பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 17 / 47

காட்சி 17

காட்சி 17

மூல ஸ்கேன் 74, 75

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(வீதி ‘மணிமகுடம்’ என்ற பத்திரிகையை ஒருவன் கூவி விற்றுக் கொண்டு போகிறான். மக்கள் பரபரப்போடு வாங்குகிறார்கள்... கூடிக் கொண்டு ஒரு பத்திரிகையைப் படிக்கிறார்கள்)

ஒருவன் படிக்கிறான்.

“மணிமகுடம்”
“ஆசிரியர் - புதுமைப்பித்தன்”
“தின இதழ் - விலை ஒரு பணம்”
“கொடிக்காலை அழித்து கோயில் கட்ட கொற்றவன் கையெழுத்திட்டது உண்மைதானா?

ஆயிரம் குடிசைகளை அழித்து விட்டு, அங்கே ஆலயம் அமைக்கும் அக்கிரம திட்டத்திற்கு, அரசன் உடன்படவில்லை என்றும், கையெழுத்திட்டு விட்டார் என்று செய்தி பிரசுரித்தது அரசாங்க பிரச்சார பீடத்தின் பகிரங்க மோசடி என்றும் மணிமகுடத்தின் ஒற்றன் கூறுவதை, மந்திரியோ, குருநாதரோ, சீமான் சபையோ மறுக்க முடியுமா?”

(இந்தச் செய்தி படிப்பதை, அல்லி அங்கு நின்று மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள், அவர்களுக்கு ஒரே குதாகலம். அவர்களிடம் அல்லி, ஓடி வருதல்)

அல்லி: அய்யா... அய்யா... அந்தப் பத்திரிகையை எனக்குத் தருவீர்களா?

அவர்கள்: முடியாது.. முடியாது.. நாங்க படிக்கணும்.

(வேகமாகப் படித்தல்)

“குருநாதரின் கோரதாண்டவம் - ஒரு சிறு கதை”

(அல்லியைப் பார்க்காமலே, பதில் சொல்லி விட்டு, பத்திரிகையைப் படித்தவன், பிறகு அல்லியை நிமிர்ந்து பார்த்து விட்டு வியப்புடன்)

அவர்: அடடே-- நீங்களா... இந்தாங்க!

(பத்திரிகையைத் தருகிறான்.)

(தரும்போதே, படித்துக் கொண்டு தருகிறான்.)

“மந்திரிகுமாரி - ஒரு தொடர்கதை - மர்மங்கள் நிறைந்தது!”

அல்லி: சரி - சரி நீங்கள் படியுங்கள் - நான் வேறு வாங்கிக் கொள்கிறேன்.

(அவசரமாகச் செல்கிறாள் உற்சாகத்துடன்.)