பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 15 / 47

காட்சி 15

காட்சி 15

மூல ஸ்கேன் 68, 69, 70

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரசன் மாளிகை - அரசன், அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறான், சிரித்தபடியே! உலகப்பன் ஓடிவந்து)

உலக: அரசே!

அரசன்: என்ன, முடிந்ததா? எங்கே கலாராணி?

உலக: வெற்றிகரமாக முடித்து விட்டேன்... அவளை மெதுவாக மயக்கி...

அரசன்: அடே! மயக்க மருந்தை அவளுக்குக் கொடுத்து விட்டாயா (கோபமாக)

உலக: இல்லை அரசே! அது வேறு, மயக்க மருந்து! (இளித்தபடி) உம் அவளைத் தந்திரமாக நான் அழைத்துக் கொண்டு போய் விடவே, நமது ஆட்கள் கலாராணிக்கு மயக்க மருந்து காட்டி, கலாராணியை பளிங்கு மண்டபத்தில் சேர்த்து விட்டார்கள்.. கலாராணிக்கு இன்னும் பிரக்ஞை வரவில்லை!

அரசன்: சரி, புறப்படு!.. உலகப்பா! உடைகளை மாற்றிக் கொள். நானும் இதோ வந்து விடுகிறேன்...

(என்று கூறிவிட்டு, அரசன் உள்ளே செல்லுகிறான். உலகப்பன், மெய்க்காப்பாளனாக உடைகளைக் கழற்றி விட்டு, வேறு உடைகளைப் போட்டுக் கொண்டு கருப்பு ரோஜாவாக மாறி நிற்கிறான். உள்ளே சென்ற அரசன், வெளியே வருகிறான், புதுமைப்பித்தனாக!)

புது: உலகப்பா...

க.ரோ: அரசே!

புது: இப்போது என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?

க.ரோ: எனக்கென்ன தெரியும்? நீங்கள் செய்வது எல்லாமே புதுமையாகத்தானே இருக்கிறது?

புது: அதனால்தான் புதுமைப்பித்தன் என்று பெயர் வைத்துக் கொண்டேன்.

க.ரோ: அதோட விட்டீங்களா? (தன்னைக் காட்டி இந்த உலகத்தையுமல்லவா கருப்பு ரோஜாவாக மாற்றி விட்டீர்கள்.)

புது: (சிரித்தபடி) கருப்பு ரோஜா! வா..வா!.. நேரமாகிறது. கலாராணி மயக்கம் தெளிவதற்குள், காரியம் நடக்க வேண்டும்.

(இருவரும் ஒளிந்து ஒளிந்து வெளியேறுகிறார்கள்.)