பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 6 / 47

காட்சி 6

காட்சி 6

மூல ஸ்கேன் 32, 33, 34, 35, 36, 37, 38, 39

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(சீமான்கள் சபை கூடுகிறது. சீமான்களும் அமைச்சர் குணசீலரும் இருக்கிறார்கள். தனி அழைப்பின் பேரில் குருநாதரும், ‘மக்கள் தொண்டன்’ ஆசிரியர் அரிஹரநாதரும் அமர்ந்திருக்கிறார்கள். சபையை விட்டு சிறிது தூரத்தில் பொது மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே - பொன்னழகன், புதுமைப் பித்தன், அல்லி முதலியோர் இருக்கிறார்கள்)

குணசீலர்: பெருமைக்குரிய சீமான்களே!... மணிமகுடபுரியின் பிரதிநிதித்துவம் வாய்ந்த இந்த சபை, இன்றைய தினம் செய்ய வேண்டிய தீர்மானங்களிலே மிக முக்கியமானது தேவாலயம் ஒன்று நிர்மாணிப்பதைப் பொறுத்த விஷயமாகும். மணிமகுடபுரியில் உலகம் கண்டு வியக்கக் கூடிய அளவுக்கு ஒரு அதிசயம் இருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும். அத்தகைய சிரஞ்சீவித்தன்மை வாய்ந்த அதிசயம் நாம் புதிதாகக் கட்ட இருக்கிற தேவாலயமாயிருக்கட்டும். நாம் நினைக்கிற அளவுக்கு பிரம்மாண்டமான முறையிலே ஆலயம் கட்ட - தலைநகரிலே இடவசதி இல்லை. அதைப் பொறுத்து - தலைநகரின் ஒரு பகுதியான கொடிக்கால் நகரை காலி செய்து விட்டு அங்கே கோயிலைக் கட்டலாம் என்று ஒரு யோசனையும் இருக்கிறது. இந்த யோசனை ஏழை பங்காளரான நமது குருநாதரின் யோசனையாகும் - கொடிக்கால் நகரில் கோயில் எழுப்புவது சம்பந்தமாக அனைவரும் தங்கள் யோசனைகளைக் கூறி தெய்வீகம் பொருந்திய இந்தத் தீர்மானத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டுகிறேன். இதுபற்றி நல்ல யோசனைகள் கூறுவதற்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

(அமைச்சர் அமருகிறார்)

சீமான் 1: ஆண்டவனுக்கு ஆலயம் கட்ட யார் ஆட்சேபிக்கப் போகிறார்கள் - தாராளமாகச் செய்யலாம்.

சீமான் 2: யாரையும் யோசனை கேட்கத் தேவையில்லை. குருநாதர் இஷ்டம் போல் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கோயில் அமைக்கலாம்.

சீமான் 3: ஆலயம் தொழுவது சாலவும் நன்று! - கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

குண: மகேசன் காரியத்திற்கு மறுப்பே இருக்காது என எண்ணுகிறேன். மிகவும் மகிழ்ச்சி.

(பொன்னழகன் எழுகிறான்)

பொன்: கொடிக்கால் நகரத்தில் கோயில் கட்டுவதை நான் எதிர்க்கிறேன்.

குண: ஏன்...?

பொன்: கொடிக்கால் நகரம் ஏழைகள் பகுதி - ஆயிரம் குடிசைகள் அழிக்கப்பட்டு, அங்கே ஆலயம் கட்டுவது அனுமதிக்க முடியாத செயல்! வெற்றிலை பயிரிட்டு வயிறு வளர்க்கும் ஏழைகள் எங்கே போவார்கள்? ஆயிரம் குடும்பங்களின் கதி என்ன? அந்தக் குடிசைகளுக்கு உயிரூட்டும் கொடிக்கால்கள் அழிக்கப்பட்டால் குமுறியெழும் வறுமைத் தீயை அணைப்பதற்கு யாராலும் இயலாது - குழந்தை குட்டிகளோடு ஏழைகள் தவிக்க - கொட்டு மேளத்தோடு தேவாலயத்துக் கும்பாபிஷேகம் நடைபெறுவதை மனித இருதயம் படைத்த யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தேவனுக்கு ஒரு ஆலயம் தேவையானால், வேறிடத்தைத் தேர்ந்தெடுங்கள். குடிசை வாழ்வோரின் வயிற்றிலே மண்ணைப் போடாதீர்கள்.

குண: இவ்வளவு பெரிய நாட்டிலே அந்த ஆயிரம் குடிசைக்காரர்களும் வசிப்பதற்கா இடமில்லை?

பொன்: அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டால்? இவ்வளவு பெரிய தேசத்திலே - தேவனுக்கு ஆலயம் அமைக்கவா வேறு இடமில்லை? என்ன பதில் சபையோர்களே? இதற்கு என்ன பதில்? ஏன் - அந்த ஏழைப் பூச்சிகள் மீது உங்களுக்கு என்ன கோபம்? பருவத்தால் கெட்டாலும், செழிப்பின்றி செத்தாலும், கொடிக்கால் வரி கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று கட்டாயப்படுத்திப் பெற்றுக் கொள்கிறீர்கள் வியர்வை கொட்டிப் பயிரிடும் வெற்றிலைக்கு முக்கால் பங்கு வரி செலுத்தி, கால்பங்கு வருமானத்திலே காலத்தை ஓட்டுகிறார்கள். அந்தக் கதியற்றவர்கள் - திடீரென்று திசைமாறி ஓடவேண்டும். அங்கே தேவாலயம் கட்டப் போகிறோம் என்று திடீர் உத்தரவு போடுவது இரக்கமற்ற செய்கை - ஆயிரம் குடும்பங்களை ஏக காலத்தில் சாக அடிக்கும் கொலைவெறிக் கொள்கை! தயவு செய்து கொடிக்காலை ஒழித்து கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டுகிறேன்.

குண: இதற்கு குருநாதர் அவர்களே பதில் சொல்வார்.

(குருநாதர் எழுகிறார்)

குரு: கொடிக்காலை அழிப்பது கூடாது என்று ஒரு குரல் கேட்கிறது! - கேலிக்குரிய குரல்! கோயில் தேவையில்லை என்று கூறுவதற்கு பயந்து கொண்டு, கொடிக்கால் நகரத்து மக்களை கேடயமாக்கிக் கொண்டு அலறிய கேலிக்குரிய குரல்! இதுபோன்ற நாத்திகக் கொள்கை பரவி விட்டது என்பதற்காகத்தான் ஆலயம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்கிறேன் நான்! ஆயிரம் குடிசைகள் அழிந்து விடுமாம் - ஒரு ஆத்மா அங்கலாய்க்கிறது அதற்காக! அழியட்டுமே! ஒரு ஆலயம் கட்டுவதால் ஆயிரம் குடிசைகள் அழியலாம் - அதே நேரத்தில் மணிமகுடபுரியின் லட்சோப லட்சம் மக்களுக்கு மோட்சப்பாதை திறக்கப்படுகிறது என்பதை மறந்து விடலாமா? பலர் வாழ சிலர் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! - தேவாலயம், கொடிக்கால் நகரில் அமைந்தே தீர வேண்டும்!

புது: மறுக்கிறேன் - மறுக்கிறேன்!

குண: என்ன? - கொடிக்கால் நகரில் தேவாலயம் அமைக்கக் கூடாது என்றா?

புது: இல்லை - தேவாலயமே தேவையில்லை; என்கிறேன் நான்!

குரு: ஆ! - பச்சை நாத்திகம் படமெடுத்தாடுகிறது! - அவனை விட இவன் மோசம்! அவனாவது இடத்தை மறுத்தான்; இவன் இறைவனையே மறுக்கிறான்!

புது: குருநாதரே! “இறைவன் மறுப்பு” “நாத்திகம்” என்கிற சில சொற்களை வைத்துக் கொண்டு, அறிவியக்க வாதிகளை வேட்டையாடாதீர்! கோயில் தேவையில்லை என்பது நாத்திகம் என்று யார் சொன்னது? கூறும் கேட்போம் - மணிமகுடபுரியின் கோயில் எண்ணிக்கை எவ்வளவு? புள்ளி விவரத்தோடு கூறட்டுமா? தலைநகரத்திலே மட்டும் - ஐநூறு ஆலயங்கள்! தேசம் முழுவதும் ஆறாயிரம் ஆலயங்கள்! இந்த ஆறாயிரம் ஆலயங்களுக்கு செலவிடப்படும் மொத்தத் தொகை அறுபது கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு! அந்த ஆலயங்களிலே - நிலமாக, அணிமணியாக, வைரக் கிரீடங்களாக முடங்கிக் கிடக்கும் பணம் எவ்வளவு - முன்னூறு கோடி ரூபாய் குருநாதரே! முன்னூறு கோடி ரூபாய்! பாலின்றித் தவிக்கும் பாலகர்க்குப் பலனில்லாமல் - வேலையின்றி வாடும் வாலிபர்க்கும் பலனில்லாமல் - எலும்பாய்த் தேய்ந்து, எறும்பாய் உழைத்து, இரும்பால் உள்ளங் கொண்ட சீமான்களிடம் சித்திரவதைப்படும் ஜீவன்களுக்கு உபயோகமில்லாமல் - தேர்களாய் தேவாலயக் கோபுரங்களாய் வெள்ளிக் கலசங்களாய், மேட்டுக் கிடக்கும் முன்னூறு கோடி ரூபாய்! மணிமகுடபுரியின் பொக்கிஷத்திலும் இல்லாத பணம்! இது போதாதென்று, இன்னும் ஒரு கோயிலா? - யார் கேட்டது? - யாருக்குத் தேவை புதிய கோயில்?

குரு: ஆண்டவனே கேட்டார்!

புது: ஆறாயிரம் கோயில் போதாதென்றா?

குரு: ஆமாம்!

புது: ஆயிரம் வீடுகளை அழித்துவிட்டு, தனக்கு ஒரு கோயில் கேட்டாரா?

குரு: ஆமாம்!

புது: அப்படிக் கேட்டவர் ஆண்டவனாக இருக்க மாட்டார். ஆண்டவனுக்குச் சொல்லப்படும் லட்சணப்படி அவருக்குத் தேவையானது ஆலயமல்ல! நல்லவர்களின் இருதயமே அவருக்கு ஆலயம்! அவருக்கு வீடு! அவருக்கு மாளிகை! ஆண்டவன் என்னுமோ மணிமகுடபுரி முழுவதும் தேடிப் பார்த்து வாடகைக்குக் கூட ஒரு வீடு கிடைக்காமல் - குடும்பத்தோடு அலைவது போலவும் - அதற்காகக் கவலைப்பட்டு, அவசரமாக வீடு கட்ட குருநாதர் முன்வந்தது போலவும் இந்த சீமான் சபை கருதுவது - சிரிப்புக்குத்தான் இடமாகும் - தயவு செய்து இந்த எண்ணத்தை விட்டுவிட வேண்டுகிறேன்.

சீமான் 1: அவமதிப்பு! அவமதிப்பு! குருநாதரைக் கேலி பேசுகிறான் - உடனே வெளியேற்றுங்கள் அவனை!

குண: பொதுமக்கள் அபிப்பிராயம் வழங்குவது நிறுத்தப்பட்டது! இனி தீர்மானத்தின் மீது வாக்கெடுக்கப்படும் - இந்த சபையிலே சீமான்களைத் தவிர வேறு யாருக்கும் வாக்குரிமை இல்லையாதலால்.... அனைவரும் அமைதியாயிருக்க வேண்டும்.

புது: அமைச்சர் அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்! ஆயிரம் வீட்டுக்காரர்கள் நாதியற்றுப் போய்விடுவார்கள்! ஆண்டவனே விரும்பாத செயல் இது! அன்பைக் கொன்று புதைத்து, அங்கே எழுப்பும் ஆலயத்திலே ‘அன்பே கடவுள்’ என்று எழுதாதீர்கள்! எங்கள் வேண்டுகோளை ஏழைகளின் குரலை மதிக்காமல் தீர்மானம் நிறைவேறினால்...

குண: புரட்சி நடக்குமா?

புது: நடக்காது! ஆனால், புகையும் எரிமலை என்று பொங்குமோ அதுவும் தெரியாது! ஆயிரம் குடிசைகள் நிர்மூலமாக்கப்பட்டு, அங்கே ஆண்டவன் எழுந்தருளுவானேயானால் - அதற்குப் பெயர் ஆலயமென்றா கூறுவார்கள், அறிவுடையோர்! ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் மலர்களிலே ஆயிரம் வீட்டுக்காரர்கள் சிந்திய ரத்தக்கறை படிந்திருக்கும்! அவனுக்குக் காட்டப்படும் தூப தீபங்களிலே தாய்மார்களின் துயர முகந்தான் தெரியும் - தூய ஜோதி தெரியாது! பச்சரிசிப் பொங்கலும், பாயசமும் படைப்பீர்களே ஆண்டவனுக்கு - அந்தப் பொங்கல் பச்சை சிசுக்களின் உடலைப் பொடியாக்கி செய்யப்படும் நைவேத்தியமாகத் தானிருக்கும்! ஆலயத்து மணியிலே தெய்வீக ஒலி கிளம்பாது அமைச்சரே, அனாதையாக விடப்பட்ட ஆயிரம் குடிசைகளின் சோகத் தொனிதான் கிளம்பும்! பக்தி ரசக்கீர்த்தனை கேட்காது பகவான் சன்னிதானத்திலே, வாழ்விழந்த பாட்டாளிகளின் ஒப்பாரி கேட்கும்! புலம்பல் கேட்கும்! அழுகுரல் கேட்கும்! தேவாலயம், தேம்பி அழுவோர் பெருகிவிட்ட பிணக்காடாகும் - சுடுகாடாக மாறும் - மயான பூமியாகத் திகழும்! வேண்டாம் - ஆண்டவன் கோயிலில் அழுக்கும் இழுக்கும் வேண்டாம் - ஆண்டவன் பெயரால் ஆண்டவனுக்குக் களங்கம் தேடாதீர்கள்!

குண: நிறுத்து! இனியும் பேசினால் - நிதானமிழப்போம் - கைது செய்ய வேண்டியநிலை பிறக்கும். தீர்மானம் நிறைவேறப் போகிறது. அமைதியாக இருக்க முடியுமானால் உள்ளே அனுமதிக்கிறேன், இல்லையானால்...

புது: நாங்கள் வெளியேறுகிறோம்! அமைச்சருக்கு சிரமம் வேண்டாம்! ஆண்டவனே! நீ இருந்தால் கேள் இந்த அக்கிரமக்காரர்களை! அய்யோ - ஆயிரம் வீடுகளை எரித்து விட்டு, இங்கே நீ இருந்து சிரிக்கப் போகிறாயாமே, அடுக்குமா, உனக்கு இந்த அநியாயச் செயல்? சரி! நன்றாகச் சரி! ஏழைகளின் கண்ணீரில் நீந்திக் கொண்டே சரி! ஏழைகள் சமுதாயமே - நீ அழு! ஆண்டவன் சிரிக்கப் போகிறான் - அந்தரத்திலே, இருக்க இடமின்றி தொங்கும் அவனுக்கு அரசாங்கத்தார் ஆடம்பரமான ஆலயம் அமைக்கப் போகிறார்கள்! ஆகவே எதிர்க்க முடியாத ஏழையே! ஏமாற்றப்பட்ட தோழனே! நீ அழு! அழு! இனி! அஞ்சு! குனி! பிதற்று! புலம்பு! ஒப்பாரி வை! கண்ணீர் உனக்கு மட்டும்தான் சொந்தம் - அதை யாரும் அபகரிக்க முடியாது. ஆகவே அழு நண்பா; அழு! உனக்கு விடுதலையே கிடையாது; இந்த சீமான்கள் இருக்கும் வரை - இந்த குருநாதர்கள் இருக்கும் வரை, உனக்கு விடுதலையே கிடையாது!

(புதுமைப்பித்தன் வெளியேறுகிறான்)

குண: பொதுமக்கள் அனைவருமே வெளியேற வேண்டும். உம்... உடனே!

(அனைவரும், பொன்னழகன், அல்லி உட்பட வெளியேற்றப்படுகிறார்கள்)

குண: (பத்திரிகை ஆசிரியரைப் பார்த்து) மக்கள் தொண்டன் பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீஜத் அரிஹரநாதரைக் கேட்டுக் கொள்கிறேன்... இங்கு நடந்த சம்பவங்கள் எதுவும்....

அரிஹரநாதர்: (குழைவோடு)... நிச்சயமாக பத்திரிகையில் வெளியிட மாட்டேன் என்று இந்த சீமான்கள் சபையில் உறுதிக் கூறுகிறேன். யாரும் கவலைப்படத் தேவையில்லை! ஹி..ஹி...ஹி.. (பல் இளித்தல்)

குரு: ம்... தீர்மானம் நிறைவேறட்டும்!