பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 15 / 21

காட்சி 15

காட்சி 15

மூல ஸ்கேன் 109, 110

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: எமன் தர்பார்

(தாரை தப்பட்டைகள் முழங்க எமதர்மன் சிம்மாதனத்தில் அமர்கிறான்; அப்போது நடனமாது நடனமாடுகிறாள். பிரதிநிதிகள் எல்லோரும் கைதட்டுகின்றனர்.)

சித்திராபுத்திரன்:— கொலு மண்டபத்து நித்திய நிகழ்ச்சி துவங்கலாம் மகாராஜா.

(எமன் தூங்குகிறான்)

பிரபு! பிரபு!

(என்று எழுப்புகிறான்)

எம:— (விழித்து) என்ன?

சி.பு:— பிரபு! விசாரணை!

எம:— ஓகோ! இது வரை மன்றத்துப் பிரதிநிதிகளின் பேச்சுக்களைக்கேட்டேன். சுடுகாட்டில் இருக்க வேண்டிய நீங்கள் இந்த சபைக்கு வந்து ஏன் என் உயிரை வாங்குகிறீர்கள்?

ஒரு பிரதிநிதி:— ஒழுங்குப் பிரச்சினை! சபாநாயகர் அவர்களே! உயிர் வாங்கும் வேலை மன்னருக்குத்தான் உரியதே தவிர எங்களுக்கல்ல!

சி.பு:— சபாநாயகர் இன்று சபைக்குத் தாமதமாகத்தான் வருவார். ஆகையால் ஒழுங்குப் பிரச்சினையைக் கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்!

எம:— உங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை! நீங்கள் எல்லோரும் குடியேறியவர்கள் என்பதை மறந்துவிட்டு இந்த நாட்டிலே உள்ள பேய்களும் பிசாசுகளும் உங்களுக்குப் பொதுத் தேர்தலிலே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்களே அவர்களைச் சொல்ல வேண்டும்! போகட்டும்! சித்திர புத்திரரே! அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைச் சபையின் முன்னே படித்துத் தொலையும்!

சி.பு:— படித்துத் தொலைக்கிறேன் மன்னவா!

ஒரு பிரதிநிதி:— (நடுக்கத்தோடு) தர்மப் பிரபோ! நிதிநிலை அறிக்கையின் பிரதிகள் எங்களுக்குத் தரப்பட்டிருக்கிற காரணத்தால் நாங்களே படித்துத் தெரிந்து கொள்ளுகிறோம். சித்திரா புத்திரரை படிக்கச் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டா மென்பது எங்கள் தாழ்மையான விண்ணப்பம்.

எம:— சரி! உருப்படியான யோசனை! ஏற்றுக் கொண்டேன்! நிதிநிலை அறிக்கையின் முக்கிய குறிப்புகளை மட்டும் உங்களிடம் சுருக்கமாக சொல்லுகிறேன். சென்ற ஆண்டு நமது நாட்டில் உயிர் ஏற்றுமதி சற்றுத் தாராளமாக இருந்தது. இந்த ஆண்டு இந்தியத் துணைக் கண்டத்திலும் குடும்பக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டு விட்டதால் இங்கு தேங்கிக் கிடக்கும் உயிர்களை அதிகளவு ஏற்றுமதி செய்ய இயலவில்லை. அதனால் அரசினர்க்குச் சொல்ல முடியாத நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நஷ்டத்தை ஈடு செய்ய வழிகாண வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

ஒரு குரல்:— வரி போடலாம்!

எம:— யாரது? வரி போடுவதா! இதுவரை அப்படி ஒரு வார்த்தையை இந்த சபை கேட்டதே கிடையாதே. வரி! வரி! வரி! புதுமையான வார்த்தை! அந்த வார்த்தையைச் சொன்னவர் யார்? எழுந்து நில்லுங்கள், பார்க்கலாம்!

(ஒரு உருவம் கதர் ஆடையும், குல்லாவும் அணிந்து எழுந்து நிற்கிறது.)

எம:— நீ யார்? இந்த சபைக்கு எப்படி வந்தாய்?

திரவியம்:— என் பெயர் திரவியம் பிள்ளை! மேலே பார்வையாளனாக வந்து உட்கார்ந்து இருந்தேன், நீங்கள் நாட்டுப் பொருளாதாரம் செழிக்க வழி கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுக் கீழே குதித்து விட்டேன். மன்னிக்கவும்!

எம:— சபையின் கெளரவத்தையே குலைத்திருக்கிறாய். அது மட்டுமல்ல. என் உத்திரவு இல்லாமல் எங்கள் நாட்டு அனுமதிச் சீட்டுப் பெறாமல் என் ராஜ்யத்திற்குள் அத்து மீறிப் பிரவேசித்து இருக்கிறாய்! ஒரு வேளை நீ கள்ளத்தோணியில் தான் வந்திருக்க வேண்டும்! உன்னை சும்மா விடப்போவதில்லை! வரியென்ற வார்த்தையைப் பற்றி விவாதிப்போம். அதன் பிறகு உனக்குரிய தண்டனை வழங்கப்படும்!

திர:— தண்டனையா?

எம:— காவலர்களே! அந்த உயிர்ப் பிராணியைக்கைதி செய்து நம் உல்லாச மண்டபத்தில் பாதுகாப்பில் வையுங்கள்!

திர:— உல்லாசமண்டபமா? அப்படியானால் உதகை மண்டலமா?

எம:— அதே போலத்தான்! உங்கள் உதகை மண்டலத்தில் பனிக்காற்று வீசும்! இங்கே நறுமணமிக்க பிணக்காற்று வீசும்! அனுபவித்துப் பாரும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்! ஏய், அழைத்துப்போ! நாளை அவனைச் சந்திக்கிறேன்!

(தூதுவர்கள் திரவியம் பிள்ளையை அழைத்துப்போகிறார்கள்.)

(திரை)