காட்சி 9 / 21
காட்சி 9
காட்சி 9
மூல ஸ்கேன் 102
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: உத்தமர் காந்தியின் உண்மை ஊழியர்சங்கத்தின் வாயிற்படி
தசாவ:— அப்பாடி! எப்படியோ உண்மை ஊழியர் சங்கத்தைக் கைப்பற்றியாச்சு... மலையைக் கெல்லி எலியைப் புடிச்சாச்சு.
திரவி:— எலியைப் புடிச்சு என்னய்யா பண்றது...
தசா:— எலின்னா என்ன கேவலங்கிளா? 67-லே தேர்தலிலே ஜெயிச்சா பிறகு பாருங்க... இந்தியாவின் தேசிய உணவே எலிதான்!
திரவிய:— தசாவதாரம்! கண்ணன் இல்லாத உண்மை ஊழியர் சங்கம் நம்ம கையிலே இருந்தா என்ன; இல்லா விட்டா என்ன; அவனுடைய வீரமான சொற்பொழிவு—விளக்கமான எழுத்து—ஓடியாடி வேலை செய்யும் திறமை—இதெல்லாம் நமக்குப் பயன் படாமல் போறது மட்டுமல்ல; காங்கிரஸ் மேடையிலேயே நின்னுக்கிட்டு... காங்கிரஸ் அபேட்சகரா நிற்கப் போற என்னைத் தாக்கிப் பேசினால் என்னாலே தாக்குப்பிடிக்க முடியாதப்பா... இத பார்... என்ன செலவானாலும் சரி; இந்தா பணம் ஐநூறு ரூபா இருக்கு! அட்வான்ஸ் கொடு!... ஆயிரமாயிரமா தர்ரேன்னு சொல்லு... அவனை நம்ம ஆளா ஆக்கிடு.
தசா:— ஹி ஹி ஹி... ஐநூறைப் பார்த்தா ஆள் வாயைப் பிளந்து விடுவான். எஜமான்!... நான் அவனை வழிக்குக் கொண்டு வர்ரேன்... நீங்க கவலையை விடுங்க!..
திரவி:— இப்பவே புறப்படு! அவன் எங்கேயிருந்தாலும் கண்டு பிடி! காரியத்தை முடி... கண்ணன் என் கையில்!... அந்த வெற்றிச் செய்தியைக் கொண்டு வா!....
தசா:— அப்படியே ஆகட்டும்... ஏ. டிரைவர் அய்யாவுக்கு காரை எடு... நான் கண்ணனைப் போயி, அவள் வீட்டிலே தேடிப் பார்க்கிறேன்... ஜே ஹிந்த்.
திர:— ஜே ஹிந்த்!!
(திரை)