக் கொள்கிறேன் - ஆனால் நான் எல்லாருக்கும் மரண தண்டனை தர மாட்டேன். இந்த நாட்டிலே மூணே பேருக்குத் தான் மரண தண்டனை கொடுப்பேன்.
அரி: யாரப்பா அது?
அவன்: அவங்க செத்துப் போய்ட்டாங்க! சொன்னா உங்களுக்குத் தெரியாது.
உலக: செத்துப் போனவுங்களுக்கு மரண தண்டனையா? சரிதான் - சரிதான்!
அவன்: உஸ்! வீரன் ஒரு தடவைதான் சாவான் - கோழை பலமுறை சாவான்னு - இந்த ‘மணிமகுடம்’ பத்திரிகையிலே தான் நான் ஒரு தரம் படிச்சேன்!
(சொல்லிக் கொண்டே பல் இளிக்கிறான்.)
குண: ஏய் இனிமேல் ‘மணிமகுடம்’ பத்திரிகையைப் பற்றி பேசக் கூடாது.
அவன்: மணிமகுடம் நாட்டைப் பத்தியே பேசணும்! சரிங்க! ஆமாம் ஒண்ணு கேக்க மறந்துட்டேன் - நாடகம் எப்போது நடத்தப் போறீங்க.
குண: நாடகமா?
அவன்: நான் ராஜா வேஷம் போடணுமில்லே அது நாடகமில்லையா?
அரி: சரிதான் கொஞ்சம் பைத்தியங்கூட நமக்குச் சரியான ஆள்தான் ஏய்! நீ இங்கே நிரந்தர ராஜாவாக இருக்கணும் - எங்களைப் போல!
அவன்: அப்படிங்களா? சரிசரி! இப்ப நிரந்தரமா மந்திரி வேஷம் போட்டிருக்கிறது யாரு? குருநாதரு வேஷம் போட்டிருக்கிறது யாரு?.. இவர் என்னா வேஷம்?
(அரிஹரநாதரைக் காட்டி.)
குண: உலகப்பா! அவனைப் பேசவிடாதே! அவனை அரசனாக்க வேண்டியது உன் பொறுப்பு! பழையபடி நீயே! மெய்க்காப்பாளனாக இருக்க வேண்டும். இந்தப் புதிய அரசனுக்கு! பழைய அரசன் எப்படியெப்படி நடப்பானோ! எப்படி உட்காருவானோ, அப்படியெல்லாம் பழக்க வேண்டும். சீக்கிரம் - நாளைக்கே இவன் சீமான்கள் சபைக்கு வருவது போலத் தயார் பண்ணு!
அரி: ஆமாம் - சபையில் கையெழுத்துப் போட வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?
குண: ஆமாம் - என்ன செய்வது? (யோசித்து) சரி - அரசனுக்கு மூளைக் கோளாறாக இருக்கிறது - சபையோர் விருப்பத்தை முன்னிட்டு உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் அழைத்து வந்தோம். என்று கூறிவிடுவது! எப்படியோ; தற்காலிகமாகத் தப்பி விடலாமல்லவா? (அவனைப் பார்த்து) ஏ, நாடோடி! நீ நாளைக்கு சீமான் சபையில் மூளைக் கோளாறுள்ள அரசனைப் போலவே நடிக்க வேண்டும்.
அவன்: ஓ! இரண்டு நடிப்பா? சரி - நாடகமே உலகம்!
(என்று உலகப்பனைப் பார்க்கிறான்.)
குண: உலகப்பா - அழைத்துப் போ!
உலக: வாங்க, ராஜாதி ராஜரே வாங்க!
அவன்: ஆகா - என் கருப்பு ரோஜாதி ரோஜரே போங்க.
(போகும்போது அவன், உலகப்பனைப் பார்த்து கண் சிமிட்ட இருவரும் ஒருவருக்கொருவர் புன்னகை புரிந்தபடி போகிறார்கள். மணிமாறனேதான், ‘மணிமகுட’ வியாபாரியாகவும், புதுமைப்பித்தனாகவும், இப்போது போலி அரசனாகவும் இருக்கிறான் என்பது உலகப்பனுக்குத் தெரியாதா என்ன?)