காட்சி 58 / 61
காட்சி 58]
காட்சி 58]
மூல ஸ்கேன் 172, 173, 174, 175, 176, 177, 178, 179
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பாளையக்காரர் அரண்மனை
கூடத்திலே, பலதேவர், அவர் மனைவி, மாய்கைநாத சாமியார் ஆகியோர் வருத்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை மாளிகையின் மேலேயுள்ள கூடத்துப் பலகணி வழியாக கவனித்துக் கொண்டிருக்கிறாள், பூங்காவனம்.
சாமியார்: எனக்கென்னவோ - சுகதேவ் திரும்பிவருவது சந்தேகமாகி விட்டது.
பலதேவர் மனைவி: அய்யோ - என் மகன் வரமாட்டானா? நான் என்ன செய்வேன்........
சாமியார்: விதி - நம் விழிகளையும் மூடிவிடும். சுகதேவ், எதிரே நின்றுகூட நம் பார்வைக்குத் திரைபோட்டு விடும் பயங்கர சக்தி வாய்ந்தது அந்த விதி.
மேலே பலகணியிலிருந்தபடியே,
பூங்காவனம்: உம், ஆரம்பமாகி விட்டது, விதிக்கு விளக்கம், அண்ணா - நீங்கள் சாமியாரை நம்புகிறீர்கள். சாமியார் பாவம் விதியை நம்புகிறார்... விதி, சாமியாரை நம்பி வாழ்கிறது - இப்படிச் சக்கரம்போல விதி, சுற்றிக்கொண்டே இருந்தால், சுகதேவும் எங்கேயாவது சுற்றிக்கொண்டே தானிருப்பான்.
சாமியார்: அவசரக்காரப் பெண்கள்...
பூங்காவனம்: ஆமாம் சாமியாரே அது முழுக்க முழுக்க உண்மை! - நான் அவசரக்காரிதான்! - அவசரக்காரியேதான்!
பலதேவர்: (மேலே பார்த்து) பூங்காவனம் - போதும் நிறுத்து!
அப்போது சுகதேவன் அங்கு ஓடிவருகிறான். “அப்பா! அப்பா!” என்று கூவியபடி! அவனைக் கண்ட ராணி, ஓடிப்போய் “வந்துவிட்டாயா என் செல்வமே!” என்று கட்டிக் கொள்கிறாள்.
சுகதேவ்: என்னைக் கொஞ்சுவதற்கு நேரமில்லை—அப்பா! காரியம் மிஞ்சி விட்டது!
பலதேவர்: என்ன சுகதேவ்?
சுகதேவ்: நீங்கள் வந்தால் தான் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்!
பலதேவர்: என்ன சொல்லுகிறாய்?
சுகதேவ்: தூக்குமேடைக்குப் போய்க் கொண்டிருக்கிறான் ஒரு ஏழை - அவனைக் காப்பாற்றுங்கள்! அவன் எதிரி நாட்டு உளவாளி என்று சொல்லி, கொலைக்குற்றம் சுமத்தி தண்டித்து விட்டார்கள். உடனே புறப்படுங்கள் அப்பா - வேங்கை புரத்து அரசனிடம்!
பலதேவர்: விஷயத்தை விபரமாகச் சொல்!
சுகதேவ்: முத்தனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்—
இதை சுகதேவ் சொல்லி முடிப்பதற்குள்ளாக மேல் மாளிகையில் “அய்யோ! முத்தா!” என்ற பெரும் சப்தம் கேட்கிறது. தடதடவென்று ஒலியுடன் கீழே விழுகிறாள் பூங்காவனம். எல்லோரும் மேலே ஓடுகிறார்கள். பூங்காவனம், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாள். பலதேவர், தன் ஆட்களிடம், “உடனே போய், வைத்தியர் பூபதியை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார். ஆட்களும் ஓடுகிறார்கள்.
பூபதியின் வீட்டிலே ஆட்கள் போய்க் கூப்பிடுகிறார்கள். “இருபது வருஷமாயிற்றப்பா அந்த அரண்மனையில் நுழைந்து!” என்று கூறிக்கொண்டே பூபதி புறப்பட்டு விடுகிறார்.
பூங்காவனம் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறாள். பூபதி வந்து அவளைப் பரிசோதிக்கிறார். பரிசோதனை முடிந்ததும்— “பயப்படாதீர்கள்... மன அதிர்ச்சிதான்!” என்று சொல்லிவிட்டு ஏதோ சில மருந்துகள் அவள் மூக்கில் காட்டுகிறார். பூங்காவனம் கண் விழிக்கிறாள்.
பூபதி: பிரபு! ஏன் இப்படி திடீரென்று மயக்கம் வந்தது, ஏதாவது சோகச் செய்தி?
பலதேவர்: அப்படி யொன்றுமில்லை, நமது மாளிகையில் குதிரைக்காரனு இருந்தானே — அந்த முத்தனுக்கு தூக்கு தண்டனையாம் — அதைக் கேள்விப்பட்ட உடன்........
பூங்காவனம் மறுபடியும் “முத்தா” என அலறுகிறாள். பூபதியின் மூளை மிகவேகமாக வேலை செய்கிறது. பலதேவரைப் பார்த்து—
பூபதி: இந்த மாளிகைக்கு பின்புறமாக படிக்கட்டுகள் இருக்கிறதல்லவா?......
பலதேவர்: இருக்கிறது!...
பூபதி அறையைச் சுற்றி நன்றாகக் கண்ணை செலுத்துகிறார். காற்றுப் புருக்கள்—கன்றைநாடும் பசு—மான்தோலில் வேங்கை — அந்த மூன்று சிலைகளும் அவர் கவனத்தை அதிக நேரம் இழுக்கின்றன. அவைகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். பிறகு பேச ஆரம்பிக்கிறார்—
பூபதி: பெருமையுள்ள பிரபுவே! என்னை அந்தப் பின்புறத்துப் படிக்கட்டுகளின் பக்கம் அழைத்துச் செல்கிறீர்களா?—
பலதேவர்: அப்படியே! வாரும் பூபதி!—
எல்லோரும் அந்தப் படிக்கட்டுகளின் பக்கம் செல்கிறார்கள். பூபதி அந்தப்படிகளை “ஒன்று, இரண்டு, மூன்று” என்று வாய்விட்டுச் சொல்லி எண்ணுகிறார்?
பலதேவர்: என்ன பூபதி—படிகள் எண்ணுகிறீர்?
பூபதி: ஹா ஹா ஹா—படிகளை எண்ணுகிறேன். அதோடு பழைய நிகழ்ச்சி யொன்றையும் எண்ணுகிறேன். என்ன; மாய்கைநாத சாமியாரே! சாமிக்கு திருச்சிற்றம்பலத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது—பாபம்!
பலதேவர்: புரியும்படி சொல்லும்!
பூபதி: சொல்லுகிறேன் - இளையராணி, முத்தனுக்கு மரண தண்டனை என்றதும் மூர்ச்சையானீர்கள்—இல்லையா?
பலதேவர்: ஆமாம்—அதற்கென்ன?
பூபதி: முத்தனுக்கு வரும் ஆபத்து - இந்த அம்மாளை பாதிப்பானேன்?
பலதேவர்: அவன் இங்கு வேலைக்காரனாயிருந்தவன்.
பூபதி: வேலைக்காரனுக்காக வருத்தப்பட்டவர்கள் - உங்கள் வரலாற்றிலேயே கிடையாதே! பலதேவப்பிரபு அவர்களே! இந்தப் படிகளை நான் ஏன் எண்ணிப் பார்த்தேன் தெரியுமா? இருபது மூன்று ஆண்டுகளுக்கு முன் - நான் எண்ணிய முப்பத்தாறு படிகள் சரியாக இருக்கிறதா என்பதற்காகத்தான்!
பலதேவர்: விபரமாகச் சொல்லும்.
பூபதி: சொல்லுகிறேன் - இருபது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் - நீங்கள், உங்கள் மனைவி - குழந்தை சுகதேவ் - மூவரும், காசியாத்திரை சென்றுவிட்டு, இமயகிரி முதலியவைகளைச் சுற்றிப் பார்த்துவா சென்றிருந்தீர்கள் அல்லவா?
பலதேவர்: ஆமாம்.
பூபதி: நீங்கள் திரும்பிவர இரண்டு ஆண்டுகள் பிடித்தது.
பலதேவர்: ஆமாம்.
பூபதி: இளையராணி பூங்காவனமும் - அவர்களுக்குப் பாதுகாப்பாக காவேரி என்றவளும் அரண்மனையில் இருந்தார்கள் அல்லவா?
பலதேவர்: ஆமாம்!
பூபதி: ஆகா நன்றாக ஞாபகமிருக்கிறது - இப்போது நடப்பதுபோல் இதோ எல்லாம் என் கண் முன்னே காட்சியாகின்றன - அந்தக் காட்சியை அப்படியே சொல்லுகிறேன் கேளுங்கள்.
இந்த மாய்கைநாத சாமியார் ஒருநாள் இரவு ஓடிவந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார். ரகசியம் ஒன்று! அதை மறைத்துவிட வேண்டுமென்றார். வந்தேன். அழைத்து வந்தார் என் கண்களை வழியிலேயே கட்டி விட்டார். மறுத்தேன். பொன் மூட்டை யொன்று வழங்கினார். ஒத்துக்கொண்டேன். எங்கே அழைத்துப் போகிறார் என்று தெரியவில்லை. கண் கட்டப்பட்டேயிருந்தது. ஏதோ படிகளில் ஏறி என்னை அழைத்துச் செல்வது தெரிந்தது. படிகளை கவனமாக எண்ணிக் கொண்டேன். முப்பத்தாறு படிகள்! நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு இருண்ட அறையில் மங்கலான வெளிச்சத்துக்கிடையே என் கண்கள் அவிழ்த்து விடப்பட்டன. எந்த இடமென்று தெரிந்துகொள்ள சுற்று முற்றும் பார்த்தேன் - இதோ இந்த மூன்று சிலைகளும் அப்போதுமிருந்தன. காற்றுப் புருக்கள் - கன்று நாடும் பசு - மான்தோல் வேங்கை - ஆம் இவைகளேதான்! கட்டிலில் ஒரு பெண் படுத்திருந்தாள். அவள் முகம் கறுப்புத்துணியால் நன்றாக மூடப்பட்டிருந்தது. பிரசவ வேதனையால் அவள் துடித்துக் கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவாள் போல் தோன்றியது. பிறகு நான் மருத்துவம் செய்தேன். அழகான குழந்தை. குழந்தையை உடனே சாமியார் காவேரி என்பவளிடம் கொடுத்துவிட்டார். காவேரி குழந்தையுடன் ஓடி விட்டாள். மீண்டும் என் கண்கள் கட்டப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டேன் - பிறகு காவேரியிடம் - அந்தக் குழந்தை வளர்ந்ததும் அந்தக் குழந்தைதான் முத்தன் என்பதும் எனக்குத் தெரியும். பிறகு நான் வெளிநாடு போய்விட்டேன்.
அந்தப் பாம ரகசியம் மட்டும் பாதாளத்தில் புதைந்து கிடந்தது. சாமியாரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் - சொல்ல வில்லை - ஆனால் இப்போது புரிகிறது. அந்தக் குழந்தை பிறந்த இடம், இந்த அறைதான் என்பது! - ஆம் - இன்று தூக்கு மேடையிலே நிற்கும் முத்தனுக்கு, தொட்டில் கட்டி இருக்கவேண்டிய இடம் இதுதான்! ஆனால் ஒன்று பிரபுவே! இந்தச் சாமியார் அவ்வளவு அக்கரை எடுத்துக்கொண்டாரே - அது ஏன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை—
(அப்போது பூங்காவனம் உரத்த குரலில் சப்தம் போடுகிறாள்)
பூங்காவனம்: நான் சொல்லுகிறேன்! முத்தனின் தாய் நான்தான்!
பலதேவர்: ஆ!
பூங்காவனம்: அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் - இதோ (சாமியாரைக் காட்டி) இந்தக் காதகன் தான் என்னை ஏமாற்றி விட்டான். நீங்களும் அண்ணியும் வடக்கே சென்றிருக்கும் போது இவன் வலையில் நான் விழுந்துவிட்டேன். பக்திபோதனை செய்வதாக இந்தப் பாலசன்யாசி அடிக்கடி வந்தான் - ஒரு நாள், இரண்டு நாள் - உலகத்தைப் பற்றிப் பேசினேன் - பிறகு உலகைப் படைத்தவனின் உத்தம குணங்களை விளக்கினேன். கடவுள் அவதாரங்களின் காதல் லீலைகள் பற்றி வர்ணித்தான். மாயக் கண்ணன் - மன்மதன் ரதிதேவி - மகேசன் பார்வதி - வள்ளி மணவாளன் - பிரம்மா, திலோத்தமை - மேனகா - விசுவாமித்திரன் - இப்படி யெல்லாம் புராணக் கதைகள் சொன்னான். போதை நிறைந்த அந்தக் கதைகள் என் புத்தியைத் தடுமாற வைத்துவிட்டன. விவரிப்பானேன் - வீழ்ந்தேன்; வீழ்ந்தேன்; தமிழச்சிக் கட்டிக் காக்கும் கற்பு நெறியிலிருந்து வீழ்ந்தேன்! சன்யாசத்தை விட்டு விடுகிறேன் - சம்சார வாழ்வு தொடங்குகிறேன் என்றான். கடைசியில் - கருவிலே முத்தனும் வந்தான்! “ஊர் கைகொட்டி சிரிக்கும் - உன்னை மணந்தால்” என்று காரணம் கூறி என்னைக் கைவிட்டு விட்டான். முத்தனின் தந்தை இவன் - நான்தான் தாய்!
பூபதி: என்ன சாமியாரே திகைப்பு? ஹஹஹ பற்றற்ற துறவிகள், புழுதியைக்கூட நாட மாட்டார்களாம்; நீரோ பூங்காவனத்தையே நாடியிருக்கிறீர்! - ஹஹஹ.
பலதேவர்: பூபதி. ஐயாயிரம் பொன் தருகிறேன் - இந்த அவமானச் செய்தியை வெளியே சொல்லாதீர்!—
பூபதி: எனக்கு வேண்டாம் - ஐயாயிரம் பொன்! முன்பு ஒருமுறை நான் பொன்னுக்கு அடிமைப்பட்டதால் தான் இந்தப் போலி வேதாந்தி இவ்வளவு நாள் வெளிச்சம் போட முடிந்தது - பிரபு! ஐயாயிரம் பொன்னைக்கொண்டு - இந்த ஆண்டியின் மடத்தை அறிவு வளர் கல்விக்கூடமாக மாற்றுங்கள். மற்றொன்று! - மூடியிருக்கும் இந்த ரகசியம் வெளிவர வேண்டாமென்று நீர் விரும்புவது உண்மையானால், உடனே சென்று முத்தனைக் காப்பாற்றுங்கள்! அவன் வெளிநாட்டு உளவாளி என்று வேங்கை புரத்தரசன் தீர்மானித்து விட்டான். நீங்கள் போனால்தான் உண்மை வெளியாகும்.
சுகதேவ்: ஆம் - அப்பா! புறப்படுங்கள்!—
(எல்லோரும் - புறப்படுகிறார்கள்)
★