காட்சி 1 / 47
காட்சி 1
காட்சி 1
மூல ஸ்கேன் 14, 15, 16, 17, 18, 19
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(இரவு நேரம் - மணிமகுடபுரியின் மாடவீதியில் ஒரு தெருவிளக்குக் கம்பத்திலே சாய்ந்தபடி ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். அப்போது கையிலே பத்திரிகைக் கட்டுகளுடனும், ஒரு ரோஜா மலருடனும் ஒரு குள்ளமான மனிதன் அங்கு ஓடி வருகிறான். வந்தவன் விளக்கடி மனிதனிடம் ஓடிவந்து)
குள்ளன்: பொன்னழகன் மட்டும் தனியாக வந்து கொண்டிருக்கிறான்... நம்ப நாடகத்தை ஆரம்பிக்கலாமா?
விளக்கடி மனிதன்: ஓ... ஆரம்பிக்கலாம்!... உலகப்பா! - ஜாக்கிரதை! நான் சொன்னதை யெல்லாம் மறந்து விடாதே!
குள்: அதெல்லாம், ஒத்திகைப்படியே சரியா செய்வேன்...
(என்று கூறிவிட்டு, குள்ள மனிதன் பத்திரிகைக் கட்டுடன் வேறிடம் போய் ஒளிந்து கொள்கிறான். விளக்கடி மனிதன் தன் உடைகளை சரிபார்த்துக் கொண்டு நீண்ட மீசையை சரியாக முறுக்கி விட்டுக் கொண்டு, கன்னத்தின் மேற்புறத்தில் பெரியதும், கரியதுமாக வளர்ந்திருக்கும் மருவைக் கையால் தடவியபடியே ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். அப்போது குள்ள மனிதன், தான் குறிப்பிட்ட பொன்னழகன் என்னும் ஆள் அருகே வருவதைப் பார்த்து விட்டு, விளக்கடி மனிதனிடம் வந்து...)
குள்: மக்கள் தொண்டன் பத்திரிகை வேணுமா; மக்கள் தொண்டன்! விலை இரண்டே பணம்தான்! மக்கள் தொண்டன்... விலை இரண்டே பணம்தான்...! மக்கள் தொண்டன்...!
(விளக்கடி மனிதன், கவனிக்காதது போல நிற்கிறான். அப்போதே பொன்னழகன் என்பவனும் அந்தப் பக்கம் வருகிறான். குள்ள மனிதன் விளக்கடி மனிதனிடம் வந்து நின்று, அவன் ஆகாயத்தைப் பார்த்து சிந்திப்பது போலவே தானும் ஆகாயத்தைப் பார்த்து சிந்திப்பது போல நடித்து)
குள்: ஏ, சந்திரனே! நீ ஒரு கற்கண்டுக் கட்டி! உன்னைச் சுற்றி இந்த நட்சத்திர எறும்புகள், மொய்த்திருக்கின்றனவே, ஏன்? ஆகா - இதோ, இந்த ஆகாயத்து வெள்ளை எறும்புகளை எண்ணப் போகிறேன் - ஒன்று! இரண்டு! மூன்று! நான்கு! ஐந்து! ஆறு!...
(விளக்கடி மனிதன் சிரித்தபடி குள்ளனின் முதுகில் தட்டிக் கொடுத்து)
வி.மனிதன்: என்னப்பா நட்சத்திரங்களை எண்ணுகிறாயா? ஆறு வரையில்தான் இதுவரை எண்ணியிருக்கிறாய்?
குள்: ஆறு என்றால் ஆறு லட்சம் எண்ணியிருக்கிறேன்.
வி.மனிதன்: சந்திரன் ஒரு கற்கண்டு நட்சத்திரங்கள் அதைச் சுற்றியுள்ள எறும்புகள்! சபாஷ்! நல்ல கற்பனை...
குள்: அதுவும் என் சொந்தக் கற்பனை..
வி.மனிதன்: மிகவும் சரி! ஆனால் - இந்தக் கற்கண்டை, இந்த எறும்புகள் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றனவே; எறும்புகளின் குணம் அதுவல்லவே - கற்கண்டின் மேலேயே போய் மொய்த்துவிட வேண்டுமே!
குள்: அதென்னமோ எனக்குத் தெரியாது - பெரிய தத்துவ ஞானியும், மக்கள் தொண்டன் ஆசிரியருமான ஸ்ரீஜத் அரிஹரநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார் - இதோ பத்திரிகை! (நீட்டுகிறான்)
(விளக்கடி மனிதன் பத்திரிகையை வாங்குகிறான். இந்த உரையாடல்களை பொன்னழகன் என்னும், அந்த கட்டு மஸ்தான தோற்றமுள்ள மனிதன், தனது குறுந்தாடியைத் தடவியபடி ரசித்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறான்)
வி. மனிதன்: (குள்ளனிடம்) அப்பனே! மக்கள் தொண்டன் ஆசிரியர், சந்திரனைக் கற்கண்டு என்றும் நட்சத்திரங்களை எறும்புகள் என்றும் கூறினார் அல்லவா? இப்போது நான் ஒன்று கூறுகிறேன், கேள்! சிலந்தி வலை பார்த்திருக்கிறாய் அல்லவா?
குள்: அது என்ன அத்திப்பூவா? ஆடிப் பிறையா? பார்த்திருக்கிறேன்.
வி.மனிதன்: அந்த சிலந்தி வலையை ஞாபகம் வைத்துக் கொண்டு, இப்போது ஆகாயத்தைப் பார்! அழகான குளிர்மயமான அந்தப் பூரண சந்திரன், ஒரு சிலந்தி போலவும் - அந்த ஒளி விடும் நட்சத்திரங்கள், சிலந்தி வலையில் சிக்கி உயிர்விடும் பூச்சிகளைப் போலவும், காட்சி தருகின்றன அல்லவா?
குள்: ஆமாம்! - ஆமாம்!
வி.மனிதன்: இதைப் போலத்தானிருக்கிறது நம்முடைய நாடும்! அதாவது ஆட்சிப் பீடமானது...
குள்: சந்திரனைப் போலவும், ஜனங்கள் நட்சத்திரங்களைப் போலவும்...
வி.மனிதன்: ... என்று மக்கள் தொண்டன் பத்திரிகை எழுதும்! நான் சொல்லுகிறேன். ஆட்சிப் பீடம் சிலந்தி போலவும், மக்கள் அதன் வலையில் சிக்கிவிட்ட பூச்சிகள் போலவும் என்று!
குள்: சரியான பேச்சு - ஒரு வேளை நீங்கள் அந்த மக்கள் மன்றத்து உறுப்பினரோ?
வி.மனிதன்: இல்லை - இது என் சொந்த அபிப்பிராயம். உனக்கு மக்கள் மன்றத்தைப் பற்றித் தெரியுமா?
குள்: தெரியுமே - பொன்னழகன் என்பவர் பெரிய தலைவர்! நல்ல பேச்சாளர்! தியாகி! அதேபோல அல்லி என்ற ஒரு பெண்மணி - அவளும் நன்றாகப் பேசுவாள்! அவர்கள் நடத்துகிற சங்கம் ஆட்சி பீடத்தை மாற்றி, ஜனங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறது! நான்கூட நினைக்கிறேன் - அந்த அரசனைக் கொண்டு விட்டால் நாடு உருப்பட்டுப் போய்விடும்.
வி.மனிதன்: அவசரப்படாதே! அரசன் என்ன செய்வான். பாவம்! அமைச்சரும், அரச குருவும் ஆட்டி வைக்கிறபடி ஆட வேண்டிய பொம்மை அவன்! அதிகாரமனைத்தும் சீமான்கள் சபைக்கு இருக்கிறது! நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு அரண்மனையிலே சுகவாசியாக வாழ வேண்டியதுதான் அரசனுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமை! ஆகவே, அரசனைக் குறைகூறிப் பயனில்லை! நாட்டை நாசமாக்கும் அழிவு சக்திகள் எங்கேயிருக்கின்றன என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்! அந்த அழிவு சக்திக்கு ஆதரவு அளிக்கும் பிற்போக்கு சக்தி இதோ உன் கையில் இருக்கிறது!
(குள்ளன் தன் கையிலுள்ள ரோஜா மலரைப் பார்த்துக் கொள்கிறான்)
குள்: ரோஜாப் பூவா?
வி.மனிதன்: இல்லை! நீ விற்பனை செய்து பிழைக்கிறாயே, இந்த மக்கள் தொண்டன் பத்திரிகை! இது ஒரு பிற்போக்கு சக்தி! கண்ணை மூடிக் கொண்டு ஆட்சிப் பீடத்தை ஆதரித்து, மக்களை சந்தியில் நிறுத்தும் இந்த ஏட்டுக்கு மக்கள் தொண்டன் என்று பெயர்! ஆட்சிப் பீடம் மக்கள் சுமக்க முடியாத வரிகளைப் போட்டபோது, இது மக்கள் பக்கம் நிற்பதில்லை! அரசுக்கு - ஆண்டவன் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களிடம் உண்டு பண்ணும் சச்சரவுகளை இந்த மக்கள் தொண்டன் இதுவரை கண்டித்ததில்லை! அரசனை தெய்வ அவதாரம் என்று கூறிவிட்டு, அரசன் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்கள் அத்தனைக்கும் இந்த ஏடு துதி பாடிக் கொண்டேயிருக்கிறது! முதலில் இந்த ஏடு அழிக்கப்பட வேண்டுமா - அழிக்கக் கூடாதா?
குள்: நீங்கள் சொல்வது மிகவும் உண்மை! உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு இந்தப் பத்திரிகையை விற்கவும் எனக்கு மனம் வரவில்லை. சே! இதை விற்றுப் பிழைப்பது மானத்தை விற்றுப் பிழைப்பது போல!
(பத்திரிகை கட்டுகளை தூர எறிகிறான். இந்த நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் தூர இருந்து கவனித்த பொன்னழகன் இவர்களிடம் நெருங்கி வருகிறான்)
வி.மனிதன்: யார் நீங்கள்?
பொன்னழகன்: புதுமை நிறைந்ததும் - நாட்டுப் பற்று மிகுந்ததுமான உங்கள் உரையாடலைக் கேட்டுக் களிப்புற்ற ஒருவன் - நீங்கள் யார்?
வி.மனிதன்: நான் ஒரு நாடோடி!
பொன்: பெயர்?
வி.மனிதன்: புதுமைப்பித்தன்.
பொன்: பொருத்தமான பெயர் - புதுமைப்பித்தரே! மணிமகுடபுரிதானே தங்களின் சொந்த நாடு...
புதுமைப்பித்தன்: ஆமாம்... தாங்கள்?
பொன்: பொன்னழகன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
குள்: அடடே - நீங்களா? நான் பொதுக்கூட்டத்தில் பார்த்திருக்கிறேனே - அடையாளம் தெரியாமல் போய் விட்டது...?
புதுமை: கிடைத்தற்கரிய வாய்ப்பு! உங்களைப் போன்ற உத்தமர்களை சந்திப்பதும் உரையாடுவதும் எத்தனை உற்சாக நிகழ்ச்சி தெரியுமா?
பொன்: அதைப்போலவே நானும் மகிழ்கிறேன். ஒரு ராஜாங்க விரோதியை சந்திக்கிறோம் என்ற எண்ணத்தில்!
புதுமை: நாடெல்லாம் அரசாங்கத்தின் விரோதிகள் - அல்லது - மக்களுக்கு நண்பர்கள்; அவ்வளவுதான்! பொன்னழகரே! ஒரு வேண்டுகோள்! நிறைவேறுமா?... தங்களோடு இணைந்து நின்று தாயகத்தின் மேன்மைக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்...
பொன்: நிச்சயமாக நிறைவேறும், தங்கள் ஆசை! எங்கள் சங்கத்தில் அங்கத்தினராகவே ஆகும் தகுதியுடையவர் தாங்கள் என்பது என் நம்பிக்கை!
குள்: நானும் கூட சேரலாமா...?
பொன்: எங்கள் கூட இருக்கலாம். சில மாதங்களுக்குப் பிறகே, நீ அங்கத்தினராகலாம் - உன் பெயர்?
குள்: அதான் - பெரிய விசேஷம்! நான் பிறந்தவுடனேயே எங்க அப்பா அம்மா செத்து விட்டார்கள்! செத்தவர்கள் எனக்குப் பெயராவது வைத்துவிட்டுப் போகக் கூடாதா? அதனால் பெயரில்லா மனிதன் நான்!
பொன்: உனக்கு ரோஜா மலர் மீது பிரியமாக்கும்?
குள்: ஆமாம்!
பொன்: நீ ஆளோ கருப்பு! உனக்குப் பிரியமோ சிகப்பு ரோஜா மீது!
குள்: என்ன பண்ணுவது; கருப்பு ரோஜா கிடையாதே!
புதுமை: நீதான் கருப்பு ரோஜாவாக இரேன்! உனக்கு இனிமேல் பெயரே கருப்பு ரோஜா...
பொன்: சரியான பெயர்...ம். போகலாமா? கருப்பு ரோஜா வா..வா!
(கருப்பு ரோஜாவும், புதுமைப் பித்தனும் ஒருவரை யொருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டு பொன்னழகன் பின்னே நடக்கிறார்கள்)