பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 13 / 47

காட்சி 13

காட்சி 13

மூல ஸ்கேன் 60, 61, 62, 63, 64, 65

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரசன் மாளிகை, மெய்க்காப்பாளன் உலவிக் கொண்டிருக்கிறான், அங்கே கலாராணி வருகிறாள்)

மெய்: வாருங்கள், என்ன வேண்டும்... தங்களுக்கு?

கலா: அரசரைப் பார்க்க வேண்டும்... இப்போது பார்க்க முடியுமா என்று...

மெய்: இருங்கள்.. போய் தெரிவிக்கிறேன்...

(கலாராணி உட்கார்ந்திருக்கிறாள்... அரசன் வர நேரமாகிறது - மெய்க்காப்பாளன் வருகிறான், திரை விலகுகிறது)

மெய்: சந்திக்க சம்மதம் தெரிவித்தார்... இப்போது வருவார்.

(மெய்க்காப்பாளன் உள்ளே போகிறான். கலாராணி நீண்ட நேரம் காத்திருக்கிறாள். எழுந்து உலாவுகிறாள். அங்குள்ள சித்திரங்களை ரசிக்கிறாள். அரசன் வரும் வாயிற்புறத்தின் திரையை நோக்கி நிற்கிறாள். மீண்டும் உட்காருகிறாள். கடைசியில் வாயிற்புறத்தில் திரை விலகுகிறது. அரசன் வருகிறான். கலாராணி மரியாதையுடன் வணங்குகிறாள்)

அரசன்: கலாராணி நலந்தானே?

கலா: தாங்கள் ஆசியால் நலமேதான்.

அரசன்: இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாக என்னைப் பார்க்க வேண்டிய காரணம்?

கலா: தனித்து சில விஷயங்கள் பேச வேண்டும்.

அரசன்: (மெய்க்காப்பாளனைப் பார்த்து) உலகப்பா! நீ கொஞ்சம் ஒதுங்கி இரு!

(மெய்க்காப்பாளன் அகலுகிறான்)

அரசன்: கலாராணி! இனி தாராளமாகப் பேசலாம்!

கலா: என்னுடைய திருமணத்தைப் பற்றி ஒரு முடிவு செய்வதற்காக இங்கு வந்தேன்.

அரசன்: புரியும்படிச் சொல்!

கலா: ஒன்று கேட்கிறேன்; ஆத்திரப்படக் கூடாது!

அரசன்: கேள்!

கலா: தாங்கள் என்னை விரும்புகிறீர்களா?

அரசன்: விரும்புகிறேன்.

கலா: (திகைப்புடன்) உண்மையாகவா?

அரசன்: ஏன் சந்தேகம்?

கலா: நீங்கள் என்னை விரும்புகிறீர்களா?

அரசன்: ஆம்

கலா: (துடிப்புடன்) என்னை நேசிக்கிறீர்களா?

அரசன்: ஆமாம்.

கலா: நான் உங்களை விரும்பவில்லை.

அரசன்: கவலையில்லை! நான் விரும்புகிறேன், நேசிக்கிறேன்.

கலா: நான் மறுத்த பிறகுமா?

அரசன்: ஆமாம்.

கலா: நான் வேறு ஆடவரை நேசிக்கிறேன்.

அரசன்: என்னைப் போல் அவன் உன்னை நேசிக்க மாட்டான் - விரும்ப மாட்டான்.

கலா: நீங்கள் என்னை விரும்பவும் கூடாது - நேசிக்கவும் கூடாது!

அரசன்: பொங்கி வரும் வெள்ளமல்ல எண்ணம்; அணைபோட்டுத் தடுக்க! ஒரு அமைச்சரின் மகளை அரசன் ஏன் விரும்பக் கூடாது!

கலா: ஆ!.. (திகைப்பு)

அரசன்: ஒரு தங்கையை ஒரு அண்ணன், ஏன் சகோதர பாசத்தோடு நேசிக்கக் கூடாது!

கலா: (வியப்புடன்) அரசே!

அரசன்: கலாராணி, மணிமகுடபுரி மன்னவனின் தங்கைகளில் ஒருத்தி!

கலா: அரசே! என்னை மன்னித்து விடுங்கள்!

(காலில் விழுகிறாள்)

அரசன்: எழுந்திரு! அமைச்சர்தான் அவசரக்காரர் என்றால், அவர் மகள் நீயும் அப்படியே இருக்கிறாய்!

கலா: தாங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அப்பாதான் என்னிடம் சொன்னார்.

அரசன்: எனக்கு ஏன் இப்போது திருமணம்? அதுவும் அமைச்சர் மகளை திருமணம் செய்து கொண்டால், வெறும் வாயை மெல்லும் புரட்சிக்காரர்களுக்கு கொஞ்சம் அவலும் அள்ளிப் போட்ட மாதிரிதான்!

கலா: நான் விடைபெற்றுக் கொள்கிறேன், மன்னவா!

அரசன்: நில் கலாராணி! வேறொருவனை விரும்புவதாகச் சொன்னாயே; யார் அவர்?

(கலாராணி தலை குனிந்து நிற்கிறாள்)

அரசன்: வெட்கம் தேவையில்லை. உன் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்க ரீதியாகவும் அக்கரை காட்டப்படும்! அமைச்சர் புதல்வியல்லவா நீ! அவன் யார்?

கலா: அவர் பெயரைச் சொல்லவே பெரிய குற்றம்.

அரசன்: கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்ற கருத்தின்படியா?

கலா: இல்லை. அவர் ஒரு அரசாங்க எதிரி! அவர் பெயரை இங்கு சொன்னால்...

அரசன்: பரவாயில்லை.. பயப்படாதே சொல்!

கலா: அவர்... (தயங்குகிறாள்)

அரசன்: சொல்! எதிரியாய் இருந்தால் என்ன? மாற்றான் தோட்டத்திலே கூட மணோரஞ்சிதம் இருக்கலாம்.

கலா: அந்த மணோரஞ்சிதத்தை நான் குறிப்பிட்டால், அதிலே பூநாகம் இருக்கிறது என்றுகூட தாங்கள் தடுக்கலாமல்லவா?

அரசன்: பூநாகம் இருந்தால் தடுக்க வேண்டியதுதான் முறை...

கலா: பூநாகமுள்ள மலரல்ல; நான் குறிப்பிடும் பொன்னழகன்...

அரசன்: (திடுக்கிட்டு திகைப்புடன்) பொன்னழகனா?... அவனையா நீ காதலிக்கிறாய்? எதிரிகளின் தலைவன்... எந்த நேரத்திலும் இந்த நாட்டு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று கங்கணம் கட்டியிருப்பவன்! மக்கள் மன்றம் என்னும் ஆட்டு மந்தைக்கு அதிபதி! குருநாதர் - அமைச்சர் - கொலுமண்டபம் - அத்தனைக்கும் பகைவன்! - அந்தப் பகைவனின் பிரியை நீ! சட்டம் அனுமதிக்காது!

கலா: காதலைத் தடுக்கவும் சட்டமா?

அரசன்: ஆமாம்!.. காதலால் சம உரிமை என்ற பயிருக்கு வித்திடப்படுகிறது! அந்தஸ்து மாளிகை, அனாதைக் குடிசையைக் காதலிப்பதால் - சமத்துவம் என்ற குழந்தை பிறந்துவிட எதுவாகிறது! சம உரிமை - சமத்துவம் இதுபோன்ற கொடிய சம்பவங்கள் எதுவும் நிகழா வண்ணம் சீமான்கள் சபை சட்ட மூலம் கண்காணித்து வருகிறது - சம உரிமையும், சமத்துவமும் ஏற்பட்டுவிட்டால், பிறகு குருநாதருக்கு வேலை என்ன? ஆயிரக்கணக்கான பவுன்கள் செலவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள ராணுவப் படைக்குத்தான் வேலை என்ன இருக்கிறது? குருநாதர் மதிப்பிழப்பார் - கொலு மண்டபம் சோபை இழக்கும்!

கலா: அப்படியானால், என் வாழ்வு பாழாகத்தான் வேண்டுமா?

அரசன்: பரிதாபத்துக்குரிய சகோதரி... அந்தப் பொன்னழகனை நீ எங்கே பார்த்தாய்? எப்படி உங்களிடையே சந்திப்பு ஏற்பட்டது? (ஆச்சரியமாக)

கலா: அவரை நான் சந்தித்துப் பேசியதில்லை. அவர் என்னை விரும்புகிறாரா - அதுவும் தெரியாது! ஒருநாள் அவர், அப்பாவிடம் நாட்டு நிலை குறித்து விவாதிக்க வீட்டுக்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் அப்பாவுடன்! அன்று கண்டேன் அவருடைய லட்சிய இருதயம் என்னைக் கவர்ந்து விட்டது!

அரசன்: லட்சிய இருதயம் - அரசாங்கத்திற்கு விரோதமாக அமைச்சர் வீட்டிலேயே ஆபத்து அரும்புகிறது! (உலவிக் கொண்டே சிந்திக்கிறான்.) இதை நான் அனுமதிக்க முடியாது!... உடனே தடுக்கிறேன்! (உலவுகிறான்)

கலா: அரசே...!

அரசன்: இங்கு நிற்காதே.. போய்விடு!

(அரசன் உள்ளே போய்விடவே கலாராணியும் வெளியேறுகிறாள், கலக்கத்துடன் மீண்டும் அரசன் வெளியே வந்து)

அரசன்: உலகப்பா!

உலக: (வந்தபடி) இதோ இருக்கிறேன்.

அரசன்: உலகம்! எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாயா?

உலக: ஆமாம்!

அரசன்: உடனே போ! கலாராணி... தோட்டத்து வழியாகத்தான் போவாள் - நமது ஆட்களை விட்டு அவளை தூக்கிவரச் சொல்!

உலக: உத்திரவு!

அரசன்: மயக்க மருந்தையும் எடுத்துப் போ! நந்தவனத்துப் பளிங்கு மண்டபத்திலே அவளை வைத்து விட்டு உடனே வந்து என்னிடம் சொல், ஓடு!

(உலகப்பன் ஓடுகிறான், அரசன் யோசித்தபடி உலவுகிறான்)