காட்சி 12 / 47
காட்சி 12
காட்சி 12
மூல ஸ்கேன் 58, 59
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரண்மனையின் பின்புறமுள்ள தோட்டம் - இரவு நேரம் - கலாராணியும் வஞ்சியும் அந்த வழியே வருதல்)
கலா: வஞ்சி! நீ இங்கேயே இரு. நான் போய் அரசரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
வஞ்சி: நான் காத்துக் கொண்டிருப்பேனே என்ற கவலையில், சீக்கிரம் ஓடிவர வேண்டாம், பேச்சைக் கூட முடிக்காமல்! நான், இங்கே - மயில், குயில், மாம்பழம், பூஞ்செடி, இவைகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன்; நீ நிதானமாக நல்ல முடிவோடு வா!
கலா: நல்ல முடிவுடன்தான் போகிறேன் - நல்ல முடிவோடு வரமாட்டேனா?
வஞ்சி: ஆமாம் அதை மறந்து விடாதே; விஸ்வாமித்திரனை வென்ற மேனகையைப் போல நீயும் வெற்றி புன்னகையோடு திரும்பி வா - உனக்கு அணிவிக்க, நான் இங்கே மலர் பறித்து வெற்றிமாலை தயாரிக்கிறேன். நீ வரும் வரை எனக்கும் வேலை வேண்டுமே - கலா! போனவுடனே அரசிடம் சகஜமாகப் பேசி விடாதே! முதலில் அரசருக்குரிய மரியாதையோடு வணங்கு! வணங்கும் போதே கண்களால் அவரை வளைத்து விடு! உன் காந்தள் விரல்களின் அழகு தெரியும்படி, கைகூப்பி வணங்கு! இரவு நேரம் முகம் தெரியாத முறையில் நின்று விடாதே, முழுமதி போன்ற இந்த முகம் பிரகாசமாகத் தெரியக் கூடிய விளக்கின் அருகே நின்று கொண்டுபேசு!... இடையிடையே பார்வையை வீசு! பிறகு அரசர் உனக்குத் தூசு!
கலா: நீ, பாடம் சொல்லித் தருகிறாயா?
வஞ்சி: காதல் அரிச்சுவடி கலா! ஏன் சொல்லாமலே உனக்குத் தெரியுமா?
கலா: எனக்கு ஒரு சுவடியும் வேண்டாம் - நீ எங்கும் போய் விடாதே - இரு, இதோ வந்து விடுகிறேன்.
(கலா போகிறாள் - வஞ்சி, மலர் பறிக்கிறாள், மாலை தொடுக்க)