காட்சி 57 / 61
காட்சி 57]
காட்சி 57]
மூல ஸ்கேன் 165, 166, 167, 168, 169, 170, 171
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[வேதாளம் இருப்பிடம்
வெற்றிவேலனும்—முத்தாயியும்!—முத்தாயி பொங்கிவரும் எரிமலையின் முன்னே தவித்துக் கொண்டிருக்கிறாள்.
வெற்றிவேலன்: என்ன விழிக்கிறாய்? நீ எங்கு சென்றாலும் நான் விடமாட்டேன். வானம்பாடியாக நீ பறந்தால் உன்னை வட்டமிடும் பருந்தாக மாறுவேன். புள்ளிமானை மாறித் துள்ளினால் புலியாகச் சீறிடுவேன். நீ கடைசியில் பிணமானாலும் கூட உன் சரீரத்தைத் தொட்டெரிக்கும் சந்தனக் கட்டையாக மாறுவேன் நான்.
இன்பமே! இணங்கிவிடு. வசந்தத்திலே புஷ்பிக்கும் வாசப்பூது மலரே! வந்துவிடு என்னிடம். வண்ணத் தாமரையே! வண்ணஜாலப் பூங்கொத்தே! என் வலிமை மிக்க தோள்களிலே உன்னை வாரி எடுத்துக் கொள்வேன்—பாய்ந்துவிடு என்மேல் பைங்கிளியே!
முத்தாயி: பாவி! என்னைவிட்டு விடு!
வெற்றிவேலன்: கையிலே கிடைத்த கனி - கண்ணியில் அகப்பட்ட பறவை - கபோதிகள் கூட விடமாட்டார்கள். முத்தாயி - உன்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பது - மலரைக் கசக்கி முகர்ந்தால் மணம் இருக்காது என்ற காரணத்திற்காகத்தான் - எச்சரிக்கிறேன்: பொறுமையை சோதிக்காதே!
முத்தாயி: ஓ!—
(முத்தாயி வெற்றிவேலனை அறைந்து விடுகிறாள்.)
வெற்றிவேலன்: (கனல் பறக்க) உம்! ஊமையாகி விடு!—உருத்தெரியாமல் ஆக்கிவிடுவேன்.
முத்தாயி அவனிடம் சிக்கிக் கொண்டாள். விடுவித்துக் கொள்ளமுடியாதபடி அகப்பட்டுக் கொண்டாள். அய்யோ அய்யோ என்று அலறுகிறாள். அப்போது முத்தன் கூரையின் வழியாக உள்ளே குதிக்கிறான். தளபதி திடுக்கிடுகிறான்.
முத்தாயி ‘அத்தான்’ என ஓடி அவனைக் கட்டிக்கொள்கிறாள். வெற்றிவேலன், முத்தனை வெறிக்கப் பார்க்கிறான்.
வெற்றிவேலன்: முத்தா! வீணே சாகாதே! நீ யார் என்பதை நிதானித்துக்கொள்.
முத்தன்: நான்—உன் தான்தோன்றித் தனத்தின் தர்பாரிலே, சர்வாதிகார சயாமண்டபத்திலே, சிக்கிச் சீரழிந்த வீரன்—ஆனால் இன்று அந்த வீரனே வரவில்லை. நான் சிந்திய ரத்தத்திற்கு—நான் அனுபவித்த சித்ரவதைகளுக்கு, உனக்குப் பரிசளிக்க வந்திருக்கிறேன். பெண் வேட்டையாடும் பித்தனே! மதுவும் மங்கையர் சுகமும்—உங்கள் மகுடத்தின் நிழலிலே மறைந்துகிடக்கலாம்! ஆனால்—அந்த மகுடத்தைத் தூளாக்கிப்போடும் புரட்சி சக்தி பொங்கி எழுந்து விடும் என்பதை உணர முடியாத மதோன்மத்தர்கள் நீங்கள்!
வெற்றிவேலன் ஆத்திரங் கொப்பளிக்க—“என்ன சொன்னாய்” என்று கூறிக்கொண்டே முத்தனின் உடலில் மாறி மாறிக்குத்துகிறான். பலமான அவனது தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் முத்தன் திணறுகிறான். வெளியிலிருந்து வேதாளமும் உள்ளே வந்து விடுகிறான். அவன் முத்தாயியை ஓடிவிடாமல் பாதுகாக்கிறான். தளபதியின் தாக்குதல் முத்தனை சுருண்டு விழச் செய்கிறது. காதலனின் நிலைமையை முத்தாயி கண்டு அலறுகிறாள். முத்தன் கன்னமெல்லாம் வீங்கி விட்டது. வாயிலிருந்து ரத்தம் கசிகிறது. அவனால் தளபதியை எதிர்க்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறான். தளபதி, கம்பீரமாக நிற்கிறான் முத்தனை வீழ்த்திவிட்ட பெருமையில்! கீழே விழுந்த முத்தன் திமிறுகிறான். அவனது கண்களில் நெருப்பு கிளம்புகிறது. புயல் போல மூச்சு விடுகிறான். அவ்வளவுதான், எழுந்து விட்டான் முத்தன். தளபதியால் தடுக்க முடியாத அளவுக்கு...... பட படவென அவன்மீது, எதிர்தாக்குதலைப் பொழிகிறான். வேதாளம் அஞ்சி நடுங்குகிறான். முத்தனைக் கொல்ல வேதாளம் முயலும்போது, முத்தாயி தடுத்து விடுகிறாள். முத்தன் தளபதியின் நெஞ்சின்மீது அமர்ந்துகொண்டு பலமாகத் தாக்குகிறான். பிறகு வெற்றிவேலன் எழவேயில்லை. அவன் கோரக் கண்கள் மூடிவிட்டன. முத்தனின் ஆத்திரம் வேதாளத்தின்மீது பாய்கிறது. வேதாளம் ஓடுகிறான். ஓடிவிடுகிறான். முத்தன் களைத்துப் போய் நிற்கிறான். முத்தாயி அவனைக் தழுவி நிற்கிறாள்.
வெளியிலே ஓடும் வேதாளச் சாமியாரை—வீரர்களை அழைத்துக் கொண்டுவரும் சுகதேவன் பார்க்கிறான். உடனே வீரர்களிடம் “இவன் விடாதீர்கள்” என்று கத்துகிறான். ஒரு வீரனின் ஈட்டி பாய்கிறது. அதை முதுகில் ஏந்திக் கொண்டே வேதாளம் ஓடிப்போய்—ஒரு மலைச் சரிவில் விழுந்து கண்ணை மூடுகிறான். அவனது மேலங்கி தாறுமாறாகக் கிழிந்து கிடக்கிறது. அந்தக் கிழிசலின் இடையே பூணூல் மின்னுகிறது.
சுகதேவும் வீரர்களும்-ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைந்து விடுகிறார்கள். முத்தன் - முத்தாயி திகைக்கிறார்கள். வீரர்கள், முத்தனை வளைத்துக் கொள்கிறார்கள். வீர திலவன், வெற்றிவேலன் நிலைமையைப் பார்த்து. “ஆ! நமது தளபதி” என்று கூவிய வண்ணம் அவனிடம் ஓடுகிறான். வெற்றிவேலன் கண்கள் மெதுவாகத் திறக்கின்றன. உதடு அசைகிறது. அந்த அசைவு கூட நல்ல அசைவாக இருக்கக் கூடாதா!
“முத்தன் படையிலிருந்து ஓடிப் போய்விட்டான் இவன் எதிரிநாட்டு ஒற்றன். அவனைப் பிடிக்க வந்த இடத்தில்... இப்படி யாகிவிட்டது ......முத்த......”
வெற்றிவேலனின் இமைந்து கொண்டிருந்த கடைசி மூச்சும் நின்று விட்டது.
வீர திலவன்: யார் இந்த முத்தன்? இவன்தானே - இவனைக் கொண்டு செல்லுவோம் உடனே வேங்கை புரத்திற்கு! - உம் - இழுத்து வாருங்கள்.
முத்தனை வீரர்கள் விலங்கிட்டு இழுத்துச் செல்லுகிறார்கள். முத்தாயி ‘அத்தான்’ என ஒருமுறை கதறுகிறாள். மயக்கமுற்றுக் கீழே விழுகிறாள்.
அவளது மயக்கத்தைத் தீர்க்க சுகதேவன், முயற்சி எடுத்துக்கொள்கிறான். கண் விழிக்கும் முத்தாயி பைத்தியக்காரிபோல் உளறுகிறாள்.
முத்தாயி: நீங்கள் கொலைக் குற்றவாளியா? குற்றவாளியா?......
சுகதேவ்: பயப்படாதே! நான் ஒன்றும் குற்றவாளி யல்ல......அந்த முத்தன் தான் குற்றவாளி.
முத்தாயி: ஐயோ...என் காதல் தெய்வமே! உங்கள் கைகளிலே......
சுகதேவ்: ஒன்றுமில்லை ... தண்ணீர்க் குவளை தான்...... பயப்படாதே கண்ணே! எழுந்திரு!
முத்தாயி கண்ணை அகல விழித்துப் பார்க்கிறாள். அவளுக்கு நிதானம் வருகிறது. சுகதேவனைக் காணுகிறாள்.
முத்தாயி: பாவி—நீ பொருத்தன் வந்துவிட்டாயா?
சுகதேவ்: என் முத்தாயி கோபித்துக்கொள்கிறாய்—எதாவது ஊடலா?
முத்தாயி: இப்போது நீ என்ன சொல்லுகிறாய்?
சுகதேவ்: என்ன சொல்லுவேன்—நமது திருமணத்தைப் பற்றி.....
முத்தாயி: அட அநியாயக்காரா! வேதனையின் விளிம்பிலே நிற்கும் என்னிடம் வீரத்தாபம் பேச வந்து விட்டாயே நீ ஒருவன் - இதுதானா உன் மாளிகையில் கற்றுக்கொடுத்த பாடம்? போ வெளியே! உம் போகிறாயா இல்லையா?
சுகதேவ்: அதெல்லாம் யாரும் போகமுடியாது. முத்தாயி—வீணே வீணையாடாதே! வா விவாகத்தை இப்போதே முடித்துக்கொள்வோம்.
முத்தாயி: உனக்குக் கண்ணில்லை...? மனித உணர்ச்சி யில்லை...? பெண் பழி பொல்லாது என்பார்களே; அதை நீ படித்ததில்லை?
சுகதேவ்: எதுவும் என் காதில் விழாது! இப்போது நீ என்னை திருமணம் செய்துகொண்டுதான் தீர வேண்டும்—கண்ணே முத்தாயி!
முத்தாயி ஆக்ரோஷமாக எழுந்து நிற்கிறாள். அவளுடைய சோர்வு, பலஹீனமெல்லாம் எங்கேயோ ஓடிவிட்டது. பேச ஆரம்பிக்கிறாள்.
முத்தாயி: உம் — நான் தயாராயிருக்கிறேன். இந்த சரீரம் தானே உமக்கு வேண்டும்...என் மேனியின் மெருகிலேதானே நீ மயங்கிவிட்டாய். உம்—அடிமையாக்கிக்கொள் என்னை! யாரோ சொன்னுளாமே; உடல்தான் அழுக்குப்பட்டது. உள்ளம் அழுக்குப் படவில்லை என்று! அப்படியல்ல நான் சொல்லுது. என் கற்பை உன் காலடியில் வைக்கத் தயாராகி விட்டேன். காமவெறியில் பாய்ந்துவரும் கழுதே! உன் கொடிய நகங்களால் என் இருதயத்தைப் பிராண்டிவிடு! காமபோதையில் கருத்திழந்த காண்டாமிருகமே! என்னை விழுங்கு! பஞ்சணைப் பசியால் கொஞ்சிவரும் மலைப்பாம்பே! வாடிய என் உடல் உன் வயிற்றுக்குள் போட்டுக்கொள்! உம்—தாமதிக்காதே! சூறையாடு என் கற்பை! சுக்கு நாறுக்கிவிடு என் வைராக்கியத்தை! பெண்கள் விபசாரப் பதுமைகளாக நின்றுவிட்ட பெயர்களின் பிரதிநிதியே! ஏன் நிற்கிறாய்? ஏன் தயக்கம்? இதோ நான் தயார்! என் பிணம் பேசுகிறது உன் வேடு! என் சவம் அழைக்கிறது உன்னை சல்லாபத்திற்கு! வா வா வஞ்சகனே! வா! இதோ நான்! முத்தாயி! முத்தனின் காதலி! உனக்கு வெள்ளாட்டி!
இந்தக் கனல் கிளப்பும் ஓலத்தைக்கேட்ட சுகதேவன் பிரக்ஞையிழக்கிறான்.
சுகதேவ்: முத்தாயி! என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு!
முத்தாயி ஸ்தம்பித்து நிற்கிறாள். அவளுக்கு எதிரே ஒரு துரும்புபோல் துடிக்கிறான் சுகதேவன்.
சுகதேவ்: அன்புள்ள சகோதரி! இப்போதே முயற்சி எடுக்கிறேன். உன் காதலன் முத்தன் குற்றவாளி யல்ல - எதிரி நாட்டு உளவாளியல்ல - என்பதை நிரூபிக்கிறேன்.
இதைச் சொல்லிவிட்டு, சுகதேவன் அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடுகிறான்.
★