காட்சி 13 / 21
காட்சி 13
காட்சி 13
மூல ஸ்கேன் 107
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: நெசவாளி வீடு
(முருகன், பானை—கரும்பு முதலியவைகளுடன் வருகிறான்... “மீனா! மீனா!!” என்று மகிழ்வுடன் அழைத்தவாறு)
முரு:— மீனா... மீனா! புடவையை விற்காமலே... பத்து ரூபாய் கிடைத்துவிட்டது... பத்து ரூபாய்... இதோ... புதுப்பானை... கரும்பு... மஞ்சள்... இஞ்சி... மீனா! மீனா!!...
(தேடிவிட்டு அண்ணாந்து பார்க்கிறான்)
(மீனா, தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குகிறாள்...)
முரு:— ஆ! மீனா! அய்யோ... ஏன் மீனா செத்து விட்டாய்? இந்தப் பாவி உன் புடவையை விற்கவும் துணிந்து விட்டேனே என்று ஆத்திரப்பட்டா... மானத்தை மதிக்கும் மாதரசே! நீ மரணத்தின் வாயில் விழுந்து விட்டாய்? நீ தானே சொன்னாய் மீனா பொங்கல் கொண்டாட வேண்டுமென்று! இப்போது தீராத சோகப்பொங்கல் பொங்கி விட்டாயே... மீனா! மீனா...
(தலையில் அடித்துக் கொள்கிறான்...)
(கண்ணன் ஓடிவருதல்...)
கண்:— அய்யா... இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்... 250 ரூபாய் இருக்கிறது...
முரு:— 250 ரூபாய்! 250 ரூபாய்!!... அதோ பாரய்யா... நானும் என் மனைவியும் நாங்கள் பெற்ற பிள்ளையும்... பசியால் துடித்த போது கிடைக்காத பணம்... அய்யோ; என் ஆருயிர் மீனா... பிணமாகப்போனபிறகு... அவள் இறுதிச் சடங்கிற்காகக் கிடைத்திருக்கிறது... இறுதிச்சடங்கிற்காகக் கிடைத்திருக்கிறது... மீனா! பணம்! பணம்!... 250 ரூபாய்!... ஹ... ஹ... ஹ... ஹ... பணம்... மீனா! மீனா!...
(பைத்தியமாகிறான்)
கண்:— அய்யா! அய்யா!!...
முருக:— வந்தே மாதரம்! ஜே ஹிந்த்!... நடப்பது நம்ம சர்க்கார்... நம்ம சர்க்கார்... கட்டிக்கத் துணியில்லை... கால் வயத்து கஞ்சியில்லை... நடப்பது நம்ம சர்க்கார்... நம்ம சர்க்கார்... ஹ ஹ ஹ......
(கரன்சி நோட்டுக்களை இறைக்கிறான்...)
(திரை விழுகிறது)