காட்சி 14 / 21
காட்சி: 14
காட்சி: 14
மூல ஸ்கேன் 107, 108, 109
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: திரவியம்பிள்ளை வீடு
(காளி படத்திற்கு நேராக நின்று இரவு நேரத்தில் பூஜை செய்கிறார்... மலர்களை அள்ளிப் போட்டு விட்டு...)
திரவியம்:— பரமேஸ்வரி! பார்வதி! லோக்காளி! பராசக்தீ!... மகாகாளி! மகாகாளி!! அம்பிகே!... அருள்புரிவாய்... 1967 தேர்தலில் நான் வெற்றி பெற்று ஒரு மந்திரியாக வேண்டும்—மந்திரியாக வேண்டும்... எதிர்க் கட்சிக் காரர்களுக்கு சட்ட சபையிலே ஒரு இடம் கூட வரக் கூடாது... எல்லா இடமும் எங்க கட்சிக்கே வர வேண்டும்... மகேஸ்வரி!... என்ன மந்திரியா ஆக்கும்மா! மந்திரியா ஆக்கு!...
(படத்திற்குப் பின் புறமிருந்து)
காளிகுரல்:— பக்தா!
திரவி:— (ஆச்சரியத்துடன்) தேவி!
காளி குரல்:— உன் எண்ணம் பலிக்காது!
திரவியம்:— ஆ!...
காளிகுரல்:— நீ தோற்றுப் போவாய்! உன்னை மக்கள் தோற்கடித்து விடுவார்கள்!
திரவி:— காளி!
காளி குரல்:— காளி போல் தோற்றமளித்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றதற்கு—கஞ்சித் தொட்டி வைக்கிற அளவுக்கு நாட்டைப் பஞ்சக் காடாக ஆக்கியதற்கு—மக்கள் பதில் அளிக்கப் போகிறார்கள்... மக்கள் பதில் அளிக்கப் போகிறார்கள்...
திரவி:— (அழுதவாறு) அய்யய்யோ... என்னம்மாதாயே இவ்வளவுநாள் உன்ன வீட்லவச்சு பூஜை பண்ணினதுக்கு... இதானா பலன்?...
(காளிக்குப் பின் இருந்து, மரகதம் திரவியம் பிள்ளைக்குத் தெரியாமல் வருகிறாள்)
மரக:— (இயற்கையான குரலில்) அப்பா! அப்பா! என்னப்பா நீங்களாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
திரவி:— போச்சு, எல்லாம் போச்சுமா!... மந்திரியாகலாம்னு நான் கட்டிய மனக்கோட்டை யெல்லாம் மண் கோட்டையா ஆயிட்டது காளி, வரங்கொடுக்கலேம்மா! வரங்கொடுக்கலே!
மரக:— இப்பவாவது தெரிஞ்சுதாப்பார் கடவுள்கள் கூட காங்கிரஸ் பக்கம் இல்லேன்னு! காளியோட போட்டி போட்டுகிட்டு நீங்க ரத்தம் உறிஞ்சினா காளிக்குக் கோபம் வராதா?
திரவி:— எனக்கு எதிர்ப்பு என் வீட்டிலேயே இருக்கு!... மரகதம்! உனக்குக் கொஞ்சமாவது ஆசையிருக்கா: மந்திரி மகளாகணுமேன்னு?
மரக:— என்னப்பா மந்திரி... அஞ்சு வருஷம்... அப்புறம் அட்ரசே தெரியாது!... பதவியா பெரிசு?... அப்பா... மக்களுக்காக என்ன பணியாற்றினோம்; மொழிக்காக என்ன தொண்டு புரிந்தோம்; இந்தக் கணக்கைத்தான் எதிர்காலம் கேட்குமே தவிர; மந்திரியா இருந்தாரா? மகா ராஜாவாக இருந்தாரா... அதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவதே இல்லை...
திரவி:— எதிர் காலத்தைப் பற்றி இப்ப காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் கவலைப்படுவதில்லை... இருக்கும் வரையில் என்ன? மந்திரியா? பஸ் முதலாளிகளரி ஆலை அரசரரி? தொழில் மன்னரா? நிலப் பிரபுவரி? இப்படி ஏதாவது ஒரு பட்டம்—பதவி—இது தேவை! இதுதான் எங்கள் லட்சியம்!... இதைத் தடுக்க இந்த மகா காளியால் கூட முடியாது...
மரக:— அப்பா!... இனிமேல் காங்கிரசுக்கு இறங்கு முகம்தான்... அதை யாராலும் தடுக்கமுடியாது!...
திரவி:— இல்லை மரகதம் இல்லை!... விலைவாசி ஏறுவதைப் போல் காங்கிரசின் புகழ், மேலும் மேலும் ஏறத்தான்போகிறது. கறுப்புப் பணத்திற்கு எவ்வளவு செல்வாக்கு உயர்கிறதோ; அவ்வளவு செல்வாக்கு காங்கிசுக்கு உயரத்தான் போகிறது! வரிகளைக் குவித்தது போல் காங்கிரசுக்கு வெற்றிகளக் குவிக்கத்தான் போகிறார்கள் மக்கள்!... காரணம் என்ன தெரியுமா?... எங்களிடம் தேர்தல் செலவுக்காக லட்சம் லட்சமாகப் பணம் இருக்கிறது...
மரக:— அப்பா!... பதினெட்டு வருஷம் நீங்கள் படுத்திய பாட்டுக்கு அந்தப் பணத்தை யெல்லாம் மக்கள் அபராதமாகப் பெற்றுக் கொண்டு உங்கள் கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டப் போகிறார்கள்... அகற்றப் போகிறார்கள்... அடியோடு மாற்றப் போகிறார்கள்......
திரவி:— மரகதம்!
மரக:— உடம்பை அலட்டிக் கொள்ளாமல் ஓய்வெடுத்துக் கொண்டு தூங்குங்கள் அப்பா!
(போகிறாள்)
திரவி:— (காளியை நோக்கி) மாகாளி... மகாகாளி... மகாகாளி... உன் முடிவை மாத்திக்க தாயே... தூங்குறேன்... கனவிலாவது வந்து வரத்தை மாத்திக் கொடு தாயே!... அம்பிகே! உன் முடிவை மாற்ற மாட்டியா?... நாங்க அரசியல் சட்டத்தையே 19 தடவை மாத்தியிருக்கோமே... நீ ஒரு தடவை உன் முடிவை மாத்திக்கேயேன்...
(தூங்கப் போகிறார்)
[கனவு ஆரம்பம்]
(திரை)