காட்சி 10 / 47
காட்சி 10
காட்சி 10
மூல ஸ்கேன் 50, 51, 52, 53, 54, 55
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மக்கள் மன்றம் - பொன்னழகன், கவிஞர், அல்லி, முதலியோர்)
பொன்: அமைச்சன் தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொள்கிறான். தீர்மானத்திலே அரசன் கையெழுத்து போட்டு விட்டான் - நாளை, அமைச்சன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் - என்ற செய்தியும் வரப் போகிறது! அமைச்சனுக்கும் அரசனுக்கும் சம்மந்தி உறவும் ஏற்பட்டு விட்டால், பிறகு அமைச்சன் வைத்ததுதான் சட்டம்! மணிமகுடபுரி குணசீலனின் ஏகபோக சொத்தாகி விடும்!.... தேவாலயத் தீர்மானத்தை விட்டது போலில்லாமல், அந்தத் திருமணத்தையாவது உடனே தடுத்தாக வேண்டும்!
கவிஞர்: திருமணத்தைத் தடுக்க இரண்டு வழிதான் உண்டு! ஒன்று - அரசனை அபகரிக்க வேண்டும் - அல்லது அமைச்சன் மகள் கலாராணியை அபகரிக்க வேண்டும்.
பொன்: அரசனை மறைப்பதை விட, கலாராணியை மறைப்பது சுலபம்! - ஆம்! அதைத்தான் செய்ய வேண்டும். தோழர்களே! கலாராணியைத் தூக்கிவர யார் முன் வருகிறீர்கள்? நீங்களே சொல்லுகிறீர்களா - அல்லது வழக்கம் போல் சீட்டு குலுக்கிப் போடலாமா?
கவிஞர்: அதுவே நல்ல முறை! சீட்டே போடலாம் - சீட்டு எழுதுங்கள்!
(அப்போது புதுமைப் பித்தன் வருகிறான். மன்றத்தில் ஒரே அமைதி நிலவுகிறது - யாரும் அவனை வரவேற்கவில்லை. புதுமைப்பித்தனுடன் கருப்பு ரோஜாவும் வருகிறான். இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு விழித்து, கடைசியாக)
புது: என்ன, ஒரே அமைதி நிலவுகிறது? அரசன் கையெழுத்துப் போட்டு விட்டான், என்ற செய்தியை பார்த்து விட்டீர்களாக்கும்! எனக்கென்னவோ அந்த செய்தியில் நம்பிக்கையில்லை - செய்தியைப் படித்தீர்களா? இதோ - (பத்திரிகையைப் புரட்டி), “சீமான்கள் சபைத் தீர்மானத்தில் அரசர் கையெழுத்துப் போட்டு விட்டார்”, என்று இருக்கிறதே தவிர கோயில் கட்டும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டாரா, இல்லையா என்று தெரியவில்லை - அமைச்சரும் குருநாதரும், ஆசிரியர் அரிஹரநாதரும் செய்த மோசடிதான் இது! இதை நம்ப வேண்டாம் - நம்மிடமும் இந்நேரம் ஒரு பத்திரிகை இருந்தால், இப்போதே மறுப்பு எழுதி உண்மையை நிலை நாட்டியிருக்கலாம் - என்ன அல்லி! மக்கள் மன்றத்தின் சார்பாக, ‘மணிமகுடம்’ என்று ஒரு தினசரி இதழ் துவங்கலாமா?
பொன்: ஏடு துவங்குவது பிறகு இருக்கட்டும் நண்பரே! நீர் முதலில் மக்கள் மன்றத்தின் அங்கத்தினர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலைமை வந்திருக்கிறது; இப்போது!
புது: என்ன?
பொன்: உம் மீது, மன்ற உறுப்பினர்களுக்கு சந்தேகம் பிறந்திருக்கிறது!
புது: சந்தேகமா? அய்யோ அது நமது சங்கத்தை பிளவுபடுத்திவிடுமே!
பொன்: சந்தேகத்தை விட சதிக் குணம் பயங்கரமானது! அது சங்கத்தின் பலத்தையே சல்லடைக் கண்களாகத் துளைத்துவிடும்!
புது: தவறான எண்ணம் - தகாது நண்பரே தகாது! நான் சந்தேகத்திற்குரியவனே அல்ல! சதிகாரனல்ல! மணிமகுடபுரி மக்களின் மேன்மைக்காக, என் உயிர் துறவும் தயாராயிருக்கிறேன், தாயின் மேல் ஆணை! தந்தை மேலாணை! தூய என் மொழியின் மீது ஆணை! - என்னை நம்புங்கள் - நான் குற்றமற்றவன்! கொள்கையிலே பற்றுக் கொண்டவன்! அதற்காக எதையும் தியாகம் செய்யக் கூடிய நெஞ்சு பெற்றவன்!
பொன்: மன்றத்தின் ரகசியக் கூட்டத்திலே தீர்மானமாகி விட்டது - நீர் சந்தேகத்திற்குரியர் என்று! ஆனால் ஒன்று - என் தனிப்பட்ட நிபந்தனையாக இருக்கட்டும். ஒரு கடுமையான பரீட்சை வைக்கிறேன் உமக்கு, அதில் நீர் தேறினால், சந்தேகத்திலிருந்து விடுபடலாம்.
புது: கடுமையான பரீட்சை!
பொன்: ஆம்... உமது நேர்மையை நிலைநாட்டிக் கொள்ள தேவைப்படுகிற பரீட்சை! மந்திரி குணசீலரின் மகள் கலாராணியை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இங்கு கொண்டு வரவேண்டும்.
புது: கலாராணியையா? ஏன்?
பொன்: நீர் அரசாங்க ஒற்றன் அல்ல என்பதை நிரூபித்துக் கொள்வதற்கும், அதேசமயம் கலாராணிக்கும் அரசனுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைத் தடுப்பதற்கும் மக்கள் மன்றத்தின் சார்பில் உமக்கு இந்த கட்டளை தரப்படுகிறது. அதுவும் எனக்கு உம்மீது உள்ள அன்பு இன்னும் அடியோடு குறையவில்லை என்பதின் அடையாளமாக!
கவிஞர்: சபாஷ்! சந்தேகமும் நிவர்த்தியாகும்! திருமணமும் தடைப்படும்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
புது: இல்லை கவிஞரே! ஒரு இருதயத்தில் இரண்டு வேல்கள்! சந்தேகம், சோதனை! இரண்டையும் தாங்க வேண்டும் நான் - முடியாத காரியம்!
பொன்: கட்டளையை நிறைவேற்றினால், மக்கள் மன்றத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும் - இல்லாவிட்டால்...
புது: மூடப்படும் - என் ஆசைகளும் முடங்கி விடும்!
பொன்: நான் என்ன செய்ய? மன்றத்தின் ஆணைக்கு நானும் கட்டுப்பட்டதானே வேண்டும் தோழரே! வெற்றியோடு திரும்புங்கள்! வருகிறேன்!
(பொன்னழகன் போக, மற்றவர்களும், அவன் பின்னே போகிறார்கள். புதுமைப்பித்தன், அல்லி, கருப்பு ரோஜா மூவரும் தனியே இருக்கிறார்கள்)
புது: அல்லி.. வருகிறேன்!
(அல்லி கலக்கத்தோடு நிற்கிறாள்)
அல்லி: சோதனையில் வெற்றி பெற்று விரைவில் திரும்புங்கள்.
புது: என் வெற்றியை நீ ஏன் விரும்புகிறாய்?
அல்லி: மக்கள் மன்றம் ஒரு நல்ல மேதையை இழந்து விடக் கூடாது என்பதுதான்.
புது: மேதையா, நான்?
அல்லி: மேதை மட்டும் அல்ல - அறிஞர் - கவிஞர் - நாவலர் - சொல்லின் செல்வர் - சிந்தனைச் சிற்பி - எல்லாமே நீங்கள்தான்!
புது: சந்தேகத்துக்குரிய சதிகாரன் - நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவன்.
அல்லி: அப்படித்தான், இங்கே கருதுகிறார்கள், ஆனால் நான்...
புது: நீ கருதவில்லையா அல்லி?
அல்லி: இல்லை, உங்கள் முகத்திலே மோசத்தின் சாயல் சிறிதுமில்லை.
புது: அல்லி.. உன் வார்த்தைகள் போதும் எனக்கு. நீ உண்மையை உணர்ந்தால் போதும்... நான் சதிகாரனல்லவே, சொல் அல்லி! சொல்! உன் வாயால் இன்னொரு முறை சொல்!
அல்லி: இல்லை! நீங்கள் சதிகாரர் இல்லை! உத்தம உண்மையின் உருவம்! (விம்முகிறாள்)
புது: ஆகா... அல்லி! மணிமகுடபுரியே விடுதலை பெற்று போன்ற மகிழ்ச்சி அடைகிறேன் - விடை கொடு, வருகிறேன்!
அல்லி: திரும்பி வருவதாக வாக்களித்தால் விடை கொடுப்பேன்.
புது: (வியப்புடன்) உன்னுடைய பேச்சில்...
அல்லி: என்ன கற்பனை செய்கிறீர்கள்?
புது: ஒன்றுமில்லை..
அல்லி: சொல்லுங்கள்!
புது: நெஞ்சு நடுக்கம் எடுக்கிறது.. வேண்டாம்...
அல்லி: என்னுடைய நெஞ்சும் நடுங்குகிறது.
க.ரோஜா: என்னுடைய உடம்பே நடுங்குகிறது. யாராவது வந்து விடப் போகிறார்கள் என்று! நான் போய் வெளியே காவல் இருக்கிறேன். (போகிறான்)
புது: அல்லி, நான் வருகிறேன்!
அல்லி: மந்திரி மகளைக் கொண்டு வரும் முயற்சியில்...
புது: நீயும் அப்படித்தான் கட்டளையிடுகிறாயா?
அல்லி: கட்டளை அல்ல; உங்களைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் பிறக்கும் அன்புக் கோரிக்கை.
புது: அன்புக் கோரிக்கை... (இன்பமாக அந்த சொல்லை உச்சரித்தபடி) அல்லி!
(என்று அவளிடம் அவன் திரும்பி நெருங்குகிறான். அவள் முகத்தை மூடிக் கொண்டு சோகமயமாக வேறுபக்கம் போய்விடுகிறாள். புதுமைப்பித்தன் அதைவிட்டு வாட்டமுடன் நகருகிறான்)