காட்சி 20 / 47
காட்சி 20
காட்சி 20
மூல ஸ்கேன் 81, 82, 83, 84, 85
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(கொடிக்கால் நகரம் ஏழைகளின் குடிசைகளிலே அரசாங்க வீரர்கள் நுழைந்து கொடுமை புரிகிறார்கள். வீடுகளின் கூரைகள் பிரிக்கப்படுகின்றன. சுவர்கள் இடிக்கப்படுகின்றன. குழந்தை குட்டிகளோடு நடுத் தெருவிலே நிற்கிறார்கள் கொடிக்கால் நகரத்து மக்கள்.)
கிழவன்: (தள்ளாடியபடி) இது என்னப்பா அக்கிரமம். முன் எச்சரிக்கை கூட செய்யாமல், இப்படி குழந்தை குட்டிகளோடு எங்களை நடுத்தெருவிலே விடுறீங்களே, இது கடவுளுக்கே அடுக்குமா?
தலைமை வீரன்: கடவுளுக்கு அடுக்கு மாளிகை கட்டத்தான், உங்களையெல்லாம் ஓடச் சொல்லுகிறோம். ஏ, கிழவா! எதிர்த்துப் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா?
கிழ: இதைவிட இன்னும் என்ன நடக்க வேண்டும்? அடப் பாவிகளே! நாங்க எங்க போய் சந்தியிலே நிற்போம்!
த.வீ: சீ, கிழட்டு நாயே! தள்ளிப் போ - வேலை நேரத்திலே குறுக்கே நின்று கொண்டு! போடா! போ..!
(ஒரு வாலிபன், அவன் மனைவி, குழந்தை மூவரும் ஒரு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். குழந்தையின் பொம்மையை ஒரு வீரன் தூக்கி எறிகிறான், மற்ற சாமான்களோடு.)
குழந்: அப்பா- அய்யோ என் பொம்மை!
(என்று அழுகிறது.)
அப்பா: சீ - குடும்பமே நாசமாகுது... உனக்கு பொம்மை வந்ததா பொம்மை...!
(என்று அடிக்கிறான்; குழந்தை அழுகிறது. இன்னொரு வீட்டுக்காரனை அடித்தபடி இழுத்து வருகிறார்கள். அவன் மனைவி பின்னால் அழுது கொண்டே வருகிறாள்.)
அ.மனைவி: அய்யா - அவரை விட்டு விடுங்கய்யா - உங்க உத்திரவுப்படி நாங்க இடத்தை காலி செய்து விடுகிறோம்.
த.வீ: சீ பேசிக் கொண்டே உயிரை வாங்காதே - இந்த தடியன் எங்களை எதிர்த்துப் பேசுகிறான்... அவ்வளவு திமிரா இவனுக்கு...?
(அடிக்கிறார்கள். அவன் உடம்பெல்லாம் ரத்தம் வழிகிறது.)
அடிபடும் மனிதன்: ஏனப்பா அடிக்கிறீர்கள்? எங்கள் பிழைப்பிலே மண்ணைப் போட்டு, இருக்கவும் இடமில்லாமல் வயிற்றிலே அடித்து விட்டீர்களே, இன்னுமா அடிக்க வேண்டும்! அய்யோ அம்மா!
(சவுக்கடிகள் விழுகின்றன. அவன் துவளுகிறான். அப்போது அல்லி - பொன்னழகன் தலைமையில் மக்கள் மன்றத் தொண்டர்கள் ஓடி வருகிறார்கள்)
அல்லி: நிறுத்துங்கள்! (அந்த மனிதனுக்கு நேராக நின்று சவுக்கைப் பிடித்துக் கொண்டு) எதிர்க்கத் தெரியாத ஏழையின் மீது வெறியாட்டம் நடத்தும் கோழைகளே! - நிறுத்துங்கள்... ஏன் அடிக்கிறீர்கள் அவரை?
த.வீர: நீ யார் காரணம் கேட்க? மணிமகுடபுரியின் ஆட்சி பீடம் கட்டளையிட்டிருக்கிறது!
அல்லி: முடியாது - மூர்க்கனே! ஆயிரம் குடிசைகளுக்குத் தீயிட்டு விட்டு ஆலயம் அமைக்கும் அதிமேதாவிகளின் படைத்தலைவனே! இருதயத்தை எடுத்தெறிந்து விட்ட உன் போன்றவர்களுக்குத்தான் மணிமகுடபுரி ராணுவத்திலே உயர்ந்த வேலையா? நீங்கள் என்ன மனிதர்கள்தானா; இயந்திரங்களா? ஏழைகளின் குடிசைகளைத்தான் காலி செய்ய வேண்டுமென்று உத்திரவே தவிர, அவர்களின் எலும்பு உடல்களையும் காலி செய்து, அந்த எலும்புக் கூடுகளுள்ளே ஆண்டவனுக்கு பூஜை விளக்கு ஏற்றி வைக்க வேண்டுமென்று, கூறியது யார்? யார் கூறியது?
த.வீர: குருநாதர் உத்திரவு! அமைச்சர் அங்கீகாரம்! அரசனின் கையொப்பம்! எங்கள் சவுக்கு நுனிகளுக்கு சரியான வேட்டை!
அல்லி: வேட்டையாடுவீர்கள், வீரர்களே, வேட்டையாடுவீர்கள் மக்கள், மாக்களாய் உள்ளவரையில்! கோழையின் கண்களில் அனலுக்குப் பதில் புனல் கிளம்பும் வரையில்! வேட்டையாடப்படும் மனித சமுதாயத்தின் இரும்புக் கை உங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உயரும் வரையில்! வேட்டையாடுவீர்கள்! நடமாடும் கோயில்களை அழித்து விட்டு, குருநாதனுக்காக ஒரு கோயில் கட்டும் குருடர்களே! குறைமதி கொண்ட வீணர்களே! நாட்டையான வழியின்றி, மக்களை வேட்டையாடிய நாசகாரர்கள் எல்லாம், சரித்திரப் பள்ளத்தாக்குகளிலே, கள்ளிக்காடுகளாய், முளைத்துப் போய் கிடக்கிறார்கள் என்பதை நெஞ்சிலே நிறுத்துங்கள்!
த.வீர: என்ன? ஆண்மை கொண்ட வீரர்களின் அணிவகுப்புக்கு எதிரே; ஒரு அற்பப் பெண்ணுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம்?
அல்லி: (சிரித்து) தவறான கணக்கு ராணுவத் தலைவரே, மிகத் தவறான கணக்கு! பெண்கள் வெறும் மஞ்சத்து ராணிகள் மட்டுமல்ல; நெஞ்சத்தில் புயலேற்று விட்டால், கொஞ்சத்தில் விடமாட்டோம்; உம் போன்றோர் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும்வரை! ஏணை ஆட்டமட்டும் கற்றதில்லை இந்தக் கை! வெறியர்களின் ஆணையை உடைக்கவும் கற்றிருக்கிறது! கலை காட்டி, நாட்டின் நிலை காட்டும் அழகு சுந்தரிகள் மட்டுமல்ல பெண்கள்; உன் போன்ற கொடியோர்கள் தலைகாட்டினால் அதை நொறுக்கி எறியவும் தெரிந்தவர்கள். “வீரப் பெண்மணிகள் ஒரு நாட்டின் வெற்றித் திருவிளக்குகள்” என்பதை பெண் என்றால் மாய மெனக் கூறும் பித்தனாம் உங்கள் குருநாதர்தான் மறப்பார் - வாள் பிடிக்கத் தெரிந்தவரே! நியாய மறக்காதீர்! வெட்கம்! வெட்கம்!
த.வீர: போதும் உன் பிரசங்கம்!
பொன்: நண்பனே - பிரசங்கமாகத்தான் தெரியும் - பின்னடைந்து போனவரின் புண்ணடைந்த நெஞ்சிலிருந்து புறப்படும் அழுகுரல் - பிரசங்கமாகத்தான் தெரியும் - யாருக்கு? காதுகளின் கர்ண பேரிகை கிழிந்து விட்ட காட்டு ராஜாக்களுக்கு! கனகமணிக் கட்டிலையும், அமுதமொழி மாதரையுமட்டுமே கண்டு கண்டு கண்களிலே சதை வளர்த்து விட்ட சல்லாப சுந்தரர்களுக்கு - ஏழைகளின் ஆவேசக் குரல், வீழ்ந்து போனவர்களின் உரிமை முழக்கம், பிரசங்கமாகத்தான் தெரியும்.
1. வீர: இவன் என்ன உளறுகிறான்! 2. வீர: இல்லை கத்துகிறான்!
பொன்: கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாதுதான் அப்பனே! பிரசங்கம் - உளறல் - கத்தல் - தூஷணை - இந்தக் கேடயங்களால் விடுதலைக் கணைகளை அதிக நாள் தடுத்துக் கொண்டிருக்க முடியாது.
வீர: சரி இப்போது எங்கே வந்தீர்கள்? என்ன செய்வதாக உத்தேசம்?
அல்லி: எங்கள் சொந்தக்காரர்களை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அப்பா, அம்மா அனைவரையும் காப்பாற்ற வந்தோம் - ஆயிரம் வீட்டுக்காரர்களை அவதியிலிருந்து விடுவிக்க வந்தோம் - சுருக்கமாகச் சொல்லட்டுமா? இந்த சுருண்டு போனவர் மீது பாயும் உங்கள் போன்ற குரப்புலிகளை தடுத்துநிறுத்த வந்தோம்.
வீர: அரசாங்கத்திற்கு எதிராக?
அல்லி: இல்லை.. அநியாயத்துக்கு எதிராக!
வீர: ஆண்டவனுக்கு விரோதமாக?
அல்லி: இல்லை.. அன்புத் தோழர்களாக!
வீர: எம்மைத் தடுக்க முடியாது உங்களால்! உம்... நடக்கட்டும்!
அல்லி: அதையும் பார்ப்போம்.
(என்று அல்லி கைகளை விரித்தபடி எதிரே நின்று)
அல்லி: எங்களையெல்லாம் பிணமாக்கி விட்டு அந்த ஏழைகளைத் துரத்துங்கள். உம்! நடத்துங்கள், நீங்கள் கைகொண்ட நல்ல காரியத்தை-
பொன்: வீரர்களே! திரும்பி விடுங்கள் - மன்னனிடம் சொல்லுங்கள் - மக்கள் போக மறுக்கிறார்கள் என்று! கொடிக்காலை அழித்து கோயில் எழுப்புவது - எவ்வளவு எதிர்ப்புக்குரிய செய்தி என்பதை அரசன் உணரட்டும் - ஆட்சி பீடம் உணரட்டும்!
த.வீர: முடியாது - ஏனப்பா நிற்கிறீர்கள்? (மற்ற வீரர்களை நோக்கி) இவர்களையும் அடித்துத் துரத்துங்கள்.
(பொன்னழகன் - அல்லி முதலியோர் அடி வாங்குகிறார்கள். அல்லிக்கு தலையிலே ரத்தம் வழிகிறது - இவைகளையெல்லாம் புதுமைப்பித்தன் ஒரு பக்கமிருந்து கவனிக்கிறான். அவன் கையிலே சிறிய துப்பாக்கி இருக்கிறது. ஒரு வீரன் பொன்னழகனை முதுகுப் பக்கமாக குத்த வருகிறான். அப்போது புதுமைப்பித்தன் அந்த வீரனைச் சுட்டு வீழ்த்தி பொன்னழகனைக் காப்பாற்றிவிட்டு மறைந்து விடுகிறான். வீரர்கள் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்த வீரனைத் தூக்குகிறார்கள். குழப்பம் அதிகமாகிறது. பொன்னழகனும், அல்லியும் வீரர்களால் அதிகமாகத் தாக்கப்பட்டு விழுகிறார்கள். குடிசைகள் நாசமாகின்றன. மக்கள் ஓட்டம், வீரர்களின் பயங்கரமான சிரிப்பு.)