பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 18 / 21

காட்சி 18

காட்சி 18

மூல ஸ்கேன் 115, 116

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: திரவியம் பிள்ளை வீடு.

(திரவியம் பிள்ளை படுக்கையிலிருந்து அலறி அடித்துக் கொண்டு விழுகிறார்...)

திரவி:— ஆ... ஹா!... ஹா!... மகாத்மா!... மகாத்மா...

(வீறிட்டு அலறும் ஒலி கேட்டுத்... தசாவதாரம் வாரிச்சுருட்டிக் கொண்டு தூக்கத்தில் ஓடிவருதல்...)

தசா:— எஜமான்... எஜமான் என்னங்க...

திரவி:— எமலோகம்... ரத்தபானம்... ஆகாசவாணி... மகாத்மா காந்தி... மகாத்மா காந்தி... எல்லாரையும் பாத்தேன்...

தசா:— கனவு கண்டீங்களா?...

திரவி:— தசாவதாரம்! பயங்கரமான கனவு... பயங்கரமான கனவு.

தசா:— அய்யா!... கனவிலயாவது மந்திரி ஆகிற மாதிரி கண்டீங்களா?

திரவி:— கனவிலே கூடக் காணலியே... முழிச்சிகிட்டு இருந்தா காளிகாதேவி விரட்டுரா!... தூங்கினா காந்தி மகாத்மா விரட்டுராரு!... தசாவதாரம்... ஒரே குழப்பமா இருக்கு... இந்தக் குழப்பத்துக் கெல்லாம் காரணம்...

தசா:— எனக்குத் தெரியுங்க காரணம்!... அந்தக் கண்ணன் உங்க கைக்கு அகப்பட மாட்டேங்கிறானேன்னு கவலைப்பட்டு... கவலைப்பட்டு ஏதேதோ பயங்கரக் கனவெல்லாம் காணுறீங்க...

திரவி:— உண்மை! நீ சொல்வது உண்மை!... அந்தக் கண்ணன் என் பக்கம் வந்தா தான் எனக்கு மனம் நிம்மதியா இருக்கும்.

தசா:— பயப்படாதிங்க... பணத்தைக்கண்டதும் பயல் மயங்கிட்டான்... 250ஆ...

திரவி:— 250!... 500 கொடுத்தேன்...

தசா:— (தயங்கி... பிறகு) அவுங்க அம்மா கிட்ட பாதி கொடுத்திட்டேன்...

திரவி:— ஓகோ...

தசா:— பொழுது விடிஞ்சதும் விடியாததுமா இங்க வர்ரேன்னு சொல்லியிருக்கான்...

திரவி:— யோவ்!... அவன் வருவான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காதே... பாயிகையோட அழைச்சிக்கிட்டு வந்துடும்!...

தசா:— சரி... நீங்க தூங்குங்க...

திரவி:— தூங்குவதா?... இப்பத்தான் எமலோகம் போனேன். அடுத்தது எங்கே போறேனோ?...

தசா:— சட்ட சபை! மந்திரி நாற்காலி! எதிர்க் கட்சிக் காரன் கேள்வி! காரசாரமான பதில்... தகவல் இல்லை. தனிக்கேள்வி போடவும்... காங்கிரஸ் தரப்பில் கரகோஷம் ஆரவாரம்... வரவேற்பு... ஊர்வலம் மாலை மரியாதை... பூரண கும்பம்...

திரவி:— (நசித்தவாறு) ஆகா!...

(அவர் கண்களைத் தன்கைகளால் மூடி)

தசா:— முழிக்காதிங்க... அப்படியே தூங்கிகிட்டே இருங்க... முழிச்சா அவ்வளவுதான்... போனவராது...

திர:— தசாவதாரம், எங்கே இன்னொரு தடவை சொல்லும்ப்பா, கேட்டுக்கிட்டே தூங்குறேன்.

தசா:— அப்படியா? சரி! கண்ணைத் தெறக்காதீங்க! தெறந்தா போயிடும். பூமாலை... ஊர்வலம்... மந்திரிப் பதவி...

(திரும்பத் திரும்ப இசையோடு சொல்லுகிறான்)

இப்படி ஒரு தாலாட்டா? புகழ்ச்சித் தாலாட்டு!

(போகிறார்)

(திரை)