காட்சி 14 / 47
காட்சி 14
காட்சி 14
மூல ஸ்கேன் 65, 66, 67, 68
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(தோட்டத்தில் வஞ்சி மாலை கட்டிக் கொண்டிருக்கிறாள்)
“யார் அது?”
(என்று கேட்டுக் கொண்டே, மெய்க்காப்பாளன் உலகப்பன் அங்கு வருகிறான். திடுக்கிட்ட வஞ்சி பேசாமல் நிற்க)
உலக: இந்த நேரத்திலே இங்கே யார் என்று கேட்டால் பதில் சொன்னால் என்ன? ஊமையா... செவிடா... பேயா... பிசாசா?
வஞ்சி: (கோபமாக) நிற்பது கண் தெரியவில்லையா?
உலக: நீ என்ன நிலவா... இருட்டிலேயும் தெரிவதற்கு?
வஞ்சி: சரிதான்... காக்கை, கருங்குயிலைப் பழித்த கதைத்தான் இது!... மழை காலத்து மேகம் மாதிரி இருந்து கொண்டு, நையாண்டி செய்ய வந்து விட்டார் என்னை!.... நீலமேக சாமளவண்ணரே!
உலக: ஆகா! என் நெருப்பில் குளித்த நீலோத்பல மலரே!
வஞ்சி: நிறுத்தும் நான் யார் தெரியுமா?
உலக: பேயுமல்ல - பிசாசுமல்ல - ஊமையுமல்ல - செவிடுமல்ல- உல்லாசி! ஊர்வசி!
வஞ்சி: மரியாதை வேண்டும். பேச்சில் - நான் மந்திரி குமாரியின் தோழி! நீர் மெய்க்காப்பாளன்!
உலக: மெய்க்காப்பாளன் என்றால் உனக்கு அர்த்தம் தெரியுமா? உண்மையைக் காப்பாற்றுகிறவன் - அதாவது அரசிடம் உண்மையோடு பழகுகிறவன் - அந்தரங்க செயலாளன் - ரகசிய ஊழியன்.
வஞ்சி: அவ்வளவுதானா?
உலக: இன்னும் இருக்கிறது.. மெய் என்றால் உடல் என்றும் கூறுவார்கள்! உன்னைப் போன்ற அழகியின் உடலை பத்திரமாகக் காக்கக் கூடியவன்.
வஞ்சி: மெய்க்காப்பாளர் - நான் சொல்லட்டுமா புதுப் பொருள்?
உலக: சொல்லு!
வஞ்சி: ஆபத்து வரும் போது மெய்யைத் தான் காப்பாற்றிக் கொள்ள தெரியுமே, தவிர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவர், சரிதானா?
உலக: நீயும் ஒரு புலவிதான் போலும்!
வஞ்சி: அப்படியானால் நீர் புலவரோ?
உலக: ஆமாம், மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை எழுதுவேன்!
வஞ்சி: எங்கே இப்போது எழுதும், மூச்சு விடுவதற்குள், முன்னூறு கவிதை...
உலக: அடடா... இது புரியவில்லையா? மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை
வஞ்சி: ஆகா.. நல்ல கருத்து...குப்பை மேட்டிலே குண்டுமணிபோல! யாரும் இதுவரை சொன்னதேயில்லை.
உலக: இதுபோல இன்னும் பல குண்டுமணிகளை நீ பொறுக்க வேண்டுமானால்...
வஞ்சி: என்ன செய்ய வேண்டும்?
உலக: ஒரு தாலி செய்ய வேண்டும்.
வஞ்சி: என்னா, தாலியா?
உலக: ஏன், இதுகூட வேண்டாமா? சரி...
வஞ்சி: ஓகோ! சரிதான்! அய்யா மெய்க்காப்பாளரே! இரவு நேரத்தில், ஒரு நந்தவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறையா?”
உலக: பிறகென்ன? பகல் நேரத்தில் ஒரு பாலைவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறை என்கிறாயா நீ?
வஞ்சி: உமது உள்ளம்; கண்ணாடி போல எனக்குத் தெரிகிறது...
உலக: (நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு) இந்தக் கண்ணாடியிலே உன் முகத்தைப் பார்த்துக் கொள் சீக்கிரம் சிங்காரித்துக்கொள் - கண்ணுக்கு மை எழுதிக் கொள்! பொட்டு வை! பொலிவு பெறும்!
(வஞ்சி அவன் நெஞ்சுக்கு நேரே முகத்தை நீட்டி, கண்ணாடியில் பார்ப்பது போல நடித்துவிட்டு)
வஞ்சி: அடடே! இது ரசமில்லாத கண்ணாடி!
உலக: நீதானே காதல் ரசம் பூச வேண்டும்...
(வஞ்சி, வெட்கப்பட்டு சிரிக்கிறாள்)
உலக: ஆகா! இவைகள் என்ன முத்துப் பற்களா... முல்லைச் சரமா? (அவளைத் தொடுகிறான்)
வஞ்சி: இதோ பாருங்கள்... இது மாதிரி பழைய வர்ணனைகள் எனக்குப் பிடிக்காது...
உலக: வா...! எல்லாம் புதிதாகவே சொல்லுகிறேன்.
(இழுக்கிறான்)
வஞ்சி: எங்கே?
உலக: அதோ அந்த மேடைக்கு... இங்கு யாராவது வருவார்கள்...
வஞ்சி: அய்யோ, கலாராணி தேடுவாளே..
உலக: தேடட்டுமே! நாமென்ன தேவலோகத்திற்கா போகிறோம். தேவலோகத்தைத்தான் இங்கு வரவழைக்கப் போகிறோம்.. வா..வா!
(இருவரும் போய்விடவே - சிறிது நேரத்திற்கெல்லாம் கலாராணி அங்கு வந்து!)
“வஞ்சி! வஞ்சி” (என்று கூப்பிடுகிறாள்)
(வஞ்சியைக் காணவில்லை. மீண்டும் ‘வஞ்சி’ என்று உரக்கக் கூப்பிடுகிறாள். அப்போது, இரண்டு மூன்று கரிய உருவங்கள், அவள் மீது பாய்ந்து - அவள் முகத்திலே மயக்க மருந்தைக் காட்டி அவளைத் தூக்கிக் கொண்டு போய் விடுகின்றன. அவள் கொண்டு செல்லப்படுவதை அங்கு வரும் வஞ்சி, பார்த்து விடுகிறாள். அலறுகிறாள் வஞ்சி)
(“கலா! கலா!” என்று கத்துகிறாள். பலனில்லை. கலாராணி, வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு விடுகிறாள்)