பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 18 / 47

காட்சி 18

காட்சி 18

மூல ஸ்கேன் 76, 77, 78, 79, 80

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மக்கள் மன்றம் - ஒரு அறையில் பொன்னழகனும், கலாராணியும் இருக்கிறார்கள்.)

கலா: நான் இங்கிருந்து தப்பி ஓடிவிடுவேனா என்று சந்தேகப்படவே வேண்டாம். நான் இங்கிருக்கும் விஷயம் அப்பாவுக்குத் தெரிந்து அவர் என்னை மீட்டு விடுவாரோ என்று கவலைப்பட வேண்டாம் - நான் இங்கிருக்கவே விரும்புகிறேன்.

பொன்: நீ சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இதை நம்புவதற்கு இன்னும் பல நாட்கள் நகர வேண்டும். மன்றத்தில் உறுப்பினராக விரும்புகிறவர்களையே நாங்கள் எளிதில் நம்புவதில்லை. ஒரு மந்திரி மகளை நம்புவதென்றால்...

கலா: எத்தனையோ முறை கேட்டு விட்டேன். சரியான பதில் இல்லை - இப்போதாவது சொல்லுங்கள்! என்னை அபகரித்த காரணம் என்ன?

பொன்: அதுதான் சொன்னேனே; அரசனுக்கும் உனக்கும் திருமணம் நடக்கக் கூடாது என்றுதான்!...

கலா: சரி! அரசனை மணக்கவில்லை - பிறகு என்னகதி?

பொன்: இந்த அவசரத்தில் அதையும் தீர்மானித்து விட வேண்டுமா?

கலா: தீர்மானித்துக் கொள்வது, என் உள்ளத்திற்கு ஒரு திருப்தி.

பொன்: திருமண விஷயங்களைப் பெண்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

கலா: அதை ஆண்கள் எதிர்க்கக் கூடாது, இல்லையா?

பொன்: ஆமாம்!

கலா: ஒன்று கேட்கிறேன்... நான் இங்கேயே இருக்கிறேன்; திரும்ப அரண்மனைக்குப் போகவில்லை என்று சொல்கிறேன், அதற்கு என்ன காரணம்?

பொன்: மக்கள் இயக்கத்தின் மீது உனக்குப் பற்றுதல் இருப்பதாகச் சொன்னாயே; அதுதான் காரணம் - இன்னும் என்ன புதிய காரணம்?

கலா: தூரத்திலிருந்து பார்க்கும் போது சோலையின் பசுமை நிறைந்த அழகு, ஒரு இளம் பெண்ணை அருகே அழைக்கிறது - சோலைக்குள்ளே நுழைந்து விட்ட அந்தப் பெண்ணை அங்குள்ள ஒரு பொன்மலர் கவருகிறது! அந்த மலரை தன்னுடைய மெல்லிய கரங்களால் கொய்து, கூந்தலில் சூடிக் கொண்டு குதூகலமடைகிறாள் அவள்! இதிலிருந்து என்ன தெரிகிறது?

பொன்: பெண்களுக்கு மலரின் மீது ஆசை என்று தெரிகிறது...

கலா: அய்யோ.. எவ்வளவு பெரிய உதாரணத்தை சாதாரணமாக்கி விட்டீர்கள். அதாவது அந்தப் பெண்ணை அந்த சோலையும் கவருகிறது - அந்த ஒரு மலரும் கவருகிறது.

பொன்: ஆமாம்

கலா: சோலைக்கு வந்தவள், அந்த மலரை மட்டும் பறிப்பாளேன்?

பொன்: பிறகென்ன? இலை தழைகளையா பறிப்பாள்?

கலா: அதல்ல நான் சொல்வது.

பொன்: சொல்வதை சுற்றி வளைக்காமல் சொல்.

கலா: மக்கள் மன்றம் என்னைக் கவர்ந்த சோலை! அங்கே நான் சூடி மகிழ ஆசைப்படும் மலர்.. மலர்...

பொன்: (சந்தேகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டே பேச்சை மாற்றும் எண்ணத்துடன்) கலாராணி! மக்கள் மன்றத்தை தோட்டமென்று எண்ணிக் கொண்டால்தானே மலரை நினைத்து வாட்டமடைய வேண்டியிருக்கிறது... மக்கள் மன்றம் ஒரு பாசறை என்று எண்ணிக் கொள்! பாடி வீடு என்று கற்பனை செய்துகொள்.

கலா: அங்கேயும் போர்வாள் உண்டே; வீரப் பெண்களைக் கவர அதுபோதாதா?

பொன்: நீ குறிப்பிடும் போர் வாள் - மலர் - இவைகளுக்கெல்லாம் பொருள் என்ன?

கலா: போர்வாளுக்கும் மலருக்கும் நீங்காத தொடர்பு இருக்கிறதல்லவா?

பொன்: வெற்றி பெற்ற வாளுக்கு மலர்மாலை சூட்டுவார்கள் வீரர்கள்! அதைத்தானே சொல்லுகிறாய்.

கலா: ஆமாம் நீங்கள் போர் வாள்! நான்...

பொன்: கலாராணி! (வியப்புடன் பார்க்கிறான்)

கலா: நான் மலர் என்கிறேன்.

பொன்: தவறான நினைவு - மிகத் தவறான நினைவு - உன் கருத்தை உடனடியாக மாற்றிக் கொள்!

கலா: மாற்றிக் கொள்ள முடியாது! என்றைக்கு என் வீட்டில் உங்களைப் பார்த்தேனோ; என்றைக்கு உங்கள் ஆவேசம் நிறைந்த அழகு மொழிகளைக் கேட்டேனோ; என்றைக்கு மக்களின் நலத்திற்காக ஒலித்த அந்த வீரக் குரலை ரசித்தேனோ; அன்றுமுதல் அடிமையாகி விட்டேன்! அமைச்சர் மகள் என்பதை மறந்து விட்டேன் - கனவிலே - நனவிலே - கண்ணைத் திறந்தால் காணும் பொருள்களிலே - மூடினால் - இமைக் கதவுகளின் உட்புறத்திலே - தங்களது திருவுருவத்தையே கண்டேன்! மீண்டும் சந்திப்போமா என்று ஏங்கினேன் - சந்தித்தேன் - சந்தோஷத்தின் சிகரத்தில் நின்றேன். ஆனால், இன்று தங்களின் சொற்கள், என்னைத் துன்பக் கடலில் ஆழ்த்தியே தள்ளி விடுகின்றன. தயவு செய்து என்னைத் தவறாக எண்ணாதீர்கள். மந்திரி மகள் என்பதற்காக மட்டும் என்னை வெறுத்து விடாதீர்கள். உப்புக் கடலிலேதான் ஒளி முத்தும் இருக்கிறது! அதை மறந்து விடாதீர்கள்!

பொன்: வேறு ஏதாவது பேசு!

கலா: எதைப் பேசினாலும், எதை நினைத்தாலும் - சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவேன். நீங்கள் ஒரு வார்த்தை கூறிவிடுங்கள் போதும், நீங்கள் போர் வாள் - நான் மலர்!

பொன்: என் மனதைக் கவர்ந்த மலர், இந்த மன்றத்திலேயே இருக்கிறது! நீ குறிப்பிட்டாயே, அந்த லட்சணங்கள் அத்தனையும் பொருந்திய புரட்சி மலர்!

கலா: அல்லி மலரா?

பொன்: ஆம் - அல்லிதான்!

(அப்போது அல்லி வருகிறாள். கையில் ‘மணிமகுடம்’ ஏட்டுடன்)

அல்லி: புதிய பத்திரிகை பார்த்தீர்களா? “மணிமகுடம்” ஆகா! மக்களின் குரல் இதுதான்! புதுமைப்பித்தனின் எழுத்தா? பொங்கி வரும் புது வெள்ளமா? கட்டுரையா? கடல் அலையா? சொற் கூட்டமா? குறைக் காற்றா? என்றெல்லாம் புகழ்கிறார்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று!.. இனி குருநாதர் தொலைந்தார்! போலிப் பத்திரிகை தலையெடுக்க முடியாது! அமைச்சரின் அடக்கு முறை தூள்! தூள்!

பொன்: நீயே புகழ்ந்து கொண்டேயிருக்கிறாயே; இப்படிக் கொடேன் பத்திரிகையை!

அல்லி: (பத்திரிகையை கண்களில் ஒற்றிக் கொண்டபடி) ஆகாகா! நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டது இந்த லட்சிய ஏடு!

(என்றபடி பத்திரிகையை பொன்னழகனிடம் கொடுக்கிறாள், பின், கலாவைப் பார்த்து)

அல்லி: என்ன, கலாராணி! மன்றத்து வாசம் எப்படி இருக்கிறது? நீ இன்னும் உணவருந்தியிருக்க மாட்டாயே! வா! போகலாம்.

(கையைப்பிடித்து அழைக்கிறாள்)

கலா: இல்லை - பிறகு சாப்பிடுகிறேன் - நீ போ!

அல்லி: ஊஹூம் நீயும் வா!

(அழைத்துப் போகிறாள்.)

பொன்: (தனக்குள்ளாக) கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பார்கள்... அரசனிடமிருந்து இவளைப் பிரித்தால் இவள் நம்மை விட்டுப் பிரிய மாட்டேன் - என்கிறாள்! வேடிக்கையான பெண்கள்!

(‘மணிமகுடம்’ ஏட்டைப் புரட்டிப் படிக்கிறான்)