பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 12 / 21

காட்சி: 12.

காட்சி: 12.

மூல ஸ்கேன் 105, 106, 107

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: ரோடு

(நெசவாளி முருகன் தெருவில் புடவை விற்கிறான்)

முருக:— அய்யா... அய்யா... இந்தப் புடவை வேணுங்களா?

ஒருவன்:— ஏனப்பா பழைய புடவையை விக்கிற, பாவம்!

முருக:— வீட்ல பட்னி அய்யா... பொங்கல்கொண்டாடணும் ஏதாவது கொடுங்க இதை எடுத்துக்கிட்டு...

(கையை விரித்து விட்டுப் போகிறார்கள்)

(தசாவதாரம் வருதல்)

முரு:— அய்யா....

தசா:— சே... என்னடா சோம்பேறி!

முரு:— சோம்பேறி இல்லைய்யா; சொகுசா வாழ்ந்தது இல்லைய்யா... உழைச்சு உழைச்சு உலுத்துப்போனவன் நான். கஷ்டப்பட்டு துணிநெய்து காலத்தைக் கழித்தேன். உழைக்க கையில்லாம் இல்லை. உடவில் சக்தியில்லாமல் இல்லை. ஆனா உழைக்க வழி? நூல் கிடைச்சா போதும்... துணியாக்கிக் கால் காசு சம்பாதிப்பேன்... நூல் எனக்கு இப்போது எங்கே கிடைக்கிறது... அலைந்தேன்—திரிந்தேன்—கேட்டேன்—நான் உழைக்க வழியில்லை. ஏழை நெசவாளி எனக்கு வேறு கதி ஏது? வீட்டில் தறி தூங்குகிறது—பசி தூங்கி விடுமா என்ன? நான் என்ன செய்வேன்... அய்யா, பொங்கல் திருவிழா—வருஷத்துக்கு ஒரு நாளாவது பசியில்லாம இருக்கிறோம்—இந்தப் புடவையை உங்க வீட்டு வேலைக்காரிக்கு வாங்கிக் கொடுத்து... ஏதோ இரண்டு ஒண்ணு பணம் கொடுங்க சாமி...

தசா:— ஆகா, எங்க விட்டு வேலைக்காரி மேல எவ்வளவு அன்புடா உனக்கு?... வேலைக்காரிக்குப் புடவை எடுத்துக் கொடுக்கிறதுதானே எனக்கு வேலை?... போடா போ. சோம்பேறிப் பசங்க... வீட்ல படுத்திருந்தா சர்க்கார் சோற்றைக் கொண்டாந்து வாயில போடும்னு இருக்கானுங்க... ரஷ்யாவைப் பாரு. எங்க தலைவர் போய்ட்டு வந்து சொன்னாரு. அங்கவனும்—பவனும் உழைக்கிறானாம்...

முருக:— இங்க உழைக்காமலா இருக்கிறோம்... அடப்பாவிகளா!... சென்னை மவுண்ட் ரோட்ல மாடுகளுக்கு பதிலா முதுகெலும்பு ஓடிய மூட்டை வண்டி இழுக்கிற பாட்டாளிகளைப் போயி... உங்க தலைவரைப் பார்க்க சொல்லுங்கய்யா!... அயர்வை அச்சத்தால் போக்கி—ரத்தத்தை வியர்வை குளமாக்கி வயல் வெளியில் வாடுகின்ற விவசாயிகளின் வேதனையைப் போயி, உங்க தலைவரைப் பார்க்கச் சொல்லுங்கய்ய... தார் காய்ச்சிறவன்—தணல்ல நிக்கறவன்—சாக்கடை எடுக்கிறவன்—மலம் அள்ளுறவன்—கட்டிடம் கட்டுறவன்—செருப்புத்தைக்கிறவன் இவனெல்லாம் வீட்டுக்குள்ளே படுத்துகிட்டா... உங்களைச்சோறு கேக்கிறான்?.... தெரியாது; நீங்க சோறுபோடுகிற லட்சணம்—அரிசிக்கு கியூ அரைமைல் நீளம்....

தசா:— டே டே... நிறுத்து நிறுத்து.... அரிசி கியூ அரை மைல் நீளம்! உன் வாய் ஒருமைல் நீளம் இருக்கும் போலிருக்கே... புடவையை விக்க வந்துட்டான் புடவையை... புள்ள குட்டியை விக்காம..... டே... இனிமே மைல் கணக்கிலே பேசாதே கிலோமீட்டர் கணக்கிலே பேசு!

முரு:— அடப்பாவி... என்ன சொன்னே?... புள்ள குட்டியை விக்கறதா?

(எகிறிப் பாய்கிறான்)

தசா:— தொட்டா தெரியுமா?... என்னான்னு நினைச்சே?... (கதர்ச் சட்டையைக் காட்டி) ராணுவமே வரும்... ஜாக்கிரதை!

(போய்விடுகிறார்)

முரு:— அய்யோ... மீனா... எவ்வளவு கொடிய வார்த்தைகளை நான் கேட்கும்படியா ஆயிட்டுது மீனா...

(கைத்தறியாளர் பாடலுடன் தி.மு.கழகத் தோழர்கள் வருதல்)

முரு:— அய்யா... அய்யா... நான் தரு...

தி.மு.க:— தெரியும்... எல்லாம் கேட்டுக்கொண்டுதான் வருகிறோம்...

முரு:— இந்தப் புடவையை வித்து...

தி.மு.க:— வேண்டாம்... கொண்டுபோய் தங்கள் துணைவியாரிடம் கொடுங்கள். உம்... முதலில் இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுங்கள்......

(கண்ணன் தொலைவிலிருந்து பார்த்தல்)

(தி.மு.க.வினர் போய் விடுதல்)

முரு:— (ஆனந்தக் கண்ணீருடன்) வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம். வாழ்க தி.மு.க.

(வேகமாக—மகிழ்வுடன் போகிறவனைத் தடுத்து...)

கண்ணன்:— அய்யா... தாங்கள்?...

முரு:— (ஏற இறங்கப் பார்த்து விட்டு) ஏழை நெசவாளி அய்யா... உங்க கட்சி ஆட்சியிலே பெண்ஜாதி புடவையை வித்துப் பொங்கல் கொண்டாடும் அளவுக்கு ஆயிட்டுது...

கண்:— உங்க வீடு எங்கே இருக்கு?...

முரு:— எல்லா நெசவாளியும் குடியிருக்கிற சாக்கடை ஓரத்தில தான் என் குடிசையும் இருக்கு... அதையேன் நீ கேக்கிறே பொங்ல் விருந்து சாப்பிட வர்ரியா?...

கண்:— உம்....

(வரவில்லை என்று தலையாட்டுகிறான்)

முரு:— நான் வர்ரேன்...

(போகிறான்)

(கண்ணன் வருத்தமுடன் நகர்தல்—எதிரே தசாவதாரம் வருதல்)

தசாவ:— அடடே... கண்ணா உன்னைத் தேடித்தான் அலைஞ்சுக்கிட்டிருக்கேன்....

கண்:— ஏன்?

தசா:— (பணத்தை எடுத்துக் கொடுத்தவாறு) இந்தா... 250 ரூபாய் அட்வான்ஸ் இருக்கு... உனக்கு தேவைப்படுறதை கேட்கும் போதெல்லாம் தருவதாக திரவியம்பிள்ளை சொல்லச் சொன்னார்... வார எலக்ஷன்ல நீதான் பிரதம பேச்சாளர்... எல்லாப்பொறுப்பும் உன் கையிலே ஒப்படைக்கிறதா முடிவு பண்ணியாச்சு... நீ கிழிக்கிற கோட்டை தாண்டுறது இல்லை... நீ பாத்து அய்யாவை ஜெயிக்க வைக்க வேண்டியது... இந்தாபிடி... நல்லநேரம்... அமிர்த யோகம்...

(கண்ணன் பணத்தைப் பார்த்தல்)

தசா:— என்னா அப்படிப் பரக்கிறே... அடிச்ச நோட்டான்னா?... செக் கா தரட்டீங்களா?....

(கண்ணன் தலையசைத்தல்)

தசா:— ம்... வாங்கிக்க...

(கண்ணன் வாங்குதல்)

(கண்ணன் ஏழை நெசவாளியை நினைக்கிறான்)

முருகன் ஒலி:— “ஏழை நெசவாளி அய்யா உங்க கட்சி ஆட்சியிலே பெண்ஜாதி புடவையை வித்துப் பொங்கல் கொண்டாடுகிற அளவுக்கு ஆயிட்டுது!” பெண்ஜாதி புடவையை விந்து பொங்கல் கொண்டாடுகிற அளவுக்கு ஆயிட்டது... பெண்ஜாதி புடவையை வித்துப் பொங்கல் கொண்டாடுற அளவுக்கு ஆயிட்டுது...

(கண்ணன் ஒரு முடிவுக்கு வருகிறான்)

தசாவ:— கண்ணா!... முதலாளி வீட்டுக்கு போகலாமா?...

கண்:— தசாவதாரம்... காலையில் வருகிறேன்...

தசா:— நிச்சயமா வர்ரியா?...

கண்:— வருகிறேன்.

(போகிறான் வேகமாக)

தசா:— (தனக்குள்) அதான்; பணத்தை வாங்கிட்டான்... இனிமே மாற மாட்டான்...

(போகிறான்)

(திரை)