காட்சி 16 / 47
காட்சி 16
காட்சி 16
மூல ஸ்கேன் 70, 71, 72, 73, 74
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மக்கள் மன்றம் - விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கவிஞர் எழுதிய மக்கள் விடுதலைப் பாட்டு ஒன்றை அல்லி பாடிக்கொண்டிருக்கிறாள், கவிஞர் அந்தப் பாடலை ரசிக்கிறார்)
புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம் ‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையை தவிர்ப்போம் உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ‘ஒரு பொருள் தனி’ என்னும் மனிதரைச் சிரிப்போம் இயற்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்” (புதிய) - பாரதிதாசன்
(பாட்டு முடிந்ததும்)
கவிஞர்: அல்லி! என்னதான் கருத்துக்களை அள்ளிக் கொட்டி கவிதை எழுதினாலும்; அது உணர்ச்சி வயப்பட்டவர்கள் வாயிலாக வெளிக் கிளம்பும்போது தான் எழுச்சி விருந்தாக, ஏழையர் நலிவு போக்கும் மருந்தாக பயன்பட முடிகிறது!
(அப்போது மன்றத்தின் கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது)
கவி: யார் பொன்னழகனாயிருக்கும்...
அல்லி: இல்லையே, அவர் காலையில்தானே வருவார் - ஒரு வேளை, புதுமைப்பித்தனாக...
கவி: அவன் ஏன் இங்கு வருகிறான் - இனிமேல் இங்கு வர அவனுக்குப் பைத்தியமா?
(கதவு மீண்டும் தட்டப்படுகிறது.)
கவி: அல்லி கதவைத் திறக்காதே... ஒரு வேளை அரசாங்க ஆட்களாக இருந்தால்...
அல்லி: யாராயிருந்தால் என்ன.. அதையும் பார்த்து விடுவோமே..
(அல்லி, கதவைத் திறக்கிறாள். புதுமைப்பித்தனும், கருப்பு ரோஜாவும், கலாராணியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். அல்லி, கவிஞர் இருவரும் திகைப்பு - புதுமைப்பித்தன் கலாராணியை அங்குள்ள ஒரு பலகையில் படுக்க வைக்கிறான். அவள் இன்னும் மயக்கம் தெளியவில்லை.)
கவி: யார் இது?
புது: கவிஞரே! இன்னுமா சந்தேகம் இவள்தான் மந்திரி குமாரி கலாராணி - நான் சதிகாரன் அல்ல என்று நிரூபிக்கப்பட்ட - அமைக்கப்பட்ட சோதனைக்குரிய பொருள்! அல்லி! இனியாவது என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்குமல்லவா?
அல்லி: மன்னித்து விடுங்கள்...நான் தங்களின் மீது சந்தேகப்பட்டேனா இல்லையா என்பது தங்களுக்கே தெரியும்.
கவி: புதுமைப் பித்தரே! மன்னிக்கப்பட வேண்டியது நான்தான்.
புது: உங்களை மன்னிக்க மாட்டேன் கவிஞரே - சரியான படி தண்டிக்கப் போகிறேன், நீங்கள், இனிமேல் நான் ஒன்றுக்கு இரண்டு கவிதையாவது எழுத வேண்டும்!
கவி: எழுச்சி மிகுந்த வாலிபரே! தூய்மையான செயலை, துரோகம் என்று கூறி விட்டேனே; அந்தக் கூற்று, என் இருதயத்தை துளைத்தபடியிருக்குமே - இனி எங்கே நான் கவிதை எழுதுவது...
புது: மக்கள் மன்றத்தின் நன்மைக்காக, நீங்கள் எச்சரிக்கையோடு நடந்து கொண்டதை நான் தவறு என்று கூற மாட்டேன். ஆனால் எனக்குத் தரப்பட்ட சோதனைதான் மிகக் கடுமையானது! அதையும் நிறைவேற்றி விட்டேன். என் மீது படிந்த மாசை அகற்றி விட்டேன் வருகிறேன்.
அல்லி: எங்கே போகிறீர்கள்?
புது: அல்லி! நான் எங்கே போவேன் - மணிமகுட புரியின் வாழ்வுக்காக எங்கெங்கு நின்று பணிபுரிய முடியுமோ - அங்கெல்லாம் போவேன் - மக்களுக்காக உழைப்பேன் - மதம், சமூகக் கட்டுப்பாடு, மன்னராட்சியின் கொடுமை, மந்திரியின் ஆதிபத்யம் - அத்தனையும் சாடுவேன்!
அல்லி: தனியொருவராக நின்றா?
புது: இல்லை - இந்த மக்கள் மன்றத்தின் கிளையாக நின்று! அல்லி! முடியாது என்று கூறுகிறாயா? நான் எடுத்துக் கொண்டிருக்கிற வேலை, நானே தனியாக செய்து முடிக்கக் கூடிய வேலைதான் - முன்பு கூறினேனே, ‘மணிமகுடம்’ பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்று; அந்த முயற்சியில் ஈடுபடப் போகிறேன். அந்த ஒரு ஏடு; நாடு முழுவதும் நமக்குத் தொண்டர்கள் இருப்பது போல! குருபீடம் - அதிகார பீடம் - அவைகளின் பிரச்சார பீடம் - இந்த மூன்று பீடங்களும் தாள் தூளாக நொறுங்கும் வரை, மணிமகுடபுரி மக்கள் கைக்கு மாறும்வரை, புதுமைப்பித்தன் மறைய மாட்டான்.
கவி: இதே வேலையைத்தானே மக்கள் மன்றமும் செய்கிறது. நீங்கள் மாத்திரம் பிரிந்து சென்று போராடுவானேன்?
புது: வேலை ஒன்றுதான் - ஆனால் முறை வேறு! இதோ இந்த மந்திரி குமாரி மயக்கம் தெளிந்தால்தான் எழுந்து நடமாடுவாள் என்கிறேன் நான்! ஆனால் மக்கள் மன்றமோ, மயக்கத்தைத் தெளிவிக்காமலே அவளைத் தூக்கி நிறுத்தினால் போதும் நடக்க ஆரம்பிப்பாள் என்கிறது!
கவி: புரியவில்லையே!
புது: மந்திரிகுமாரிக்குப் பதில் மணிமகுடபுரி என்று நினைத்துப் பாருங்கள்; புரியும்! மதவெறி, ஜாதிவெறி, கடவுள் வெறி, முதலிய மயக்கங்கள் தெளிந்த பிறகே, மக்களாட்சி நிலை பெறமுடியும். மணிமகுடத்தில் என்கிறேன் நான்.
கவி: நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்.
புது: ஆனால் சொல்வதில்லை - செயலில் காட்டுவதில்லை. நான் சொல்லப் போகிறேன். எழுதப் போகிறேன் - செயலில் காட்டப் போகிறேன் - மக்களை மக்களாட்சிக்குத் தயார் படுத்தப் போகிறேன். என் வேலைகளுக்கு மக்கள் மன்றத்தின் ஆதரவு இருந்தால் போதுமானது - வருகிறேன்.
அல்லி: நான் சொல்கிறேன் - தாங்கள் போகக் கூடாது; முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் - உங்களது கொள்கைகளை மக்கள் மன்றம் விரைவிலே ஏற்றுக் கொள்ள நான் பொறுப்பாளி!
புது: ஏற்றுக் கொண்டால் என்னைப்போல் மகிழ்ச்சி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது... அல்லி! மக்கள் மன்றத்திலே மாறுதல்களைச் செய்யுங்கள்..! அறிவு ஒளி பரப்புங்கள்! அறப்போர் நடத்துங்கள்! அத்தனைக்கும் நான் நடத்தும் ‘மணிமகுடம்’ பேராதரவு தரும்! என்னுடைய மணிமகுடம், மக்களுக்காகத்தான்! மக்களை திருத்துவதற்காகத்தான்! ஆனால் நான் இங்கு இருக்க வேண்டுமென்று மட்டும் விரும்பாதே அல்லி! ஒருமுறை சந்தேகத்திற்குரியவனாகி விட்டவன் நான் - இனியும் இங்கிருப்பது சரியல்ல...
அல்லி: எத்தனை முறை வேண்டுமானாலும் இதுதான் பதிலா?
புது: என்னை மன்னித்து விடு... நண்பர் பொன்னழகனிடம் என் முடிவுகளைச் சொல்லு - முடிந்தால் விரைவில் சந்திப்போம். கலாராணி, மயக்கம் தெளிந்து எழும்வரை யாரும் அவளை எழுப்ப வேண்டாம் - இன்னொன்று கலாராணிக்கும் அரசனுக்கும் திருமணம் நடத்த மந்திரி முயல்வது உண்மைதான். அந்தத் திருமணத்தை நடைபெறாமல் செய்ய இவளை இங்கேயே ரகசியமாகப் பூட்டி வையுங்கள் - ஜாக்கிரதை கவிஞரே வணக்கம்! அல்லி.. கதவைத் தாளிட்டுக் கொள்!
(அல்லியின் வாட்டம், புதுமைப்பித்தன் பின்னாலேயே அல்லி கதவைத் தாளிடச் செல்லுகிறாள்.)
புது: ஏன் அல்லி, இவ்வளவு வாட்டம்?
அல்லி: அல்லி எப்போது வாடும் என்று கவிதை எழுதுபவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
புது: அல்லி... (திரும்புகிறான்)
(அவள், சோகத்தோடு, முகத்தை மூடிக் கொண்டு திரும்பி வந்து விடுகிறாள். அவனும், கருப்பு ரோஜாவும் போய்விடுதல்.)