காட்சி 59 / 61
காட்சி 59]
காட்சி 59]
மூல ஸ்கேன் 180, 181, 182
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[சிறைச்சாலை
முத்தன் அடைப்பட்டிருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். மென் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அந்தக் காற்றின் ஸ்பரிசத்தை சில நாழிகைகளுக்கு பிறகு அவனால் உணரமுடியாது. சிறைக்கம்பிகளுக்கு வெளியேத் தெரியும் அந்த உலகத்தின் சிறிய பகுதியை காணும் அவனது மோகன விழிகள் கொஞ்சநேரத்தில் மூடிவிடும். அய்யோ! அதற்குள், ஒரு முறை அவன் இதயம் நிறைந்தவளை பார்க்கக் கொடுத்து வைக்காதா அந்த ஏழைக்கு! அதோ! முத்தாயி வந்து விட்டாள். உண்மை தான்! நினைவின் நிழலல்ல! அவன் கண்ணில் தேங்கி நிற்கும் நீர் துளிகளுக்கிடையே வைரத்தின் நடுவே நிழலாட்டம் போடும் ஒளி போன்றல்ல அந்த உருவம். உண்மையாகவே முத்தாயி வருகிறாள். அத்தான் என்றழ வாய் திறக்கிறாள். ஆனால் முடியவில்லை. நெஞ்சு சடைத்து விடுகிறது.
முத்தன்: இன்பமே! கலங்காதே! இன்று நமக்கு கடைசி நாள்! கடைசி சந்திப்பு! காதல்பாடும் உன் கண்கள் இனி நான் பார்க்க முடியாது! தேன் பொழியும் உன் அதரங்களின் தித்திப்பை இனி நான் சுவைக்க முடியாது! இன்னும் இரண்டொரு வினாடிகள். உன்னைப்பற்றி இன்ப நினைவுகளை அதற்கு மேல் இந்த ஏழை முத்தனால் சுமக்க முடியாது!
முத்தாயி: அத்தான்! உங்கள் பின்னாலேயே நானும் வருவேன். நம்மை யாரும் பிரிக்க முடியாது!
முத்தன்: பைத்தியம்! ஏதோ காதலர்களுக்காக ஒரு உலகம் கட்டிவைத்திருப்பதாகவும், அந்த உலகத்தில் செத்துப்போன காதலர்கள் குடியேறலாமென்றும் யாரோ ஒரு ஆசைக்காரன் கிறுக்கிவைத்துவிட்டுப் போனான்! அதை நம்பி நீயும் பிணமாகிவிடாதே! உயிர்விட்டுப்போகும் நான் உன்னிடம் கேட்கிற ஒரே ஒரு உறுதி—உனக்கு இருக்கிற ஒரே ஒரு அன்பு உத்திரவு......
முத்தாயி: எதுவானாலும் கேட்கிறேன்...
முத்தன்: நீ சாகாமல் வாழவேண்டும் என்பதுதான்.
முத்தாயி: நான் வாழமுடியாதவள்... அத்தான்.
முத்தன்: கண்ணே! உன் வயிற்றிலே வளரும் நம் காதற் களஞ்சியத்தை நான் காண முடியாவிட்டாலும் நீ கண்டு களிப்பவள். அந்த இன்ப எதிர் காலத்தை நினைத்து நான் இப்போது ஒரே ஒரு சந்தோஷ மூச்சுவிடுகிறேன்.
முத்தாயி: அத்தான்!
முத்தன்: அழாதே — கண்ணே! அழாதே! உன்னை சிரித்த முகத்தோடு என் சிந்தைக் குளிர ஒருமுறை பார்க்கிறேன், எங்கே... என் செந்தமிழே! சிரிப்புக் காட்டு!
முத்தாயி: அத்தான்!
முத்தன்: மதுவரும் உன் இதழ்களின் முத்தமிட்டேன், அது பிடிக்கவில்லை உலகிற்கு — நீதிக்கு — நியாயத்திற்கு. ஆகையால் மரணத்தை முத்தமிடப் போகிறேன். முத்தாயி! கடைசியாக ஒன்று கேட்கிறேன். முத்தாயி! கடைசியாக ஒன்று கேட்கிறேன். நாம் சேர்ந்து பாடுவோமே அந்த காதல் பாட்டு அதை இனிமேல் எங்கு கேட்கப் போகிறேன், எங்கே—அதைப் பாடு! பாடு! நீ பாடாவிட்டால் உன் காதலன் நிம்மதியாக சாகமாட்டான். பாடு—கண்ணே—பாடு!
முத்தாயி அழுதுகொண்டே அந்த காதற் கீதத்தை பாடுகிறாள். அதனின் இறுதி வரிகளில் முத்தனும் சேர்ந்துகொள்ளுகிறான். அப்போது காவலர்கள் சிறைக்கதவைத் திறக்கிறார்கள். முத்தனின் கடைசி யாத்திரை ஆரம்பமாகிறது.
★