பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 5 / 47

காட்சி 5

காட்சி 5

மூல ஸ்கேன் 30, 31, 32

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(வெற்றிலை, பாக்கு, பத்திரிகை முதலியன விற்கும் கடை. அதன் எதிரே கூட்டமாக நின்று சிலர் சாமான் வாங்குகிறார்கள். ஒருவன் மக்கள் தொண்டன் பத்திரிகையை வாங்கிப் பிரிக்கிறான். பிரித்தவன் ஆச்சரியமுடன்)

ஒருவன்: அடடே! ஒரு செய்தி பார்த்தீர்களா?

மற்றவன்: என்ன? என்ன?....

ஒருவன்: (படிக்கிறான்) குருநாதர் மடாலயத்துக்கு முன்பு குழப்பம் செய்ய முயற்சி - குதிரைப் படைகள் கலக்கக்காரர்களை விரட்டியடித்தன. புதுமைப்பித்தன் என்னும் பெயருடைய ஒரு ஆள் மடாலயத்து பூஜைக்காகச் செல்லும் மக்களை வழிமறித்துக் குருநாதரும் நம்மைப்போல ஒரு மனிதர்தானே? அவர் காலில் எதற்காக விழுந்து காணிக்கை செலுத்த வேண்டும்? என்று தெய்வ நிந்தனையாகப் பேசியதின் விளைவாகச் சிறு குழப்பம் ஏற்பட்டது. அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக மடாலயத்துக்குச் சென்ற மக்கள் தேங்கி நின்றுவிட்டார்கள். அவர்களையெல்லாம் அவன் தூண்டிவிட்டு குருநாதரை அவதூறாகப் பேசினான். அதனால் அரசாங்கக் குதிரைப் படைகள் அனுப்பப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது.

மற்றவன்: இவன் யாருடா புது ஆளு? பெரிய ஆசாமிதான் போல இருக்கு! பொன்னழகனை விட இவன் தீவிரவாதியோ?

ஒரு : என்னடா பெரிய தீவிரவாதி? குருநாதரைப் போய் அவதூறாகப் பேசி, தெய்வ நிந்தனை செய்வதா தீவிரவாதிக்கு அழகு? நாஸ்திகப் பயல்!

(அப்போது கருப்பு ரோஜா கடையில் வந்து ஏதோ சாமான் வாங்குவது போல நின்று கொண்டு அந்த உரையாடலைக் கவனிக்கிறான். அவன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு)

க.ரோ.: யாரது? புதுமைப்பித்தன் குழப்பம் செய்தானா?

ஒரு: ஆமாம், இதோ பார்! (பத்திரிகையைக் கொடுத்தல்)

க.ரோ.: (படித்துவிட்டு) அடப்பாவி; நான் கண்ணால நேர பார்த்தது - அச்சு எழுத்திலே அடியோடு மாறி வருகிறதே!

ஒரு: ஓகோ; நீ குழப்பத்தை நேரில் பார்த்தாயா?

க.ரோ.: குழப்பமா?

ஒரு: பிறகு என்ன நடந்தது?

க.ரோ.: புதுமைப்பித்தன் பிரசங்கம் நடந்தது.

ஒரு: குழப்பம் நடந்ததாகப் போட்டிருக்கிறதே?

க.ரோ.: பிரசங்கத்துக்கு இந்தப் பத்திரிகையாசிரியரின் மொழிபெயர்ப்பு குழப்பம் என்பது?

ஒரு: மடாலயத்துக்குச் செல்லும் மக்களை வழிமறித்து உண்மைதானே?

க.ரோ.: நூற்றுக்கு நூறு பொய் - மடாலயத்துக்குச் சிறிது தூரத்தில் கூட்டம் நடந்தது உண்மை. மடாலயத்துக்குச் செல்ல வேண்டிய மக்கள் கூட்டம் கேட்க நின்று விட்டது உண்மை. காணிக்கை செலுத்துவோர் வரவில்லையே என்று குருநாதர் காத்துக் கிடந்தது உண்மை...

ஒரு: குழப்பம் ஏற்பட்டு குதிரைப்படை வந்து மட்டும் பொய்யாக்கும்?

க.ரோ.: அதுவும் உண்மைதான்! ஆனால் செய்தியில் தான் சிறு மாறுதல், குழப்பம் ஏற்பட்டு குதிரைப்படை வரவில்லை. குதிரைப்படை வந்த பிறகே குழப்பம் ஏற்பட்டது!

ஒரு: மடாலயத்துக்கு முன்பு என்பதா கூட்டம் போட வேண்டும்!

க.ரோ.: புண் இருக்குமிடத்தில்தானே மருந்து போட வேண்டும்.

ஒரு: என்னமோ எனக்கு உன் பேச்சில் நம்பிக்கையில்லை, பத்திரிகையிலே பொய் போடுவானா?

க.ரோ.: போய்யா! உன்னைப் போல ஆளை நம்பித்தானே அவன் பத்திரிகையே நடத்துகிறான்! அச்சிலே வருவது அவ்வளவும் உண்மை என்கிற ஆஷாடபூதிகள் அதிகமாகிவிட்டதால்தான்... அல்லித் தண்டுலே அனுமார் புகுந்தார் - ஆதிசேஷன் அகிலத்தைச் சுமக்கிறான் - ஆட்டுக் குட்டிப் பாட்டுப் பாடுது - அணிப்பிள்ளை பாலம் கட்டுது - நேற்றுப் பிறந்த குழந்தை கேட்ட வரம் கொடுக்குது - என்றெல்லாம் கயிறு திரித்து விட்டார்கள் - போய்யா.... போ!

(என்று கூறிவிட்டு கருப்பு ரோஜா அதைவிட்டுப் போகிறான். பத்திரிகை படிப்பவன் (செய்தியைக் கண்டு) அடேடே! சீமான்கள் சபை இன்னைக்கு கூடப் போகுதாமே; வாங்கய்யா நாமும் போகலாம்)