பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 8 / 21

காட்சி 8.

காட்சி 8.

மூல ஸ்கேன் 98, 99, 100, 101, 102

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[உத்தமர் காந்தி உண்மை ஊழியர் சங்கத்தில்-காந்தியார் படத்தின் முன் கண்ணன்-கையெடுத்துக் கும்பிட்டவாறு நிற்கிறான். வாழ்கநீ எம்மான்- என்ற பாடல் முழங்குகிறது.]

தசாவதாரம்! : (பாடல் முடிந்ததும்) வாழ்க வாழ்க!

கண்ணன்:— அடேடே வாங்கய்யா தசாவதாரம்...

தசா:— என்ன கண்ணா; சௌக்கியமா?

கண்:— ம்...ஆமாம்... தசாவதாரம்! இது என்ன புது அவதாரம்?

(கதர் சட்டையைத் தொட்டு)

தசா:— கதரைக் கேக்குறியா?இதபாரு; ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி இந்தமாதிரி கதர் - ஆடையிலே இருந்தா மண்டை உடையும் - எலும்பு நொறுங்கும் ஜெயில்ல போடுவான் ...... இப்ப இந்தப் புதுத் துணியைப் பார்த்து போலீஸ்காரன் கூட தலை வணங்குறானே!...

கண்:— தசாவதாரம்! பகவான் கூட பத்து-அவதாரம் தான் எடுத்தாராம் ... உன் அவதாரத்துக்கு கணக்கே : இருக்காது போலிருக்கு ... நீ பிறந்த உடனே உனக்குப் பேரு வச்சதை விட உன் காலம் முடிஞ்ச பிறகு ...நீ எடுத்த அவதாரங்களைக் கணக்குப் பார்த்து அப்புறம் வச்சிருக்கலாம் பொருத்தமான பேரு...

தசா:— அதிருக்கட்டும்பா கிண்டலு; உன்னைப் பார்க்கத்தான் முக்கியமா வந்தேன்...

கண்:— ஏன்? என் கிட்ட என்ன? பஸ் ரூட்டா ... பர்மிட்டா,... கோட்டாவா... லைசென்சா ...?நான் கொடுக்கிறதுக்கு ஒண்ணும் இல்லியே!...

தசா:— அதில்லப்பா; உன்னைப் பார்க்கிறதுக்கு என் முதலாளி வரணும்னு சொன்னாரு... வாசல்ல தான் காரிலே இருக்காரு ...காத்துகிட்டு இருக்காரு...

கண்:— முதலாளியா; யாரு?.. புது முதலாளியா?...

தசா:— இல்ல; பழைய...

கண்:— சே ... சே ... சே ... பழைய முதலாளியை விட்டு... ரொம்ப நாளாச்சு...

தசா:— அதான் ப்பா நம்ப ஊர் சேர்மேன்... திரவியம்பிள்ளை!...

கண்:— ஓ...திரவியம் பிள்ளையா?... சேர்மன்!சேர்மன்! ஏம்பா தசாவதாரம்... என்ன உங்க சேர்மன் கொண்டுவந்த தீர்மானம் ஒண்ணு கூட நகரசபையிலே ஜெயிக்கிறது இல்லயாமே....

தசா:— ஆமாம்...

கண்:— சர்க்கார் உத்திரவுகளையே மீறி ... காரியங்கள் நடத்துறாங்களாமே......

தசா:— ஹி ஹி ஹி ...

கண்:— கவுன்சிலர்களுக்குள்ள கை கலப்பாம்...... காலணிகள் கூட...

தசா:— ஆமாம் ... காலனி... ஹரிஜனங்களுக்காகக்கட்டி...

கண்:— அட....அதுஇல்லய்யா; காலணிகள்....அதாவது பாதுகாக்கள் நகரசபைக்குள்ளேயே பறக்கின்றனவாமே...?

தசா:— பறக்கட்டும்....பறக்கட்டும்...

கண்:— நகரசபையைக் கலைத்து விடுவதாக யோசனை இருக்கிறதாமே சர்க்காருக்கு...

தசா:— அதிருக்கட்டும்; எல்லாம் சொல்லு; அதைமாத்திரம் சொல்லாதே! (இதைக் கேட்டதும் காக்கை வலிப்பு வந்தவர் போல் தசாவதாரம் கை கால்களை உதறுகிறார், கண்ணன் குறும்புக்காக ஒரு சாவிக் கொத்தை எடுத்து தசாவதாரம் கையில் வைக்கிறார், உடனே தசாவதாரம் நிதான மடைந்து....)

தசா:— ஆ! என்ன இது சாவிக் கொத்து? எனக்கென்ன காக்காவலிப்புன்னு நெனச்சியா?:

கண்:— வலிப்பில்லே; காக்காமட்டும்தான்.

தசா:— நடக்கிறது நம்ப காங்கிரஸ் நகரசபையாக்கும்!... நம்ப விரலாலேயே நம்ப கண்ணை குத்திக் கொள்வாங்களா?....

கண்:— ஆமா ஆமாம் மற்றவர்கள் கண்ணைத்தான் குத்தணும்...

(சங்கத் தலைவர் யாரையோ; “வாங்க! வாங்க!! பெரியவா வாங்க!” என்று இருகை விரித்து அழைத்தவாறு உள்ளேவருகிறார்....)

தலைவர்:— கண்ணா... சேர்மென் திரவியம் பிள்ளை வரார்... வாசல்ல காரிலேயே உட்கார்ந்துட்டார்...நான் பாத்து அழைச்சிகிட்டு வர்ரேன்...பெரியவாளைக் காக்க வைக்கலாமா...

திரவியம்:— (வந்தவாறு) பரவாயில்லை... பரவாயில்லை ...என்னய்யா தசாவதாரம் ஒரேயடியா உட்கார்ந்துட்டே!...

தசா:— இல்லிங்க...தம்பி தான் இங்க ... உண்மை ஊழியர் சங்கத்து செயலாளர் கண்ணன்—

திரவி:— கேள்விப்பட்டிருக்கேன். நிறையக்கேள்விப் பட்டிருக்கேன்... பெரியபேச்சாளர்...அரிய தியாகி... உண்மையான உழைப்பாளி ...எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்...

தசா:— இவர் தான் இந்த சங்கத் தலைவர் சத்தியநாதன்...

திரவி:— தெரியுமய்யா தெரியும்...வந்த விஷயத்தை தம்பி கண்ணன் கிட்ட சொன்னீரா?...

தசா:— இன்னும் ஆரம்பிக்கலே... இப்ப தான் ஆரம்பிக்கப் போறேன்...

திரவி:— நீர் எல்லாத்திலியும் ‘லேட்’ தான்ய்யா...இனிமே உன்னை...லேட் தசாவதாரம்னுதான் கூப்பிடணும்....சரி...சரி ...விஷயத்துக்கு வாரும்...

தசா:— அதாவது...தலைவர் அவர்களே!... ம் ... ம் ... சத்தியநாதன் தலைவர் சத்யநாதன் அவர்களே...அண்டு கண்ணாணு! நம்ப சேர்மன் அய்யா திரவியம்பிள்ளை அவர்கள் வர்ர பொதுத் தேர்தலிலே நிக்கப் போராரு...

திரவி:— (கோபமாக) தசாவதாரம்! அதையா முன்னாடி சொல்றது!... வாயை மூடு!... நான் சொல்றேன்!... அதாவது ... நான் காங்கிரசில வெகு காலமாக ... அதாவது ஏழெட்டு மாத காலமாகப் பாடு பட்டு வருகிறேன்.......

கண்:— ஏ! அப்பா! ஏழெட்டு மதாகாலம்! பாலகங்காதர திலகர் காலம்!

திரவி:— (தனியாக — தணிவான குரலில் தசாவதாரத்திடம்) யாரய்யா அவங்களெல்லாம்?

தசா:— (மெதுவாக) எனக்குந் தெரியாதே.

கண்:— ஆமாம்...உப்புச்சத்யாக்ரகம்நடந்த போது கலந்து கிட்டீங்களா?...

திரவி:— ஓ...எங்கவீட்டு உப்பரிகையிலே இருந்து பாத்திருக்கேன்...

கண்:— கள்ளுக் கடைமறியல்நடந்தபோது

திரவி:— என்னப்பா; இது தெரியாதா, என் கடை வாசல்ல தானே மறியலே நடந்தது...

கண்:— ஜெயிலுக்குப் போயிருக்கீங்களா...

தசா:— கண்ணா!....அவசரப்பட்டு கேள்விகளைக் கேக்கிறியே—அவரைப் பார்த்து ஜெயிலுக்குப் போனீங்களான்னு கேக்கிறதா?...போன வாரங்கூட ஜெயிலுக்கு போனாரு......ஜெயில் விசிட்டர்களிலே அவர் ஒருத்தானு உனக்குத் தெரியாதா?

சத்யநாத:— துருவித் துருவிக் கேட்பானேன்...இன்னைக்குக் காங்கிரசைக் கட்டிக் காக்கிறதே அவர்தான்.....வந்த விஷயம் என்னான்னு தெரிஞ்சா.......

தசா:— அவா...பெரிய மனசுவச்சு...இந்த “உத்தமர் காந்தி உண்மை ஊழியர் சங்கத்திலே தன்னை போஷகரா ஆக்கிக் கொள்ள விருப்பம் தெரிவிச்சார்....... நீங்களும் அதை உங்கள் பாக்யமாக கருதி...

சத்ய:— ஆட்சேபனை என்ன?...உங்களைப் போல பெரியவர்கள் தயவு இருந்தா இந்த சங்கம் ஆல்போல் தழைக்கும்...என்ன கண்ணா!?...

கண்:— தலைவரே!...இது உண்மைத் தொண்டர்கள் முகாம்! உத்தமர் காந்தியின் பெயரால் இயங்கும் உழைப்பாளிகளின் பாசறை! இதனைச் சுயநலவாதிகளின் கூடாரமாக...பதவிப் பித்தர்களின் வேட்டைக் காடாக மாற்ற நான் விரும்பவில்லை

சத்ய:— கண்ணா! வந்தாரை வரவேற்பது தானே தமிழன் பண்பு!...

கண்:— உண்மை!...கடலிலே கிடக்கும் முத்துச் சிப்பி, மழைத்துளிகளை மட்டுமே வாய் பிளந்து வரவேற்கும்...கழிவு நீரையும் வரவேற்கக் காங்கிரஸ் தயாராக இருக்கலாம்; ஆனால் இந்தக் காந்தியார் சங்கம் அதற்கு இடம் தர இயலாது!...

சத்ய:— கண்ணா!...பெரியவர்களை வைத்துக் கொண்டு மரியாதையாகப் பேசு!

கண்:— மரியாதை தருவது வேறு... மண்டியிடுவது வேறு...இரண்டாவது காரியத்துக்கு நான் இணங்கமாட்டேன்...

தசா:— கண்ணா...சும்மா இல்லை...இந்த சங்கத்தின் போஷகர் அப்பா,போஷகர்... வேண்டும்போதெல்லாம் பணம்...தேவைப்படும் போதெல்லாம் வசதி...தேர்தல் நேரத்தில்...,

கண்:— உங்கள் திருவிளையாடலுக்கு இது மண்டபம் அல்ல...முடியாது!...வேறு ஏதாவது பேசுங்கள்!

திரவி:— கண்ணா!...காங்கிரஸ் மீது உனக்கு ஆசை உண்டா இல்லையா?

கண்:— உண்டு...

திரவி:— அது தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா; வேண்டாமா?...

கண்:— அதற்காக.......?

திரவி:— என்னைப் போன்றவர்கள் ஆதரித்தால்தானே முடியும்...என்பணமும்... உன் உழைப்பும்...பேச்சும்...மூச்சும்... எழுத்தும்...காங்கிரசை வெற்றி பெறச் செய்யும்...நான் ஜெயித்தால் காங்கிரஸ் ஜெயித்ததாக அர்த்தம்...இல்லையா?...

கண்:— அய்யோ...காதுகளால் கேட்கமுடியவில்லை...கொஞ்சம் இருங்கள் மகாத்மா படத்தை திருப்பி வைத்து விட்டு வருகிறேன்...பிறகு பேசுங்கள்.

சத்ய:— (தடுத்து) கண்ணா! இந்த சங்கத்து தலைவன் என்ற முறையில்...நான் அவர்களைப் போஷகராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்து விட்டேன்.

கண்:— ஆ! பரவாயில்லை—முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லமாட்டேன்...எனக்காக தாங்கள் முடிவை மாற்றினாலும்...செல்வந்தர்களுக்கு முன்னால் சாய்ந்துவிட்ட உங்கள் உள்ளத்தை என்னால் மாற்றமுடியாது...ஆகவே நான் என் இடத்தை மாற்றிக்கொள்கிறேன். வருகிறேன்...(புறப்படுகிறான்)

மூவரும்:— திரவி:— கண்ணா! சத்ய:— கண்ணணு! தசாவ:— கண்ணா!

(ஆவேசத்துடன்)

கண்:— போஷகராகுங்கள்! பொருளைக் குவியுங்கள்!! பொதுத் தேர்தல் நடத்துங்கள்!!! போலிக் காங்கிரஸ்காரர்களே! புதிய வரவுகளே! உங்கள் முன்னால்நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்....உங்களையெல்லாம் ஓட்டிவிட்டு...உண்மை ஊழியர்களின் பாடி வீடாகக் காங்கிரசைமாற்றும் வரையில் எனக்கு ஓய்வில்லை... உறக்கமில்லை...வருகிறேன்...

(கண்ணன் போகிறான்)

திரவி:— ஓய்வில்லை... உறக்கமில்லை... ஏன் உணவுமில்லைன்னு சொல்லாம போயிட்டான்....

தசாவ:— நம்ம ஆட்சியில தான் அது சொல்லாமலே தெரியுமே...

(திரை)