பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 2 / 47

காட்சி 2

காட்சி 2

மூல ஸ்கேன் 20, 21, 22, 23, 24

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(ஏழை மக்கள் வாழும் குடிசைகள். இருளைப் போக்குவதற்காக அவர்கள் வீடுகளில் மின்மினி போன்ற விளக்குகள், குடிசைகளின் வெளிப்புறங்களில் படுத்திருப்போரும் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை பேசுவோருமாக எலும்பு உடலினர் பலர். அந்தப் பக்கம் பொன்னழகன், புதுமைப்பித்தன், கருப்பு ரோஜா மூவரும் வருகிறார்கள். பொன்னழகனைக் கண்ட ஏழைகள் அனைவரும் எழுந்து ஆவலுடன் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். “தலைவர் ஐயா வந்துவிட்டார்; தலைவர் ஐயா வந்துவிட்டார்” என்று கூறிக் கொண்டே பொன்னழகனை வணங்குகிறார்கள்)

பொன்: என்ன ஏதாவது புதிய செய்திகள்...?

ஒரு கிழவர்: இல்லாம இருக்குமா? பக்கத்து தெருவிலே ஏழு பேருக்குப் பேதி கண்டு இரண்டு தீர்ந்து விட்டது... நாலு பிழைக்கிறது சந்தேகம்.

பொன்: பேதியா? நேற்று வரும்போது நான் கேள்விப்படவில்லையே - அரசாங்க வைத்திய இலாகாவுக்குச் சொல்லி அனுப்பினீர்களா?

கிழ: சொல்லி அனுப்பினோம். கவனிக்கிறோம் என்று சொன்னார்கள்.

பொன்: கவனிப்பார்கள். எத்தனை பிணம் போகிறது என்று கவனித்துக் கொண்டிருப்பார்கள். பெரியவரே, காலையிலேயே எனக்காவது சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா?

கிழ: சொல்லி அனுப்பினோம். நீங்கள் இல்லையென்று சங்கத்திலிருந்து அல்லியம்மாவும், நாலைந்து தொண்டர்களும் வந்து, தேவையான உதவிகளை எல்லாம் செய்தார்கள். பேதி தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள். அரசாங்க வைத்திய இலாகாவுக்கு - அவர்களும் அவசரச் செய்தி அனுப்பினார்கள். செத்துப்போனப் பிணங்களைத் தூக்கக் கூட நாதியில்லை - வசதியில்லை; அல்லியம்மாளும் தொண்டர்களும் சேர்ந்து அந்தப் பிணங்களையெல்லாம் அப்புறப்படுத்தி தெருவெல்லாம் சுத்தம் செய்துவிட்டுப் போனார்கள்.

பொன்: புதுமைப்பித்தரே பார்த்தீரா. பாராள்வோரின் தகுதியை! பாட்டாளி மக்கள் வறுமையால் சாவது போதாது; அம்மை, பேதியாலும் செத்து ஒழியட்டும் என்று நினைத்துக் கொண்டு நிம்மதியாக ராஜநடை போடுகிற ஆட்சியை எங்கேயாவது காண முடியுமா? இந்த மணிமகுடபுரியைத் தவிர!

புதுமை: உலக வரலாறு இதைவிட, பயங்கரமான ராஜரீகங்களையெல்லாம் கண்டிருக்கிறது - ஆனால் அந்த மதோன்மத்தர்களின் ஆட்சியிலே மண் படிந்து விட்ட காட்சிகளை இன்று மணிமகுடபுரியின் ஆட்சிச் சக்கரத்தை இயக்குவோர் மறந்து விட்டிருக்கிறார்கள் - அவ்வளவுதான்.

(அப்போது ஒரு அரண்மனை அதிகாரி அங்கு வருகிறான் - அவன் அங்குள்ள ஏழைகளை கம்பீரமாகப் பார்த்து)

அதி: இங்கு பேதி பரவி இருப்பதாக அரண்மனை வைத்திய இலாகாவுக்கு மனுச் செய்து கொண்டவர் யார்?

கிழ: நாங்கள்தான்.

அதி: உங்கள் மனு மந்திரியாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. குருநாதர் யோசனைப்படி, நீங்கள் உடனே மாரியம்மனுக்கும், காளியம்மனுக்கும் திருவிழா நடத்தி, பிரார்த்தனை செய்து கொண்டால், பேதி விலகிவிடும் - வேறு வைத்தியம் தேவையில்லை...

பொன்: என்ன?... யார் யோசனை? பேதி மருந்து காளியம்மன் பூஜையா?

அதி: ஆமாம் காளிதேவியின் கோபத்தினால்தான் பேதி வந்திருக்கிறது.

புது: காளி தேவிக்கு, என்னப்பா கோபம்?

கருப்புரோஜா: புதிய சேலை, ரவிக்கை கேட்டிருப்பாள்? கொடுத்திருக்க மாட்டார்கள்.

அதி: யாரடா பொடி முட்டாளே...

புது: அதிகாரியாரே, ஆத்திரப்படாதீர். நீர் என்னிடம் பதில் சொல்லும் - காளிக்கும், மாரிக்கும் பூஜைகள் நடத்தி நோய்களை விரட்ட முடியுமானால், அரசாங்க சார்பிலே ஒரு வைத்திய இலாகா எதற்கு?

அதி: அதெல்லாம் எனக்குத் தெரியாது. மணிமகுடபுரியின் குருநாதர் கட்டளையிடுகிறார். நான் கடமையை நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான் - நீங்கள் எப்படியாவது கெட்டுப் போங்கள் - எனக்கென்ன வந்தது?

(அதிகாரி போய்விடுகிறான்)

புது: மணிமகுடபுரியின் குருநாதர் - மண்ணாங்கட்டி - மக்களை மாக்களாக மதிக்கும் மண்டூகம் - அவன் கட்டளையிடுகிறானாம் - பேதி தீர காளி பூஜை செய் என்று.

கிழ: அப்போ குருநாதரைத் திட்டாதீர்கள் - அவர் கடவுள் அவதாரம்.

புதுமை: ஆமாம் - எல்லாருமே கடவுள் அவதாரம் - அரசன் ஒரு கடவுள் அவதாரம் - அமைச்சன் ஒரு கடவுள் அவதாரம் - அரசாங்க குருநாதர் ஒரு கடவுள் அவதாரம் - எல்லோருமே அவதாரம்; சீமான்கள் சபையிலே இருக்கிற பத்து அங்கத்தினரும், தசாவதாரம் - நல்ல நாடு - நல்ல நம்பிக்கையையா இது. பெரியவரே சொல்லுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள் - கடவுள் - அவருக்குத் தரப்படும் லட்சணங்களின்படி, மிகவும் தூய்மையானவர் என்று கூறப்படுகிறது - அந்தத் தூய்மையானவர் இப்படித் துரோக அவதாரங்கள் எடுக்க மாட்டார்.

கிழ: அது என்னமோ தம்பி பெரியவங்க காலத்திலே இருந்து...

புது: இப்படித்தான் அடிமையாக வாழ்கிறது நமது ஏழைகள் குலம் - இதற்கு ஒரு மாறுதல் தேவையில்லையா?

கிழ: விதியை மாற்ற வேண்டுமே? முடியுமா?

புது: விதி என்பது சட்டம்தானே - வலிமையுடையவன் வலிமையற்றவன் மீது அதிகாரம் செலுத்த வகுத்துக் கொண்ட முறைதானே பெரியவரே, விதி என்பது.

பொன்: நண்பரே, இந்த விளக்கங்களைப் பிறகு வைத்துக் கொள்வோம் - பெரியவரே, நீங்கள் எல்லாம் போகலாம் - நான் நாளை காலையிலே வருகிறேன் - இப்போது பேதிகண்டுள்ள பகுதிக்குப் போய், ஆக வேண்டியதைக் கவனிக்கிறேன்.

கிழ: சரிங்க -

(கிழவரும் மற்றவர்களும் போய் விட அங்கிருந்து சிறிது தூரம் நடந்து கொண்டே - புதுமைப் பித்தனைப் பார்த்து)

பொன்: இந்த மக்கள், கடவுள், விதி, சாஸ்திர சம்பிரதாயம் இவைகளிலே கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை நான் எடுத்துச் சொல்வதில்லை - அவர்கள் போக்கிலேயே நானும் போய் எல்லாரையும் அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டுகிறேன்.

புது: அதுதான் தவறு என்கிறேன் நான். அரசனுக்கு விரோதியாக மட்டும் மக்களை ஒன்று திரட்டிப் பயனில்லை. இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பது அரசன் அல்ல - அவன் ஒரு பொம்மை - எத்தனின் கையிலேயுள்ள ஏடும், மதப் பித்தனின் நெஞ்சிலே உள்ள கேடும், அதிகார வர்க்கமெனும் மணல் மேடும்தான், இந்த நாட்டை ஆட்டிப் படைக்கின்றன - இந்த ஆட்சி மக்கள் கைக்கு மாற வேண்டுமானால், மக்கள் உள்ளம் முதலில் பண்பட வேண்டும் - களவாடப்பட்ட நெல்மணிகளைத் திரும்பப் பெற்று, காய்ந்து கிடக்கும் கழனியிலே தெளித்துப் பயனில்லை - முதலில் அறிவு ஒளி - அதையொட்டித்தான் ஆட்சி ஒளி.

பொன்: ஏறத்தாழ இதே கருத்துத்தான் எங்கள் அல்லிக்கும் - நான்தான் சிறிது வேறுபாடுடையவன்...

புது: வேறுபாடு என்றால் பரவாயில்லை... முரண்பாடுதான் இருக்கக் கூடாது.

பொன்: சரி, போகலாமா?

(மூவரும் போகிறார்கள்)