காட்சி 11 / 47
காட்சி 11
காட்சி 11
மூல ஸ்கேன் 55, 56, 57, 58
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அமைச்சர் வீடு - கலாராணியின் அறை - கலாராணி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். இனிமையாகப் பாடிக் கொண்டு! அப்போது அங்கே வஞ்சி வருகிறாள்)
வஞ்சி: சபாஷ்.. சபாஷ்...
கலா: எப்படி நடனம்?
வஞ்சி: கலாராணியின் உடல் நெளிவது போல் கருநாகமும் நெளியாது.
கலா: போதுமடி, கவிதா சிரோண்மணி! உன் உதாரணங்களை மூட்டை கட்டிக் கொள்.. ஏறாதே!
வஞ்சி: பிறகென்ன கலா! புதிய உதாரணமாக என்ன சொல்வது? எல்லாம் சொல்லிச் சொல்லி புளித்துப் போய்விட்டது.
கலா: அதற்காக, கரும்பாம்பு என்கிறாயா என்னை..?
வஞ்சி: நெளிவைச் சொல்லுகிறேன்.
கலா: ஏன் முல்லைக்கொடி என்று சொன்னால்...?
வஞ்: மூவாயிரம் வருஷமாக அதைத்தான் சொல்கிறார்கள்... அதுவுமல்லாமல் முல்லைக்கொடி ஒரே இடத்தில் நின்று தான் காற்றில் ஆடும். நெளியும்! பாம்போ பல இடங்களில் ஆடும் -நெளியும் நகரும்...
கலா: சீ!
வஞ்: சீறும்..!
கலா: (சிரித்தபடி) விஷமக்காரியடி நீ.. வஞ்சி! என்னுடைய ஆட்டத்தை அவர் பார்த்தால்...?
வஞ்: தன் தோட்டத்து மயிலாக்கிக் கொள்வார்!
கலா: ஆடல் பாடல்களில், அவர் ரசிகரோ இல்லையோ தெரியாது...
வஞ்சி: ரசிகர் இல்லாவிட்டால் ரசிகராக ஆக்குவது! அதோ - தாமரைத் தடாகத்திலே இரண்டு மீன்கள் துள்ளுகின்றன. அவைகளுக்கு அவர் தூண்டில் போடாமல் இருப்பாரா?
கலா: என்னடி பிதற்றல்? தாமரைத் தடாகமாவது,... இரண்டு மீனாவது?
வஞ்: ஆமாம் உன் முகத்தையும், முகத்திலிரண்டு கண்களையும் சொன்னேன்... கவிதை நடையில்!
கலா: அடா அடா...ஏய் வஞ்சி! உன் கவிதைத் தலைவலியைக் கொஞ்சம் நிறுத்தேன்!
வஞ்சி: நிறுத்திவிட்டு, வேறு எதை ஆரம்பிப்பது?
கலா: வஞ்சி! அவரும் நானும் சந்திக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறோம்; இருவரும் இரு துருவங்கள்...
வஞ்சி: சந்திப்பதா பெரிய காரியம்? இப்போது வந்தாலும் அவரை சந்திக்கலாம்.
கலா: எங்கே?
வஞ்: அரண்மனையில்...
கலா: அரசரைச் சொல்லுகிறாயா (கோபமாக)
வஞ்: நீ யாரைச் சொல்லுகிறாய்...
கலா: நான் அவரைச் சொல்லுகிறேன்...
வஞ்: அவர்.. அவர் நல்ல அவர்! ‘கலாராணி! உன்னுடைய அந்த ‘அவர்’ யார் என்றுதான் என்னிடம் சொல்லவேன்...
கலா: இன்று, அவர் யார் என்று உன்னிடம் சொல்லத்தான் போகிறேன்.
வஞ்: சொல்லு!
கலா: சொல்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை - நான் அவர் யார் என்று சொன்ன பிறகு, நீ மறுபடியும் அரசரைப் பற்றிய பேச்சை என்னிடம் எடுக்கவே கூடாது! நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்; எனக்கு அரசர் மீது சிறிதும் விருப்பமில்லை.
(அமைச்சர் குணசீலர் வந்து கொண்டே)
குண: ஏனம்மா, விருப்பமில்லை? அரசன் என்ன அவ்வளவு கோணமா? அலங்கோல புருஷனா?
கலா: அப்பா.. (ஏதோ சொல்ல முயல)
குண: நானும் எத்தனையோ நாட்களாக முயலுகிறேன் - முயலுகிறேன் - நீ என் ஆசையையே அலட்சியப்படுத்துகிறாய் கலாராணி! உன் தந்தையின் அதிகாரமும், இந்த மந்திரி பதவியும் நிலைக்க வேண்டுமானால் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும்?
கலா: முடியாதப்பா...
குண: கட்டளையிடுகிறேன் அடங்கி நட! கலாராணி! வருத்தப்படாதே! இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் - அரசன், என்னையும் மீறுகிற ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அரசனுக்கும் நமக்கும் உறவு ஏற்பட்டு விட்டால் - பிறகு யார் தயவும் எனக்குத் தேவையில்லை. இப்போது இந்த மந்திரி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, சீமான்களுக்கு தலையாட்ட வேண்டியிருக்கிறது - குருநாதருக்கு கொடிபிடிக்க வேண்டியிருக்கிறது - பத்திரிகாசிரியனிடம் பல் இளிக்க வேண்டியிருக்கிறது!
அரசன் என்னுடைய மருமகன் ஆகிவிட்டால் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லையல்லவா நான்? பிறகு சீமான்களும் குருநாதரும் என் காலடியில் தானே கிடப்பார்கள்?
கலா: ஏன் அப்பா ஆயிரம் விளக்கம்? மக்களின் மதிப்பைப் பெற்று வாழ வழியில்லை; மக்களை வைத்து மந்திரி பதவியை காப்பாற்றிக் கொள்ள திட்டம் போட்டு விட்டீர்கள்.. அவ்வளவுதான்!
குண: (கோபமாக) கலாராணி! என்ன சொன்னாய்...?
கலா: பாடையில் ஏறும் வரையில் தனியாக உங்கள் பதவி மோகத்துக்கு, நான் பலியாக வேண்டும் - சரி, நான் தயாராக இருக்கிறேன், அரசருக்கு சம்மதம்தானா?
குண: அவருக்கு எண்ணமில்லாமலா என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘கலாராணி செளக்கியமா? கலாராணி செளக்கியமா?’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நீ போய் அவரைப் பாரம்மா - எல்லாம் நன்மையாக முடியும்.
கலா: இதோ போகிறேன் - வஞ்சி நீயும் வா என்னோடு அரண்மனைக்கு! (படபடப்போடு அழைக்கிறாள்)
குண: போய்வா மகளே; பூரிப்போடு போய்வா!