பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 21 / 21

காட்சி 21.

காட்சி 21.

மூல ஸ்கேன் 119, 120, 121, 122, 123, 124

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: திரவியம்பிள்ளை வீடு.

(மரகதம், கழகப் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருக்கிறாள்... தசாவதாரமும், கண்ணனும் வருகிறார்கள். பாட்டைக் கவனிக்கிறார்கள்.)

மரக:— யார்...

தசா:— மரகதம்... இவர்தான் கண்ணன், கடமை வீரர் கண்ணன்... கர்மவீரர் கண்ணன் காங்கிரஸ் மகாசபையின் பீரங்கி! பிரச்சார பீரங்கி! கண்ணா... இதுதான் மரககம் முதலாளியோட மகள்... அப்பாவுக்கு பொண்ணு நேர் எகெய்ன்ஸ்ட்டு!... டி. எம். கே... நீ முதல்ல கென்வாஸ் பண்ணவேண்டியது இந்த ஓட்டுத்தான். பேசுகிட்டு இரு... அம்மா... பாத்துக்க... நான் போயி... அய்யா மில்லிலே இருப்பாரு இப்பவே கூப்பிட்டுட்டு வந்துடுறேன்...

கண்:— சீக்கிரம் வந்துடுங்க...

தசா:— ஓ... இதோ வர்ரேன்...

(போகிறார்)

மரக:— உட்காருங்க...

கண்:— பரவாயில்லை...

மரக:— ஏதாவது சாப்பிடுறீங்களா?...

கண்:— வேண்டாம்...

மரக:— அப்பா வாரவரையிலும் சும்மா இருக்கிறதை ஏதாவது படிச்சுகிட்டு இருங்களேன்...

கண்:— பரவாயில்லை...

(மரகதம், “நண்பர்கள் கேட்பதற்கு” என்ற நூலைக் கொண்டு வந்து தருகிறாள்...)

கண்:— என்ன புத்தகம்?... “நண்பர்கள் கேட்பதற்கு” எழுதியவர் அண்ணாதுரை... ஆ!... இந்தப் புத்தகமா?...

(உதறியெறிந்து—துள்ளிக்குதிக்கிறான்...)

மரக:— ஏன்?... ஏன்?... தேள்கீள் இருந்துதா? புத்தகத்திலா?... கொட்டிட்டுதா? மருந்து போடவா?...

கண்:— இந்தத் தி.மு.க. குறும்பு மாத்திரம் போகாதே!... தேளுமில்லை ஒண்ணுமில்லை...

மரக:— அப்புறம் ஏன் புத்தகத்தைக் கீழே போட்டீங்க... துள்ளிக்குதிச்சீங்க?

கண்:— நான் தி.மு.க. புத்தகங்களைப் படிக்கிறதே இல்லை...

மரக:— சரி... திருக்குறள் படிச்சிருக்கீங்களா?... திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்?...

கண்:— ஏன் அவர் என்ன டி.எம்.கே. லீடரா?... திருக்குறள் நிறைய படிச்சிருக்கேன்... ஏன் அதைக்கேக்கிறே?

மரக:— “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்ற குறளைப் படிச்சிருக்கீங்களா?

கண்:— படிச்சிருக்கேன்...

மரக:— அதற்கு என்ன அர்த்தம்...

கண்:— எந்தக் கருத்தை யார், யார் சொல்லக் கேட்டாலும் அந்தக் கருத்தினுடைய உண்மையைப் பகுத்து அறிவதுதான் அறிவு!...

மரக:— அப்படியிருக்கும்போது அண்ணா சொன்னா கேட்கமாட்டேன்... அவர் எழுதினா படிக்கமாட்டேன்... அப்படின்னு முரட்டுத்தனமா பேசுவது வள்ளுவர் குறளுக்கே முரணான வாதமல்லவா?

கண்:— சரி... அதிலே என்னதான் எழுதியிருக்கு; சொல்லு பார்க்கலாம்...

மரக:— சொல்லுகிறேன்...

(புத்தகத்தை எடுத்து—கம்பீரமாக)

தி.மு.க. உழைப்பின் உருவம்! தி.மு.க. பல தியாகிகளின் குருதிகொட்டப்பட்டுக் கட்டப்பட்ட பாசறை! தி.மு.க. காங்கிரஸ் தேச்சாதிகாரத்தை எதிர்த்திடும் போர்முகாம். தி.மு.க. முப்பத்து நாலு லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சி. தி.மு.க. தமிழகச் சட்டமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சி. தி.ம.க. நாள் கவறுமல் மக்கள் தொடர்பு கொன்—ஜனநாயக அமைப்பு. தி. மு.க. வரும் தேர்தலில் ஆளுங்கட்சியாக வளரக்கூடியது என அறிவாளர் கூறிடும் நிலைபெற்றுள்ள அறமன்றம். தி.மு.க. அழிக்கப்பட்டுவிட்டால், மக்களாட்சி முறைக்கே பேரிடி ஏற்பட்டு விடும். தி.மு.க. தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மொழிகாத்திட, வளம்பெற்றிட, புதுவாழ்வு கண்டிட முடியும்... இதெல்லாம் கூறுகிறது இந்த எழுச்சி ஏடு...

கண்:— உங்களைப் பத்தியே சொல்லியிருக்கா! எங்களைப் பற்றி ஒண்ணும் இல்லியா?...

மரக:— உங்களைப் பற்றி நிறைய இருக்கு... இதோ... படியுங்கள்—

(புத்தகத்தை அவன் கையில் தந்து... ஏட்டைப் புரட்டிக்காட்டி)

“காங்கிரசாட்சி எதேச்சாதிகாரப் போக்கில் நடந்துகொள்கிறது... எப்படி நடந்து கொண்டாலும் தட்டிக்கேட்பவர் இல்லை என்ற துணிவு பெற்று விட்டிருக்கிறது... நீங்களே படிங்க...

(அவன் மேலே தொடர்ந்து படிக்கிறான்)

(படித்தல்)

கண்:— காங்கிரசாட்சி பொதுவாக மக்களுக்குப் பயன்படும் படியாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலத்திட்ட வசதிகளை, கட்சி விளம்பரத்திற்கே பயன்படுத்திக்கொள்கிறது—காங்கிரசாட்சி, விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக உள்ள கடன், மானியம், ஏர், எருது, உரம் போன்ற வசதிகளை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே சுலபமாகப் பெறக் கூடிய விதமான நடைமுறையைப் புகுத்திவிட்டிருக்கிறது...

காங்கிரசாட்சி, தொழில்கள் துவக்க அனுமதி தருவதிலே கூடக் கட்சிக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்கிறது...

காங்கிரசாட்சி, கூட்டுறவுத்துறை எனும் தூய்மையான அமைப்பைக் கூடக் கட்சிச் சதுரங்கக் காய்களாக்கி விட்டிருக்கிறது. காங்கிரசாட்சி, தொழில் வளத்தைப் பெருக்கும் சாக்கிலே, முதலாளித்துவ முறையை வலுவுள்ளதாக்கி விட்டது.

காங்கிரசாட்சி, நிலப் பிரபு முறையை ஒழிக்கச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், பலவிதமான விலக்குகள் அளித்து காங்கிரஸ் கட்சிக்கு வேண்டியவர்களைப் பிரபுக்களாகவே இருக்க வழி செய்து கொடுத்திருக்கிறது.

காங்கிரசாட்சி, முதலாளிகள் பிரபுக்கள் போதாதென்று வியாபாரத் துறையில் லைசென்ஸ், பர்மிட் முறைகளைப் புகுத்திப் பலரைத் திடீர்ப் பணக்காரர்களாக்கி, அவர்களைக் கட்சியை ஊட்டி வளர்ப்போராக ஆக்கிக்கொள்கிறது.

காங்கிரசாட்சி, பெரிய முதலாளிகள் செலுத்த வேண்டிய வருமானவரி மிகப் பெரிய அளவு ஏமாற்றப்படுவதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுவதன் மூலம் அந்த முதலாளிகளின் மோசடிக்கு உடந்தையாகி விடுகிறது.

காங்கிரசாட்சி, கள்ள மார்க்கெட்டும் கொள்ளை லாபமும் இருப்பதை அறிந்தும், அந்தக் கேடுகளை ஒழித்திட வழி வகுக்காமல் அதனையும் தன் கட்சி நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது.

காங்கிரசாட்சி, கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டியும் உணவு உற்பத்தியில் போதுமான நிலையைப் பெற முடியாமல் இருந்து வருகிறது.

காங்கிரசாட்சி, செல்வவான்களுக்குப் போடப்படும் நேர்முக வரியைவிட, மிக அதிகமான அளவுக்கு ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்கும் மறைமுக வரியைச் சுமத்திக் கொடுமை செய்கிறது.

காங்கிரசாட்சி, உழவர்கள் உரிமை கேட்கும் போதும்—தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கும் போதும் சாதாரண அலுவலர்கள் தமது குறையைக் களையும்படி கோரும் போதும் சீறி விழுந்து அவர்களை அடக்கி, முதலாளிக்குப் பக்கத் துணையாக நிற்கிறது—

காங்கிரசாட்சி, ஏழை நடுத்தர மக்களை வேதனைக்குள்ளாக்கும்.

கண்:— (படித்தல்) விலைவாசி ஏற்றத்தைப் போக்கத் துணிவான முயற்சியை மேற்கொள்ள மறுக்கிறது.

காங்கிரசாட்சி, வெளிநாட்டு முதலாளிகளுக்கு இங்கு இடங்கொடுத்து வளரவிடுவதின் மூலம், பெரியதோர் எதிர்கால ஆபத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது—

காங்கிரசாட்சி, கட்சி வளருவதற்காகச் சமதர்மத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு ஜனநாயகத்தைப் பாழ்படுத்துகிறது.

ஆட்சி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியில் தியாகப் பரம்பரை வெகுவாகக்குறைந்து போய் கொள்கை இல்லாதவர்களும், சுயநலச் சுரண்டல்காரரும், காங்கிரசாராகிக் கட்சியைக் கைப்பற்றி, அதன் மூலம் நிர்வாகத்தைத் தம் கைப்பாவை ஆக்கிக் கொள்ள இடம் கொடுத்துவிட்டிருக்கிறது...

(குமுறலுடன்)

கண்:— உண்மை—உண்மை—நூற்றுக்கு நூறு உண்மை.....

(மேலும் படித்தல்)

காங்கிரசாட்சி, இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டி மற்ற மொழிக்காரர்களை மட்டந்தட்ட முனைந்து நிற்கிறது.... மரகதம்! எல்லாம் சரி.... இத்த மொழிக்கொள்கையில்தான் எனக்குக் கருத்து வேறுபாடு...

மரக:— என்ன?

கண்:— இந்தியாவுக்கென்று ஒரு தேசிய மொழி வேண்டாமா?

மரக:— ஒன்றென்ன; 14 மொழிகள் இருக்கின்றனவே...

கண்:— எல்லா மொழி பேசும் மக்களையும் இணைக்கும் பொது மொழி—இணைப்பு மொழி—வேண்டாமா?

மரக:— இந்தியாவிலுள்ளவர்களை மட்டுமல்ல; உலகத்திலுள்ளவர்களை யெல்லாம் இணத்திடும் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கிறதே போதாதா? பூனை போக ஒரு வழியும், அதன் குட்டி போக ஒரு வழியுமா தேவை! ஒரே வழியில் இரண்டும் போகலாமே!

கண்:— வட இந்தியாவில் வேலை செய்யப் போக வேண்டுமென்றால்... இந்தியின் துணை வேண்டாமா?

மரக:— வட இந்தியாமுழுதும் இந்தி இல்லை. வங்காளத்துக்குச் சென்றால் வங்காளி... பஞ்சாபுக்குச் சென்றால் பஞ்சாபி... ஓரிசாவுக்கு சென்றால் ஓரியா... மகாராஷ்டிரத்துக்குச் சென்றால் மராட்டி; அந்த மாநிலங்களின் தொடர்புக்கும்—வெளி நாடுகளின் தொடர்புக்கும் ஆங்கிலம் போதும்... இந்தி வேறு தேவையில்லை...

கண்:— ஆங்கிலம் அந்நிய மொழியல்லவா?

மரக:— பல்வேறு கலாச்சாரங்கள்—பழக்க வழக்கங்கள்—மொழிகள் இருக்கும் நாட்டில்... ஒரு மொழிக்காரனுக்கு மற்ற மொழி அந்நிய மொழிதான்... ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்த யார்தான் விரும்ப முடியும்?.... அதனால்தான் பதினாறு தேசிய மொழிகளும் ஆட்சிமொழிகளாகட்டும்—அதுவரையில் ஆங்கிலம் நீடிக்கட்டுமென்கிறோம்—

கண்:— என்ன இருந்தாலும்.... அந்நிய நாட்டு மொழி....

மரக:— வேடிக்கை.... அந்நிய நாட்டு உணவு! அந்நிய நாட்டுக் கடன்! அந்நிய நாட்டுத் தொழில் உதவி! அந்நிய நாட்டு நிபுணர்! அந்நிய நாட்டு மூலதனம்! அந்நிய நாட்டார் தலையிட்டு ரூபாய் மதிப்புக்குறைப்பு! இதிலெல்லாம் வராத வெட்கம்... உலகப் பொது மொழியான ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதில் தானா வந்து விடும்!...

கண்:— இந்தியால் தமிழ் கெடாது என்று காமராசரே கூறியிருக்கிறாரே...

மரக:— அவர் பேசுகிற தமிழ் கெடாது! ஏனெனில் அது ஏற்கனவே கெட வேண்டிய அளவுக்குக் கெட்டுப்போய்விட்டது... நான் சொல்வது... சிலப்பதிகாரத் தமிழ்—சிந்தாமணித் தமிழ்—திருக்குறள் தமிழ்—மணிமேகலைத் தமிழ்—அகம்—புறம்—கலித்தொகை, கலிங்கத்துப்பரணி, ஆகிய இந்தத் தமிழ் கெடும்—தமிழர், மூன்றாந்தர மக்களாக, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப் பிரதேசத்து மக்களுக்கு அடிமைகளாவார்கள்... இந்தத் தீமையைத் தடுக்கத்தான்... தீக்குளித்துச் செத்தார்கள்... சுடப்பட்டுப் பலர் மாண்டார்கள்... பிஞ்சுக் குழந்தைகளின் பிராணன் பறிக்கப்பட்டது... மாணவமணிகள் ரத்தத் தடாகத்திலே மலர்களாக மிதந்தார்கள். ஏன்; உங்கள் ஆருயிர் அன்னையின் பூவும் பொட்டும் புனித மிகு மாங்கல்யமும் போனது எதனால்? இந்தியினால்! இந்தியினால்!! தமிழ் நாட்டில் தாவி வந்த அந்த மந்தியினால்! மந்தியினால்!! இந்தி! அது தமிழர்வாழ்வை சுட்டுப் பொசுக்கும் செந்தீ! தமிழை அழிக்க வரும் பெருந்தீ!... அதை அணைப்பது தமிழன் கடமை!... இனியும் வாளாவிருப்பது... மடமை! மடமை!!

கண்:— மரகதம்! போதும்... போதும்... என் கண்களைத் திறந்து விட்டாய்... மரகதம்!

மரக:— உண்மையாகவா?...

கண்:— ஆமாம்... என் பொது வாழ்க்கையிலே ஏற்பட்ட தொய்வு இன்றோடு முடிவு பெறுகிறது... இந்தக் கணம் முதல் மறுமலர்ச்சி பெற்ற உள்ளத்தோடும்—புதிய உற்சாகத்தோடும்—திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன்... மரகதம்! நீதான் என் வாழ்வுக்கு வழிகாட்டிய சகோதரி... என் தாய் காவேரிக்கு இரண்டு பிள்ளைகள்... நான் மூத்தவன்—நீ இளையவன்.

மரக:— இதைக் கேள்விப்பட்டால் அம்மா ரொம்ப மகிழ்ச்சி அடைவார்கள்... அடேடே... அப்பாவும் தசாவதாரமும் வர்ராங்க... அண்ணா! ஒரு ரகசியம் சொல்றேன்... அது மாதிரி நடந்துக்கிங்க...

(காதில் ஏதோ சொல்லி விட்டுப்போகிறாள்)

தசாவ:— என்ன கண்ணா... ரொம்ப நேரமாயிட்டுது மன்னிச்சுக்க...

கண்:— பரவாயில்லை...

திரவிய:— கண்ணா!... எல்லாம் தசாவதாரம் சொன்னார்... ரொம்ப சந்தோஷம்... அடுத்தவாரம் காங்கிரஸ் ஜனநாயக சோஷலிச மாநாடு... என் தலைமையில் தான் நடக்குது... தசாவதாரம்தான்... திறப்பாளர்... நீதான் பிரதம பேச்சாளி... அதுதான் நம்ப தேர்தல் வேலை துவஜாரோகணம் மாதிரி... எல்லா வேலையும் நீதான் கவனிக்கணும்... பணம் போதுமா... மேலும் வேணுமா?...

கண்:— அப்பறம் வாங்கிக்கிறேங்க...

திரவி:— சரி... உன்னை நம்பித்தான தேர்தல்ல நிக்கிறேன்... மகாநாடு... வெற்றிகரமா நடக்க...

கண்:— நடக்கும் பாருங்க... அண்ணையிலிருந்து ஒரு பெரிய திருப்பமே ஏற்படும் தேர்தலில்!

திரவி:— ஏற்படட்டும்—ஏற்படட்டும் திருப்பம் ஏற்படட்டும்—ஓய் தசாவதாரம்... கண்ணனைக்கவனியும்... சாப்பாடு ரெடியாகட்டும்... மரகதம்! மரகதம்!!

(உள்ளே போகிறார்)

தசாவ:— என்ன கண்ணா? மரகதம் மனசை மாத்துனியா?...

கண்:— மனசு மாறிட்டுது!

(இறைந்து கிடக்கும் மலர்களை எடுத்து வியப்புடன்)

தசாவ:— ஏம்ப்பா... என்னா இது... பூக்கள் இறைஞ்சு கிடக்கு...

கண்:— உங்கள் சந்தேகப் புத்தி உங்களை விட்டுப் போகாதே... அக்காள் தங்கை அம்மா மகள் இதுக்கெல்லாம் வித்தியாசம் தெரிஞ்சுக்க அய்யா! வாயில் வந்தபடி பேசாதே! வர்ரேன்...

(போகிறான்)

தசாவ:— எப்பா! மகாநாடு... மகாநாடு...

(திரை)