பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 7 / 47

காட்சி 7

காட்சி 7

மூல ஸ்கேன் 39, 40, 41, 42, 43, 44

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மக்கள் மன்றம் - புதுமைப்பித்தன், பொன்னழகன், அல்லி மற்றும் தொண்டர்கள், கருப்பு ரோஜா - அல்லி பேசிக் கொண்டிருக்கிறாள்)

அல்லி: தீர்மானத்திலே அரசன் கையெழுத்திட்டு விட்டால், கொடிக்கால் நகரத்து மக்கள் இருக்க இடமின்றித் தவிக்கப் போகும் தாங்கொணாத வேதனைக்காட்சிகளைத் தான் நாம் காண வேண்டும். கொடிக்காலை அழித்துக் கோயில் கட்டுவதும், குடிசைவாழ் தோழர்களின் குரல்வளையை நெரிப்பதும் ஒன்றுதான் - என்பதை கோலோச்சும் குணாளர்கள் இப்போதும் மறுப்பார்கள்; இனி எப்போதும் மறுப்பார்கள். அந்தக் கோணங்கிகள் வழிக்கு வர, நமது கண்டனக் கொடி நாடெங்கும் பறக்க வேண்டும்.

பொன்: கொடி பறந்து பயனில்லை. கண்டன முழக்கங்கள் கடல் அலைபோல் கொந்தளித்தும் பயனில்லை - நான் சொல்லுகிறேன்; வேந்தனுக்கு இப்போது ஓலை அனுப்பவேண்டும். “கொடிக்கால் நகரை அழிக்கும் தீர்மானத்தில் நீர் கையெழுத்திடலாகாது! மீறி கையொப்பமிடுவீரேயானால், உமது உயிருக்கே ஆபத்து நேரிடும்!” என்பது போல் எச்சரிக்கை வேண்டும்!

புதுமை: நண்பர் தருவது பலாத்கார மார்க்கம். அமைதியான முறையிலேயே காரியம் சாதிப்பதையே நான் விரும்புகிறேன்.

பொன்: மயிலைப் போய் இறகு கேட்பது- மத யானையிடம் இதோபதேசம் செய்வது - மலைப்பாம்புக்கு மகுடி ஊதுவது இம் மாதிரி அமைதி இப்போது தேவையில்லை...

புதுமை: மயிலிடம் இறகுப் பிச்சை - மதயானையிடம் உபதேசம் - மலைப்பாம்பிடம் மகுடி - இவைகளை எல்லாம் நான் அமைதி என்று கூறவில்லையே - அறிவீனமான செய்கைகளுக்குத்தான் இவைகள் எடுத்துக் காட்டுகள். நான் கூறும் அமைதி அரசியல் நாகரீகத்தைப் பொறுத்தது! அரசியலிலே தலைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தைப் பொறுத்தது! தங்கள் முடிவுப்படி அரசனின் உயிருக்கு தீங்கு முட்டி விட்டால், அரசன் கொல்லப்பட்டு விட்டால், நமது எண்ணங்கள் சுலபமாக ஏற்றம் பெற்று விடுமா? அப்போது தான் நம் மார்க்கத்திலே, மலைக்கத்தக்க தடை ஏற்படும். “கொள்கைக்கு விரோதமானவர்களையே எல்லாம் கொன்று விடும் கோஷ்டியின்,” என்ற பழிச் சொல், நமது தூய்மை சேர் நற்கொள்கைகளை நாட்டிலே பரவ விடாமல் தடுத்து விடும்; நான் கேட்கிறேன் கொல்லப்பட வேண்டியது அரசனா...

க.ரோ: இல்லை- அந்தக் குருநாதர்!

புதுமை: அவருமல்ல, ஆசிரியர் அரிஹரநாதருமல்ல! அமைச்சர் குணசீலருமில்லை! கொல்லப்பட வேண்டியவை குருட்டு எண்ணங்கள்! இருட்டு நினைவுகள்! புலியைக் கொல்லாவிட்டால், அதன் பாய்ச்சலைத் தடுக்க முடியுமா? பாம்பை அடிக்காவிட்டால், அதன் விஷப்பல்லிலேயிருந்து தப்ப முடியுமா? என்று கேட்பீர்கள்! புலியும் பாம்பும் வாழும் காட்டை, நாட்டுக்கு நடுவிலே வைத்துக் கொண்டு புலி - புலியென்று கிலி கொள்வதில் என்ன லாபம்? அதனால், முதலில் அழிக்கப்பட வேண்டியது காடு! இருட்டு உள்ளம்! குருட்டு எண்ணம்! அவை ஒழிக்கப்பட்டால் - காடு நாடானால் கவலை தொலையும்- புலி ஒழிந்தால், புலியும் பாம்பும் ஒழியும்! அந்த நிரந்தரமான நிம்மதிக்குப் போராட வேண்டுமென்பதுதான் என் கொள்கை!

அல்லி: ஆமாம் - அவர் கூறுவது உண்மை! ஒரு அரசனைக் கொன்று விட்டால் நாளை இன்னொரு அரசன் வரப் போகிறான்- அவனையும் கொன்று விட்டால், மறுநாள், மற்றொருவன் வரப் போகிறான். இப்படி நாம் கொலை செய்வதும், புதிய அரசர்கள் வருவதுமாக இருந்தால், கொலைவாளைத் தீமே வைக்க நமக்கும் நேரமிருக்காது; கொலையுண்டபடும் அரசனில்லாமல் காலியாக இருக்காது!

பொன்: அப்படியானால் மகுடமே ஆளட்டும்; மக்களாட்சி தேவையில்லை என்கிறீர்களா?

புது: இல்லை... இல்லை... ஒரு அரசனை ஒழித்துப் பயனில்லை... அரச பரம்பரையே ஒழிய வேண்டுமென்கிறேன். பரம்பரையை ஒழிப்பதென்றால், புராண காலத்து பரசுராமனைப் போல கையிலே கோடாரி தூக்கி, கண்ட அரசர்களையும் கொல்வதென்பதல்ல பொருள்! அரசனிடமிருந்து பெறுகிற உரிமையை மக்கள் காப்பாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும்! ஒரு அரசனை மிரட்டியோ, அல்லது பணிய வைத்தோ, அல்லது நம் கொள்கைக்குத் திருப்பியோ - அவனிடமிருந்து நாட்டாட்சி மக்கள் கைக்கு மாற்றப்பட்டு, சில நாட்களிலேயே மக்களாட்சியில் கோணல் ஏற்பட்டு, மீண்டும் - மன்னராட்சியே மேல் என்ற நிலைமை வந்துவிடக் கூடாது! நிரந்தரமான மக்களாட்சி ஏற்பட மக்கள் உள்ளம் பண்படுத்தப்பட வேண்டும்! உதாரணமாக மணிமகுடபுரி மக்களுக்கு, அரசன் மீதும், அரசாங்கத்தின் மீதும், சீமான்கள் சபை மீதும் இருக்கிற ஆத்திரம் - அந்த குருநாதர் மீது இல்லையே, ஏன்? நம்பிக்கை! மனவளமில்லாத குறையால் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கை! மன்னன் சாய்க்கப்பட்டு, மக்களாட்சி மலரும் போது, இந்த குருநாதர்கள், மகேசனின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு மறுமலர்ச்சித் தோட்டத்திலே மாடுபோல் நுழைவார்களேயானால், மக்களாட்சி நீண்ட நாள் வாழுமென்றா நினைக்கிறீர்கள்? வாழாது நண்பரே, வாழாது! அந்த ஆட்சி அலி ஒருவனுக்கு அழகான பெண்ணை திருமணம் செய்து வைத்த கதையாக முடிந்து விடும்!

அல்லி: அழகானபேச்சு! அருமையான விளக்கம்! மக்கள் மன்றம், புதிய கருத்துக்களை இன்று பெற்றது! பொன்னழகரும் இதை மறுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்!

பொன்: (சிரித்தபடி) எப்போதும் உன் கட்சிதானே ஜெயிக்கும் அல்லி! அதோடு உனக்கு சரியான துணையும் கிடைத்துவிட்டது.

புது: சரி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது... பிறகு வருகிறேன்... கருப்பு ரோஜா, வா போகலாம்!

(அல்லி, புதுமைப்பித்தன் போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் - இதுவரையில் ஒரு மூலையில் மெளனமாக உட்கார்ந்திருந்த கவிஞர் திடீரென உரக்கப் பாடுகிறான்)

“அணையுடைத்துவரும் ஆற்றையும் நம்பலாம்! புயல் காற்றையும் நம்பலாம்! சீறிவரும் பாம்பையும், செந்தேளையும் நம்பலாம் இந்த சங்கத்தில் நுழைந்து விட்ட புதுமைப்பித்தன் என்னும் பொய்யனை நம்ப லாகாதே!

(மன்றத்தினர் திகைப்பு)

அல்லி: என்ன? (திகைப்பு)

பொன்: கவிஞரே! (ஆச்சரியம்)

கவிஞர்: நெருப்பிலே நீர் கொட்டினானே, அவன் நேர்மையின் திருவுருவம் என்று எண்ணாதீர்கள்!...

அல்லி: என்ன சொல்கிறீர்கள் - புதுமைப்பித்தனைப் பற்றி...

கவிஞர்: அமைதியின் வடிவமல்ல அவன்; ஆபத்தின் சொரூபம்! அரசாங்கத்து ஒற்றன்!

பொன்: ஆ... அரசாங்கத்து ஒற்றன்.

கவிஞர்: ஆமாம்...நானே நேரில் பார்த்தேன்! அவன் மீது எனக்கேற்பட்ட சந்தேகம் தெளிவாயிற்று.. அரண்மனைப் பக்கம் அடிக்கடி போய் வருகிறான் என்று கேள்விப்பட்டேன். பின் தொடர்ந்தேன். நேற்றிரவு அவன் அரண்மனைக்குள் நுழைந்ததை நானே கண்டேன் - இதில் ஐயத்திற்கு இடமேயில்லை!

பொன்: ஆகா! ஏமாந்து விட்டோம் - அவசரப்பட்டு மன்றத்திலும் அவனை உறுப்பினராக்கி விட்டோம்- நல்ல வேளை இப்போதாவது எச்சரிக்கை செய்தீரே! கவிஞரே மிக நன்றி! மிக நன்றி!

அல்லி: எனக்கென்னவோ புதுமைப்பித்தனை அரசாங்க ஒற்றன் என்று கூற முடியவில்லை!

கவிஞர்: அப்படியானால், ஐந்தாம் படைத் தலைவன் என்று கூறு! அல்லி! நீ புதுமைப் பித்தனை நம்புவது தவறு! அவன் வந்தது முதல் நீ பொன்னழகனைக் கூட அலட்சியப்படுத்தி விட்டாய்!

அல்லி: கவிஞரே! மன்னிக்க வேண்டும். புதுமைப் பித்தனை நான் மதிப்பது உண்மை. அதே நேரத்தில் பொன்னழகரை என் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விடமாட்டேன். நான் இந்த மன்றத்தின் நிர்வாகத் தலைவியாகவும் இருக்கலாம் - ஆனால் பொன்னழகர் தான்... எனக்கு அன்றைக்கும் தலைவர்! இன்றைக்கும் தலைவர்! இனி என்றைக்கும் தலைவர்.

பொன்: அல்லி! புதுமைப் பித்தனைப் பற்றி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். நாளைய தினம் நமது மன்றத்தின் ரகசிய செயற்குழுக் கூட்டப்படவேண்டும், ஆக வேண்டியவைகளை கவனி - நான் கொடிக்கால் நகருக்கு போய் வருகிறேன்!

(பொன்னழகன் போகிறான்; அல்லி வாட்டம் அடைகிறாள்)