பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 10 / 21

காட்சி 10

காட்சி 10

மூல ஸ்கேன் 102, 103, 104

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: காவேரி வீடு

[காவேரி, தன் கணவன் படத்திற்குப் பக்கத்தில் அண்ணா படம் ஒன்றை மாட்டிக் கொண்டிருக்கிறாள்... அப்போது, “காவேரியம்மா” என்ற குரல் கேட்டுத் திரும்புகிறாள்... தசாவதாரம் வருகிறார்]

தசா:— அடடாடா... அபச்சாரம் அபச்சாரம்... என்ன அக்கிரமம் இது... காஞ்சிபுரத்தார் படத்தைப்போயி இங்க மாட்டியிருக்கீங்களே...

காவே:— ஏன்?... நெருப்பை மிதிச்சது மாதிரி துடிக்கிறிங்க? இந்தப் படம் இருந்தா என்ன?

தசா:— காவேரியம்மா... உங்க கழுத்திலே தாலியில்லாமே செய்த கட்சியல்லவா: அந்த தி. மு.க. கட்சி... அதனுடைய தலைவரல்லவா; இந்த அண்ணாத்துரை?

காவே:— அய்யா!... உமது கயமை நிறைந்த பேச்சைக் கேட்டு கண்ணகி போல் கனல் கிளம்புகிறது என் கண்ணில்... ஆனால்... காஞ்சித் தலைவனின் அமைதியான பார்வை: உம்மை மன்னிக்கச் சொல்கிறது... அதனால் தப்பித்தீர்... என் தாலியும், மஞ்சளும் தமிழ் காக்கும் பட்டாளத்தால் பறிபோகவில்லை... தன்மானமிழந்து, தாயை விலை கூறத் துணிந்த தமிழ்த் துரோகிகளால் பறிக்கப்பட்டு விட்டது என்பதை மறவாதீர்!

தசா:— இந்தியை எதிர்த்து இவரு போராட்டம் ஆரம்பிக்கலேன்னா... நாடெங்கும் கிளர்ச்சி... நாசம்... ரகளை துப்பாக்கிப் பிரயோகம்... உங்க கணவனை போல பலபேர் சாவு... இதெல்லாம் ஏற்பட்டிருக்குமா?... அதனாலே எல்லாத்துக்கும் போராட்டம் ஆரம்பிச்ச இவர்தானே காரணம்?

காவே:— உண்மைதான்! காரணகர்த்தாக்களை தண்டிக்கணும் இல்லையா?...

தசா:— ஆமாம்! சரியா தண்டிக்கணும்!

காவே:— இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏன் ஆரம்பிச்சது?...

தசா:— இதென்ன கேள்வி! இந்தி வந்தது அதனாலே எதிர்ப்புப்போராட்டம்...

காவே:— இந்தி வராவிட்டா... இந்தி எதிர்ப்பு இருக்காதல்லவா? அதனால் போராட்டத்திற்குக் காரணம், இந்தியைக் கொண்டுவந்தவர்கள். என் மஞ்சளும் மலரும் போனதற்குக் காரணம்; இந்தியைக் கொண்டு வந்தவர்கள்... இப்போது சொல்லும்... யாரைத்தண்டிக்க வேண்டும்? யாரைத் தண்டிக்க வேண்டும்?

தசா:— அதை விட்டுத் தள்ளுங்க... அண்ணா படம் என்ன: நாளைக்கு நான் இன்னம் அஞ்சாறு தி.மு.க. தலைவர்கள் படம் கொண்டாந்து தர்ரேன்; அதையும் மாட்டுங்க... நான் வந்த வேலையை விட்டுட்டு எதைஎதையோ பேசிக்கிட்டு இருக்கேன்... ஆமாம்... உங்க மகன் கண்ணன் எங்கே?

காவே:— அவன் வீண் வேலைக்குப் போயிருக்கான்... வீட்டுக்கே வர்ரது இல்லை!...

தசா:— வீண் வேலைக்கா?

காவே:— அதான்... காங்கிரசை சீர்திருத்தி—புனிதப் படுத்தப் போகிறானாம்...

தசா:— சபாஷ்!... நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்க... காங்கிரசையாவது புனிதப் படுத்துறதாவது... நடக்குமா?... காலத்தோட சேர்ந்து நாமும் மாறிக்க வேண்டியதுதான்... இப்ப என்னைப் பாருங்க... எனக்கு என்ன அழுவுது காங்கிரசு... ஏதோ... பிசினஸ்... அவ்வளவுதான்! இப்ப காங்கிரசில இருக்கிற வசதிகளைப் பயன்படுத்திக்க உங்க மகனுக்குத் தெரியவே இல்லை...

காவே:— பாடஞ்சொல்லத்தான் வந்திருக்கீங்களா?...

தசா:— பாடம் மட்டுமா?... பணங்கூட அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கேன். இதோ திரவியம்பிள்ளை கொடுத்தார்... கண்ணனுகிட்டே கொடுன்னு 250 ரூபாய்! நான் வழக்கமா எடுக்கிற கமிஷன் கூட எடுக்காமே அப்படியே கொண்டு வந்துட்டேன்... ம்... பிடியுங்க!

(காவேரி பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வீசிஎறிகிறாள்)

காவே:— (ஆத்திரத்துடன்) சே!... என் மகனை விலை கொடுத்து வாங்கவா வந்துட்டே!... ம்! மரியாதையாக என் விரல் காட்டிய வழியிலே போ! நிற்காதே! ஊழல்—ஊதாரித்தனம்—வறுமை—சாக்காடு—பசி—பஞ்சம்—பட்டினி—இவைகளைத் தடுக்க முடியாத உங்களுக்கு விலை கொடுத்து ஆட்களை வாங்க மட்டும் எங்கிருந்தய்யா துணிவு வந்த... விலைவாசி ஏற்றம்—வேதனைப்புயல்! அரிசிக்கு கியூ... அல்லும் பகலும் கஷ்டம்.... எண்ணெய் இல்லாததலை—விளக்கில்லாத வீடு—பூச்ண தூங்கும் அடுப்பு—பொழுதெல்லாம் கண்ணீர்—ஆளுகிறீர்கள் ஆண்டு பதினெட்டாக... ம் என்றால் சிறைவாசம் ஏன் ஏன்றால் கைலாசம் இந்தப் பழி பாவங்களையெல்லாம் பண மூட்டையைக் கொட்டி மறைத்து விடலாம் என்ற நம்பிக்கை, பாழ்பட்டுப் போய்விடுமென்பதை பாவிகளே; உணர்ந்து கொள்ளுங்கள்!

தசா:— காவேரி... பணத்தின் அருமை உனக்குத் தெரியாது... நான் கண்ணனைப் பார்த்துக் கொள்ளுகிறேன்.

காவே:— கண்ணன் வீரத்தாயின் மகன்... உன்னைப்போல் விபீஷணன் அல்லா; விலை போகும் பொருளாவதற்கு!

தசா:— ம்... வருகிறேன்

காவே:— வராதே; போ!

(காவேரியம்மா உள்ளே போய் விடுகிறார்)

தசா:— (தனக்குள்) ஏயப்பா... தமிழு... கட... கட கடன்னு கடல் மாதிரி பொங்குதே... நமக்கிட்டயும் தான் இருக்குறாங்க பொம்பளைங்க! ஏழுங்கா நாகரிகமா ஒரு வார்த்தை பேசத் தெரியுதா...

(அண்ணா படத்தை நோக்கி)

எல்லாம் இந்த மனுஷர் செய்ற வேலை... சாமி!... போய்ட்டு வர்றேன்... நீ இல்லேன்னா... இந்நேரம் முதுகுத் தோல் உறிஞ்சிருக்கும்...... ம்... முகத்திலேயே ஒரு அமைதி தான் இருக்கு...

(சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் தொட்டு பார்த்தவாறு)

ஏப்பா; யார் காதிலாவது விழப் போவுது தசாவதாரம்!... பொழப்பிலே மண்ணைப்போட்டுக்காதே.

(திரை)