காட்சி 11 / 21
காட்சி 11
காட்சி 11
மூல ஸ்கேன் 104, 105
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம், நெசவாளி வீடு.
[கயிற்றுக் கட்டிலில் நெசவாளி, முருகன் முழங்காலைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்... மனைவி, மீனா வருகிறாள்...]
மீனா:— என்னாங்க இப்படி முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? விட்டுக்கு வீடு பொங்கல் திருவிழா நடக்குது; நம்ப வீட்ல மாத்திரம் ஒண்ணும் கிடையாதா?...
முருகன்:— ஏழை நெசவாளி வீட்ல ஏது மீனா பொங்கல்? மாடி வீட்டு மாணிக்கம்—கோடி விட்டு குபேரன் எல்லாரும் கொண்டாடுராங்க பொங்கல்! இருக்கிறவன் வீட்டில் வெண்பொங்கல்—சர்க்கரைப் பொங்கல்—இல்லாதவன் வீட்டில் கண்ணீர்ப் பொங்கல்—சோகப் பொங்கல்.
மீனா:— குழந்தை அழுதுகிட்டே தெருவலே நிக்கிறான்... அடுத்த வீட்டு ஆனந்தன் கரும்பு திங்கிறான் வாங்கிக் கொடுங்கிறான்... நான் எங்கே போவேன் வாங்கிக் கொடுக்க...?
முரு:— நம்ப வீட்டுக் குழந்தைமாத்திரம் இல்ல மீனா; நாட்டிலே பலலட்சம் கைத்தறி நெசவாளி வீட்டு குழந்தைகள் இன்னைக்கு மட்டுமல்ல—என்னைக்கும்—கரும்புகூட அல்ல—கஞ்சி கிடையாதுன்னு கண்ணீர் விட்டுகிட்டு இருக்குதுங்க. எல்லாம் கடவுள் செயல்!
மீனா:— கடவுள் செயல்னு சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா? நம்ப வீட்ல பொங்கல் நடக்கணும்—வருஷத்திலே ஒரு பண்டிகை—அதுக்கு வழியைப் பாருங்க!
முரு:— நான் என்ன மீனா பண்ணுவேன்... கைத்தறி நெசவாளிகளின் கண்ணீரைத் துடைக்கிற ஆட்சி இன்னும் வரலியே... புண்யவான்கள் கதருக்குக் காட்டுற சலுகையை கதறிக்கிட்டு இருக்கிற நெசவாளிகளுக்குக் காட்டக் கூடாதா?
முரு:— தாலியை வித்துச் சாப்பிட்டாச்சு! வேட்டி சட்டைகளை வித்துச் சாப்பிட்டாச்சு! நீ கட்டியிருக்கிற புடவைதான் மிச்சம்... அதையும் கொடு...
மீனா:— அய்யயோ... புடவையையும் வித்துட்டுப் பொங்கல் கொண்டாடுறதா?...
முரு:— இல்லென்னா சும்மா கிட; தரித்திரம் புடிச்சவளே! மனுஷன் உயிரை ஏன் வாங்குறே?
மீனா:— ஏன் கோபிக்கிறீங்க?... குழந்தை அழுவுறானேன்னு மனசு கேக்கலே; சொன்னேன்... இந்தாங்க; வேற வழி இல்லைன்னா... இதொ புடவையைத் தர்ரேன்... இதை வித்து பொங்கல் பானை, அரிசி எல்லாம் வாங்கிட்டு வாங்க... இதோ தர்ரேன்...
(கதவை சாத்திவிட்டு, இடுக்கின் வழியாகக் கட்டியிருந்த ஒரேபுடவையைச் சுருட்டித் தூக்கி எறிகிறாள்...)
(முருகன், புடவையுடன், சோகந்ததும்பப் போகிறான்)