காட்சி 8 / 47
காட்சி 8
காட்சி 8
மூல ஸ்கேன் 44, 45, 46, 47, 48, 49
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரசன் மாளிகை - வாயிற்புறத்தில் மெய்க்காப்பாளன் உலாவிக் கொண்டிருக்கிறான். குள்ளமான உருவமும், குறுகுறுப்பான பார்வையுமுடைய அவன், அங்கு யாரோ வருவதைக் கவனித்து விட்டு, உஷாராக நிற்கிறான். அமைச்சர் குணசீலர் வருகிறார். மெய்க்காப்பாளன் வருகிறான்)
குணசீலர்: அரசரைப் பார்க்க வேண்டும் என்று சொல்!
மெய்: அதிகாரப்பூர்வமாகவா... அல்லது...
குண: அதிகாரப்பூர்வமாகத்தான்...
மெய்: இதோ ஓடிப்போய் சொல்லுகிறேன்...
(உள்ளே போகிறான், மீண்டும் வெளியேவந்து)
மெய்: இதோ, இப்போதே வருவதாகச் சொல்லுகிறார் - தாங்கள் இங்கே அமர வேண்டுகிறேன்.
(அமைச்சர் உட்கார்கிறார்)
மெய்: என்ன புதிய விஷயமோ...?
குண: நீ அரசருக்கு மெய்க்காப்பாளன் தானே?
மெய்: ஆமாம்...
குண: அந்தக் காரியத்தோடு இரு! இதிலெல்லாம் தலையிட்டுக் கொண்டு தவிக்காதே! என்ன விஷயமாக நான் வந்தால் உனக்கென்ன?
மெய்: அபச்சாரம், மன்னிக்கவும் - குஷிமிக்க வேண்டும்! இல்லை... அந்த தேவாலயம் கட்டுவதைப் பற்றி...
குண: ஆமாம் - அதைப் பற்றித்தான் - நீயா கட்டப் போகிறாய்... (கோபமாக)
மெய்: அய்யோ நானா! அதெல்லாம் கட்டுவதற்கு கொத்தனார்கள் இருக்கிறார்கள்; குடியேற குருநாதர்கள் இருக்கிறார்கள்!
குண: ஏய் உலகப்பா! நீ வரவர தலைகீழாய்த்தான் நிற்கிறாய்...மரியாதையாக இரு.
மெய்: அய்யோ-நான் தலைகீழாய் நிற்பதே இல்லிங்க பிரபு; சிரசாசனம் செய்கிற நேரத்தைத்தவிர!
குண: மரியாதையாக இரு!
மெய்: மண்டியிட்டு, அனுமார் போலவா?
(அதுபோல பாவனை செய்கிறான்)
குண: மன்னிடம் பணி செய்கிறோம் என்ற மமதை - இரு இரு! அவளிடமே கூறி உனக்கு சரியான...
மெய்: வேண்டாம்... வேண்டாம்.. பிரபு! என்னை மன்னித்து ஆட்கொள்ளுங்கள்... ஏதோ சிறுகுத்தனமாக சொல்லி விட்டேன். அரசருக்கு இதுமாதிரி நான் செய்யும் வேடிக்கையெல்லாம் மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கும் ஏதோ பிடித்திருக்கிறது என்று நினைத்து,...
குண: எனக்கென்னடா பிடித்திருக்கிறது பேயா? பிசாசா?
மெய்: இல்லீங்க.. நான் எது சொன்னாலும் தப்பு எடுக்கிறீங்களே; என்னை மன்னித்து விடுங்க பிரபு! என் வேலைக்கு வெடி வைத்து விடாதீர்கள் சாமி! அபச்சாரம்! அபச்சாரம்... அடியேன் சிறியேன் - இனி பிழை புரியேன்!
(கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்)
குண: உன்னை மன்னிக்கிறேன். போய்த் தொலை! இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே! போய்ப் பார் அரசர் வருகிறாரா என்று!
மெய்: உத்திரவுங்க...
(என்று தனக்குள்ளாகவே அமைச்சரை கிண்டல் செய்து கொண்டே, உள்ளே போகிறான். அமைச்சர் காத்திருக்கிறார். மெய்க்காப்பாளன் வந்து)
மெய்: பிரபு! அரசர் வருகிறார்!
(அமைச்சர் எழுந்து நிற்கிறார். அரசன் வருகிறான். அழகான அரும்பு மீசையும், கம்பீரமான உருவமும் கொண்ட அரசன் மணிமாறன். ஏறத்தாழ புதுமைப் பித்தனின் சாயல் பொருந்தியவனாகவே இருக்கிறான். பெருமிதத்தோடு நடந்து வரும் அரசனை அமைச்சர் வணங்குகிறார். அரசனும் வணங்கி விட்டு, ஆசனத்தில் அமருகிறான்)
அரசன்: குணசீலரே! என்ன விசேஷம்? எல்லாரும் நலம்தானே? கலாராணி செளக்கியமா?
குண: செளக்கியந்தான் அரசே! தங்களைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டேயிருந்தாள்.
அர: அப்படியா? ம்! ராஜரீகங்கள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது... சீமான்கள் சபையில் ஏதாவது புதிய தீர்மானங்கள் உண்டா...?
குண: உண்டு! அதில் கையெழுத்து பெறுவதற்காகத்தான் வந்தேன்!
அர: என்ன தீர்மானம்?
குண: தேவாலயம் ஒன்று கட்டுவதற்காக...
அர: கட்டவேண்டியதுதான்! சிலாக்கியமான காரியம்... மக்களுக்கு உடனடியாக தேவை தேவாலயம்தான்! இந்த திவ்யமான யோசனைக்கு சொந்தக்காரர் யார்?
குண: குருநாதர்தான்!
அர: அதுதானே பார்த்தேன்; வேறு யாரும் ஆண்டவனுக்குத் தேவையான அவசிய விஷயங்களை உணர முடியாதே, - சபாஷ்! தேவாலயம் கட்டுவதென்றால், திரவியம் அதிகம் வேண்டுமே!
குண: பொக்கிஷத்திலே கொஞ்சமிருக்கிறது; போதா விட்டால், தேவாலய வரி ஒன்று விதிக்கவும் உத்தேசம்!
அர: உத்தமம்!...அமைச்சரே!... ஏதோ ஒரு ஆற்றில் அணைக்கட்டு இல்லாத காரணத்தால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, ஜனங்களுக்கும், கிராமங்களுக்கும் சேதம் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டதே, அது கவனிக்கப்பட்டு விட்டதா?
குண: இல்லை.
அர: ஆமாம், அது இப்போது அவசரமில்லை - தேவாலயம் கட்டி, ஆண்டவனைத் திருப்திப் படுத்தினால் அவரே கூட வெள்ளத்தைத் தடுத்து, ஆற்றையும் வற்ற வைத்துவிடுவார்! சரி.. அமைச்சரே! தேவாலயம் எந்த இடத்திலே?
குண: கொடிக்கால் நகரத்திலே.
அர: அந்த நகர மக்கள்!
குண: நகரைக் காலி செய்து விட்டு, அங்கே ஆலயம் கட்டுவதாகத் தீர்மானம்!
அர: ஓகோ, மனிதர்களை விரட்டி விட்டு, மகேஸ்வரனுக்கு மாளிகை கட்டுவதாகத் தீர்மானம்!
குண: அரசே!.. (சற்று வியப்புடன்)
அரச: தீர்மானத்தில் நான் கையெழுத்துப் போட வேண்டுமாக்கும்?
குண: ஆமாம்! அதற்குத்தான் வந்தேன்... (புத்தகத்தை நீட்டுகிறார்)
அர: (வாங்கியபடி) நான் கையொப்பமிடா விட்டாலும் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவர, அமைச்சருக்கு விசேஷ அதிகாரம் இருக்கிறதே!
குண: இருந்தாலும் - சீமான்கள் சபை, தங்கள் கையெழுத்தில்லா விட்டால்...
அரச: அமைச்சரே! குறிப்பிட்ட இந்த தீர்மானத்தில் என் கையெழுத்து வேண்டாம். முடியுமானால் இந்த தீர்மானத்தைத் திரும்பப் பெற முயலுங்கள்!
குண: சபை நிறைவேற்றி விட்டதே; திரும்பப் பெற்றால் அவமானமல்லவா அரசே!
அர: அப்படியானால் அமைச்சரின் விசேஷ அதிகாரம் பயன்படுத்தும்... நான் கோயில் கட்டும் தீர்மானத்தில் மட்டும் கையெழுத்திட மாட்டேன்... மற்றவைகளில் கையெழுத்திடுகிறேன்.
(என்று கூறி மற்ற தீர்மானங்களில் கையெழுத்திடுகிறார்)
குண: தயவு செய்து இந்த தீர்மானத்திலும்...
அர: வேண்டாம்! என் கையெழுத்தை களங்கப்படுத்திக் கொள்ள மாட்டேன்... விளக்கம் கேட்கிறீர்! விசேஷ அதிகாரத்தை உபயோகித்து, கோயிலைக் கட்ட முடியும்!
(அரசன் உள்ளே போய்விடுகிறான் - மெய்க்காப்பாளனும் போகிறான், அரசனுடன். அமைச்சர் ஆழ்ந்த யோசனையுடன் நிற்கிறார்)
குண: (தனக்குள்ளாக) “கையெழுத்துப் போட வில்லை! விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி!” இப்போது அரசனிடம் கோபித்துக் கொண்டால், கலாராணி விஷயம் வெற்றிகரமாக முடியாது! அதற்காக கோயில் தீர்மானத்தையும் கைவிட முடியாது! சரி, அரசன் கையெழுத்திட்டு விட்டதாகவே பொய்ப் பிரச்சாரம் செய்கிறேன். இருக்கவே இருக்கிறது - ‘மக்கள் தொண்டன்’ பத்திரிகை! வேறு வழி இல்லை..! வழியே இல்லை..!
(அப்போது மெய்க்காப்பாளன் வந்து)
மெய்: வழி ஏன் இல்லை? பிரபு இதோ இருக்கிறதே வழி - வெளியே போகத்தானே பிரபு?
குண: சீ.. முட்டாளே! வழி சொல்ல வந்துவிட்டான், வடிகட்டிய முட்டாள்!
(போகிறார் வேகமாக)