பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 3 / 47

காட்சி 3

காட்சி 3

மூல ஸ்கேன் 24, 25, 26

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மக்கள் மன்றம் - அதே இரவு - அல்லியும் தொண்டர்களும் கவிஞரும் இருக்கிறார்கள்)

“பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்ற தாய்மாரே, நல் இளஞ்சிங்கங்காள்!”

என்று தொடரும் பாரதிதாசன் பாட்டைப் பாடுகிறார்.

அல்லி: அருமையான கவிதை - கவிஞரே!... பாம்புக் கூட்டம் போராடும் பாழ் நிலத்தைப் புதுக்கியவர் யார்? எழுச்சி நிறைந்த கேள்வி - இந்த கேள்வி மணிமகுடபுரியின் மக்கள் இதயத்திலே கிளம்புமானால் - “யார்?”, “யார்?” என்ற கேள்விக்குறி - அங்கிங்கெனாதபடி எங்கும் தோன்றி விடுமானால் - ஒரே நாளில் மணிமகுடம் மக்கள் மகுடமாகி விடும்!

கவிஞர்: அல்லி! கவிஞரின் நெஞ்சிலே பிறந்த கவிதைக் குழந்தை உன்னைப் போன்ற வீரப் பெண்மணிகளால் தாலாட்டி வளர்க்கப்பட வேண்டும்!

அல்லி: தாலாட்டுவதா? ஐயோ.. எழுச்சி மயமான கவிதைக் குழந்தைகளை நான் தாலாட்டி தூங்க வைக்க மாட்டேன். மக்கள் இதயமெனும் தாழ்வாரத்திலே தவழ விடுவேன். வேல் கைக் கொடுத்து “வென்று வா” என அனுப்புவேன் - கவிஞரே - இப்படி உணர்ச்சிக் காவியங்களை, ஏழைகளை வாழவிக்கும் உரிமைப் பாடல்களை, கோழையையும் கொள்கை வீரனாக்கும் கவிதை வரிகளை... எழுதி எழுதி குவியுங்கள்! குனிந்து கிடக்கும் விடுதலை உணர்ச்சி, கொடியேந்திக் கிளம்பட்டும்! கூனன் நிமிரட்டும்! குருடன் கண் பெறட்டும் - ஊமை பேசட்டும் - உரிமை வெல்லட்டும்! ஊரும், உலகமும் வாழட்டும்!

(அப்போது பொன்னழகன், புதுமைப்பித்தன், கருப்பு ரோஜா மூவரும் வருகிறார்கள்)

பொன்: அல்லி - இவரைத் தெரியுமா உனக்கு? இவர் பெயர் புதுமைப் பித்தன்.

அல்லி: வணக்கம்.

புது: வணக்கம்.

பொன்: தற்செயலாக சந்தித்தேன். ஆனால் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகிற்று! இவர் - புரட்சிக் கருத்துக்கள் கொண்டவர் - ஆட்சிப் பீடம் மக்கள் கைக்கு மாற வேண்டும் என்பதிலே என் கொள்கையும், மக்கள் மனவளம் பெற வேண்டும்; அப்போதுதான் அவர்கள் ஆட்சி புரியத் தகுதியுள்ளவர்கள் என்பதிலே உன் கொள்கையும் கொண்டவர்.

அல்லி: சுருக்கமாகச் சொல்லுங்களேன் - மொத்தமாக என் கொள்கை கொண்டவர்.

கருப்பு ரோஜா: மன்னிக்க வேண்டும் - தலைவர் என்னை அறிமுகப்படுத்த தவறி விட்டார் - இல்லை; மறந்து விட்டார் - நான்தான் கருப்பு ரோஜா! கிட்டத்தட்ட உங்கள் கொள்கையுடையவன் - என்னையும் இங்கே அங்கத்தினராக...

பொன்: நான்தான் முன்பே சொன்னேனே! நீ அங்கத்தினராக - இன்னும் ஆறு மாதம் செல்லும் - அதுவரை நீ வேண்டுமானால் இங்கே இருக்கலாம் - அல்லி! புதுமைப் பித்தரை நமது மன்றத்தின் அங்கத்தினராக ஆக்குவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை...

அல்லி: பிறகென்ன? மன்றத்தின் சட்ட திட்டங்களைக் கூறிவிட்டீர்கள் அல்லவா?

புது: எல்லாம் முடிந்து விட்டது. கையெழுத்துப் போட வேண்டியதுதான்... பாக்கி...

(அல்லி ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் கையெழுத்துப் போட நீட்டுகிறாள், புதுமைப்பித்தன், பேனாவைக் கையில் வாங்குகிறான்.

அல்லி: தயவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு...

புது: என்ன உறுதிமொழி?

அல்லி: மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன்.

புது: மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன்.

அல்லி: மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன்.

புது: மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன்.

அல்லி: நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன்.

புது: நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன்.

அல்லி: உம் - கையெழுத்துப் போடுங்கள்.

புது: உம் - கையெழுத்துப் போடுங்கள்.

அல்லி: (சிரித்தபடி) இல்லை - கையெழுத்துப் போடுங்கள் என்கிறேன்.

புது: மன்னிக்கவும் (என்று கூறியபடி கையெழுத்திடுகிறான்)