காட்சி 4 / 47
காட்சி 4
காட்சி 4
மூல ஸ்கேன் 27, 28, 29, 30
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அமைச்சர் வீடு! அவரது மகள் கலாராணியின் அறை. கலாராணி தூங்கிக் கொண்டிருக்கிறாள். கதிரவனின் ஒளி, பலகணி வழியே அவள் படுக்கையில் பாய்கிறது. அவளது தோழி வஞ்சி, காலை உணவுகளை எடுத்துக் கொண்டு, அறைக்குள் பிரவேசிக்கிறாள், கலாராணி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து...)
வஞ்சி: கலாராணி - கலாராணி! சரிதான் - சந்திரனை அணைத்துக் கொண்டு தூங்கிய உனக்கு கதிரவனின் கரம் பட்டும் எழுந்திருக்க மனம் வரவில்லை போலும்!
கலாராணி: (சோம்பல் முறித்து எழுந்தபடி) என்னடி. இது? சந்திரனை அணைப்பதாவது; கதிரவனின் கரம் படுவதாவது?
வ: நிலவு எழுந்ததும் படுத்து விட்டாய் - சூரியன் கிளம்பியும் விழிக்க வில்லை! அதைத்தான் கவிதை நடையில் சொன்னேன்.
கலா: கவிதை நடையில் சொன்னாயாக்கும் - சந்திரனை அணைப்பது - கதிரவன் கரம் - படுவது - நான் என்ன தாரையா? அல்லது தாமரையா? நல்ல வேலை இரண்டு பேரோடு விட்டாயே; இன்னும் மூன்று பேரைச் சொல்லாமல் இதோ பார்; வஞ்சி! இனிமேல் இம்மாதிரி கண்ணை மூடிக் கொண்டு கவிதை நடையில் உளறாதே!
வ: கண்ணை மூடிக் கொண்டு நான் ஏன் உளறுகிறேன்? அப்படிக் கனவிலே உளறுவது, இந்தக் கலாராணிதான்!
கலா: கனவிலே உளறினேனா? என்னடி உளறினேன்?
வ: அய்யோ - அதைச் சொல்ல எனக்கே வெட்கமாயிருக்கிறதே?
(வஞ்சி கலாராணியைக் கிண்டல் செய்யும் பாவனையில்)
கண்ணாளா! உங்கள் இன்பமுகம் மறந்து போச்சே! இத்தனை நாள் என்னை ஏன் பிரிந்து சென்றீர்கள்?... ஆகா என் மீது உங்கள் கரம் படுவது; அய்யோ - என்னை மெய் மறக்கச் செய்கிறதே! வான விளக்கு எரியும் போது, வீட்டு விளக்கு எதற்காக? நிறுத்தி விடட்டுமா? அன்பரே! சுவாமி! பிராணநாதா!... ஆருயிரே! என்னை மறக்க மாட்டீர்களே? இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல; எல்லா ஜென்மங்களிலும் நாம் சேர்ந்தே பிறப்போம்.. இரட்டைக் குழந்தைகளாக!
கலா: சீ!... இப்படியெல்லாம் உளறியிருக்க மாட்டேன்... நீ கற்பனை செய்கிறாய்; குறும்புக்காரி...
வ: சரி, போகட்டும்! ஆமாம் கலாராணி! கொஞ்ச நாளாகவே ஏதோ சிந்தனையில் இருக்கிறாயே, என்ன அது?
கலா: ஒன்றுமில்லையடி! உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்... பிறகு சொல்லுகிறேன்...
வ: “கா” வன்னா விஷயம்தானே, கலாராணி!
கலா: போடி!... (கலைந்து கிடக்கும் கூந்தலை சீவிக் கொள்கிறாள்)
வ: சரி!.. முதலில் சாப்பிடு.
கலா: அதுசரி, பல் கூட துலக்க வேண்டாம் போலிருக்கிறதே!
வ: முத்துக்களைத் துலக்குவார்களேன்? முல்லை அரும்புகள் என்பார்களே பற்களை; துலக்கினால் கசங்கி விடுமே.
கலா: ஏ, கவிதைப் பைத்தியம் - இரு, இரு - வருகிறேன்!
(கலாராணி, பல் துலக்க, அறையை விட்டு வெளியேறுகிறாள், அமைச்சர் குணசீலர் அறைக்குள் வருகிறார், அவர் வஞ்சியிடம்)
குணசீலர்: என்ன வஞ்சி - கலாராணி எங்கே?
வ: இப்போதுதான் உதயமானாள் - காலைக் கடன் என்னும் மேகத்தில் மறைந்திருக்கிறாள் - வந்து விடுவாள்?
குண: இரவு அதிக நேரம் விழித்துக் கொண்டிருந்தாளா? எங்கே போனீர்கள்? அரண்மனைக்கா? அரண்மனையில், அரசரைச் சந்தித்தீர்களா? அரசரோடு கலா பேசினாளா? பேசும்போது நீயும் கூட இருந்தாயா? என்ன பேசினார்கள்? திருமண விஷயமாக ஏதாவது அரசர் வாய் திறந்தாரா? கலாராணி அதற்குச் சம்மதம் தெரிவித்தாளா? சம்மதத்தைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தாரா? அரசரும் கலாவும் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்...?
வ: உங்களது ஆயிரம் கேள்விகளுக்கு அடியாள் சொல்லும் ஒரே பதில் என்னவென்றால், கலாராணி அரண்மனைக்குப் போகவுமில்லை - அரசரைப் பார்க்கவுமில்லை.
குண: என்ன? போகவில்லையா? வஞ்சி - உன்னிடம் எத்தனை தடவை சொல்லிவிட்டேன் - அரசரையும் கலாராணியையும் சந்திக்க வைத்து, இருவரிடையே காதலை உண்டுபண்ண வேண்டியது உன் கடமை என்று எத்தனை தடவை சொல்லி விட்டேன்.
வ: பிடிவாதத்திற்கு மருந்து ஏது பிரபு? நான் எவ்வளவுதான் சொன்னாலும், அவள் அரசரைச் சந்திக்க விரும்புவதே இல்லை.
குண: வஞ்சி! அரசர் மீது அவளுக்கு எப்படியும் காதல் ஏற்பட வேண்டும்.
வ: என்ன செய்வது? திங்களுக்கு அரசர் மீது ஏற்படும் காதல் கூட அவளுக்கு ஏற்படவில்லை.
குண: எனக்கு அரசர் மீது அல்ல காதல் - மணிமகுடபுரியின் சிம்மாசனத்தின் மீது! அரசர் - கலாராணி திருமணம் நடந்து விட்டால் - என்னுடைய மருமகன் மணிமகுடத்தை ஆளுகிறான் என்பேன்! பிறகு என்னுடைய பேரன் ஆளுகிறான் என்பேன்! மணிமகுடபுரி கொலுமண்டபத்தின் மீது இந்தக் குணசீலரின் குலக் கொடியல்லவா படரும்?
வ: கவலைப் படாதீர்கள் பிரபு! - அரசனுக்கு நான் எப்படியும் வலை வீசுகிறேன்.
குண: என்ன நீயா?
வ: ஆமாம் - கலாராணி என்ற வலையை வீசுகிறேன்.
குண: சபாஷ் வஞ்சி - அந்த வேலையை உன்னிடம் ஒப்புவித்து விட்டேன். வெற்றிகரமாகச் செய் - அரசருக்கும் கலாராணிக்கும் விரைவில் விவாகம் நடைபெற வேண்டும்.
வ: அதற்கு நான் பொறுப்பு.
குண: பேரன் பிறக்க வேண்டும்.
வ: அதற்கு நான் பொறுப்பல்ல - பேத்தி கூட பிறக்கலாம்.
(அமைச்சர் அறையை விட்டு சிரித்தபடி போகிறார்)