காட்சி 20 / 21
காட்சி 20
காட்சி 20
மூல ஸ்கேன் 117, 118, 119
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: காவேரி வீடு.
(கண்ணன் தலை குனிந்தவாறு உட்கார்ந்திருக்கிறான்; காவேரியம்மா பேசிக் கொண்டிருக்கிறார்.)
காவேரி:— கண்ணா! நான் சொல்வதைக் கேள்! கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் ஆகி விட்டது இன்றையக் காங்கிரஸ்... இனியும் நீ அங்கிருப்பது அழகல்ல... யோசித்துப் பார்... தீப்பிடித்த வீட்டுக்குள்ளே இருப்பவன்... வெளியே ஓடி வந்து தீயை அணைக்க வேண்டுமே தவிர... உள்ளேயெயிருந்து நெருப்புடன் விளையாடுவதா?...
கண்:— அம்மா! தீப்பிடித்த வீடு... கருநாகம் புகுந்த புற்று... இன்றைய காங்கிரஸ்...! அதை மறுக்க வில்லை நான்... மரணப் படுக்கையிலே கிடக்கிறாள் தாய் என்பதற்காகப் பெற்ற தாயைப் பிரிந்து ஓடிவிடும் மகனும் இருப்பானா?...
காவே:— உன் உதாரணத்தையே கொஞ்சம் விரிவாக்கு... தாயின் பிணமென்பதற்காக வீட்டிலேயே வைத்துக் கொண்டு அழுகிப் போக விடுவார்களா?... காலா காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடிப்பது தானே மகனின் கடமை என்பார்கள்... கண்ணா! அந்தக் கடமையைச் செய்!...
கண்:— அம்மா!
காவே:— உன் தந்தையைப் பிணமாக்கிய கொடுமையை மறந்து விடாதே கண்ணா! இந்திக்கு வெண்சாமரம் வீசுகின்ற வீணர்களை மறந்து விடாதே கண்ணா!
கண்:— அப்பாவைக் கொன்றவர்கள் கொடியவர்கள்—அடக்கு முறை வெறியர்கள்—அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால்... இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக ஒரே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை எதிர்ப்பது எனக்குப் பிடிக்க வில்லையம்மா; பிடிக்க வில்லை!...
காவேரி:— இந்தி வந்தால் தமிழ் கெடும்; தமிழர் வாழ்வு கெடும்.
கண்:— எப்படியம்மா கெடும்?... யாரோபோகிற காட்டுக் கூச்சல் அது!...
காவே:— காட்டுக் கூச்சல் அல்ல!... எதிர்காலத்திற்குத் தரும் எச்சரிக்கை...
கண்:— என்னால் ஒப்புக் கொள்ள முடியாது! இந்தி வந்தால் எப்படித் தமிழ் கெடும்—தமிழர் வாழ்வு கெடும் என்று சொல்லுங்கள்!
காவேரி:— கண்ணா!... பாலிலே உப்புக்கலந்தால் பால் முறிந்து போய் கெட்டு விடும் என்றுதான் எனக்குத் தெரியுமே தவிர... எப்படிக் கெட்டுவிடும் ஏன் கெட்டுவிடும்—என்ற ஆராய்ச்சி எல்லாம் எனக்குத் தெரியாது... அது தெரியாத காரணத்தாலேயே உப்புப் போட்டால் பால் கெட்டுவிடும் என்ற உண்மை மறைந்து விடுமா?
கண்:— அப்படியே கெடுவதாக இருந்தாலும்... காங்கிரசில் இருந்து கொண்டே அதைத் தடுக்க முடியாதா? விடுதலை வீரர்கள் கட்டிய தியாகக் கோட்டையில் இருந்து கொண்டே மக்களின் மொழி காக்கவும்—பசியைப் போக்கவும் பாடுபட வேண்டுமே தவிர அதிலிருந்து வெளியேறி விடுவது நல்லதல்ல!
காவே:— கண்ணா! புயல் வரப்போகிறது; கடல் குமுறப்போகிறது—உடனே வீடுகளைக் காலி செய்யுங்கள் என்று எச்சரிக்கை விட்ட பிறகும் வீட்டை விட்டு வெளியேறத் தயங்குகிற மீனவனுக்கும் உனக்கும் வித்தியாசமே இல்லை!...
கண்:— அம்மா! என்னைக் குழப்பாதீர்கள்!... எனக்கு எதுவும் விளங்கவில்லை!...
காவே:— விளங்க வைக்கும் ஆற்றலும் எனக்கு முழுமையாக இல்லை... கண்ணா! உன் கண்களைத் திறக்கவைக்கும் கருத்து விளக்கம் பெற அண்ணாவின் ‘காஞ்சி’ ஏட்டைப் படி... கழகத்து நம் நாட்டைப் படி!...
கண்:— அய்யோ! காங்கிரஸ்காரன் கழகப் பத்திரிகையைக் கையால் தொடுவதா? பாபம்! பாபம்!...
காவேரி:— பத்திரிகை வேண்டாம். அவர்கள் பேச்சையாவது கேள்!...
கண்:— ஹா! இதுகாங்கிரஸ் காது; கழகத்துப் பேச்சைக்கேட்காது...
காவே:— சட்டசபையிலே கழகத்துப் பேச்சைக் காங்கிரஸ் காரங்க கேட்கலியா?...
கண்:— வேற வழியில்லே; கேட்கிறாங்க!.... அதற்காக வெளியில எழுந்து ஓடவா முடியும்?
(எழுகிறான்)
காவே:— கண்ணா! எங்க போறே?...
கண்:— வர்ரேம்மா?...
(போகிறான்)
(காவேரி, கணவன் படத்திடம் சென்று)
காவே:— நீங்கள் சிந்திய ரத்தம் கூட—உங்கள் மகன் நல்வழிக்குத் திருப்பாதுபோலிருக்கே...
(திரை)