பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 49 / 61

காட்சி 49

காட்சி 49

மூல ஸ்கேன் 154, 155

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

மரத்தடியில் மயக்கமுற்றுக் கிடக்கிறாள் முத்தாயி. அந்தவழியே ஒரு பெண் வருகிறாள். அவள் மரத்தடியில் கிடக்கும் முத்தாயியைப் பார்க்கிறாள். பரபரப்புடன் ஓடிப்போய் அவளைத் தூக்குகிறாள்.

“முத்தாயி! முத்தாயி!” என்று கூப்பிடுகிறாள். முத்தாயிக்குப் பேசமுடியாத நிலை. நல்ல வேளையாக அந்தப் பக்கம் குதிரை பூட்டிய ஒரு பல்லக்கு வண்டி போகிறது. அந்தப் பெண் அந்த வண்டியை நிறுத்தி—முத்தாயியை வண்டிக்காரன் உதவியுடன் வண்டியில் தூக்கி வைக்கிறாள். வண்டி வந்து நிற்பதற்கும்—“முத்தாயி” என அந்தப் பெண் கூப்பிடுவதற்கும்—சரியாக, அந்தச் சமயத்தில் அங்கே வேதாளச் சாமியாரும், சுகதேவனும் வருகிறார்கள்.

சுகதேவ்: அதோ என் முத்தாயி!

என்று கூறி அருகே ஓடுகிறான். உடனே வேதாளம் அவனைத் தடுத்து—

வேதாளம்: புத்தியற்ற இளைஞனே! கடவுள் இப்போதுதான் உன் காதலியைக் காட்டியிருக்கிறார். அதற்குள் துள்ளுகிறாயே......

சுகதேவ்: ஆகா—கடவுள் மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். கடவுளே—உனக்கு நன்றி.

வேதாளம்: பால பக்தனே! வா—இந்தப் பல்லக்கு வண்டி எங்கே போகிறதென்று பார்ப்போம்.

வண்டி போகிறது. இருவரும் மறைந்து மறைந்து பின்தொடருகிறார்கள். வண்டி கடைசியாக ஒரு சிறிய வீட்டு வாயிலில் போய் நிற்கிறது. முத்தாயி உள்ளே தூக்கிச் செல்லப்படுகிறாள். வேதாளமும், சுகதேவும் அதை கவனிக்கிறார்கள்.

சுகதேவ்: சாமி! நாமும் உள்ளே போகலாமா?

வேதாளம்: பொறு அப்பனே!

சுகதேவ்: பொறுக்குகிறேன்.

வேதாளம்: வா—நம் இடத்திற்குப் போவோம். முத்தாயி இருக்குமிடம் தெரிந்துவிட்டது. இனி அவள் யாரைச் சேரவேண்டுமோ அவனிடம் அவளைச் சேர்க்க வேண்டியது என் கடமை!

சுகதேவ்: கடமையை விரைவில் நிறைவேற்றுங்கள் ஸ்வாமி!

வேதாளம்: அப்படியே ஆகட்டும்!—

இருவரும் போய்விடுகிறார்கள்.

★ ★ ★

முத்தன், கடற்கரைப் பக்கம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் முத்தாயியைத் தேடிவிட்டு அங்கும் காணாமல் மனமொடிந்து திரும்புகிறான்.