பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 50 / 61

காட்சி 50]

காட்சி 50]

மூல ஸ்கேன் 156, 157

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[சுமதி வீடு

முத்தாயியைக் காப்பாற்றிய பெண் சுமதி—முத்தாயி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சுமதி: முத்தாயி! உன்னுடைய கதையைக் கேட்கவே பயமாயிருக்கிறது. ஆனால்—இனிமேல் நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை...நீங்களிருவரும் என் வீட்டிலேயே பத்திரமாக இருக்கலாம்.

முத்தாயி: சுமதி...நீ இங்கு எப்படி வந்தாய்?—சொல்ல மாட்டாயா?

சுமதி: இதோ பார்—எப்படி வந்தேன் என்று தெரிகிறதா? (கழுத்திலுள்ள தாலியை எடுத்துக் காட்டுகிறாள்)

முத்தாயி: அடி என் கண்ணே! உனக்குக் கல்யாணமாகி விட்டதா? எங்கே உன் கணவர்?

சுமதி: அவருக்கு உடல்நலமில்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரைப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில்தான் உன்னை அந்த நிலையில் கண்டேன்.

முத்தாயி: மணமாகி—மஞ்சள் கயிறுடன் புதிதாக இருக்கிறது!—அதற்குள் அவருக்கு உடல் நலமில்லையா?

சுமதி: ஆமாம்—அவர் ஒரு சிற்பி—கோபுரத்தின் மீது ஏறி சிற்பவேலை செய்யும்போது கால் தவறிக் கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டார்—இப்போது சிறிது நலம்.

முத்தாயி: சுமதி—அன்று, உன்னைப் புரிந்துகொள்ளாமல் கோபமாகப் பேசிவிட்டேன். மன்னித்துவிடு!

சுமதி: அதையெல்லாம் மறந்துவிடுவோம்.

முத்தாயி: கல்யாணமானதும் உன்னுடைய குறும்புப் பேச்செல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்துவிட்டதே!—

சுமதி: எங்கும் ஒளியவில்லை...அவருக்கு உடல் நலம் பெறட்டும்—பிறகு கேளேன் என் பேச்சுக்களை! முத்தாயி—என் பேச்சை நீ, ‘குறும்பு’ என்கிறாய். அவர் என்ன தெரியுமா சொல்கிறார்; ‘கரும்பு’ என்கிறார்.

முத்தாயி: சரி! உன்னுடையவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதே—கொஞ்சம் என்னுடையவரையும் கவனி.

சுமதி: இதோ—இப்போதே அந்த வணிகர் வீட்டுக்குப் போகிறேன்.

முத்தாயி: அங்கே அவருக்குப் பெயர்—பொன்னன்!—அதை மறந்துவிடாதே!—

சுமதி: சரி—உன் கணவரையும் அழைத்துக்கொண்டு, அப்படியே மருத்துவ மனைக்கும் போய்விட்டு வந்து விடுகிறேன். நீ சற்று தூங்கு! மிகவும் களைத்துப் போயிருக்கிறாய்.

சுமதி போய்விடுகிறாள். முத்தாயி தூங்க ஆரம்பிக்கிறாள்.