பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 47 / 61

காட்சி 47]

காட்சி 47]

மூல ஸ்கேன் 151, 152

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கடற்கரை

கடற்கரையின் வெண் மணலில் குழந்தையுடன் முத்தாயி விளையாடுகிறாள். சங்குகளைப் பொறுக்கியும்—அலைக்கரங்கள் இறைக்கும் நுரைகளை அறிந்து மகிழ்ந்தும்—குழந்தையும் தானும் ஒன்றாகி விடுகிறாள். வானத்திலே கருமேகங்கள் சூழ்கின்றன. கடற்கரையின் ஒரு பகுதியிலே வேதாளச் சாமியாரும், சுகதேவும் வந்து கொண்டிருக்கிறார்கள். வானம் குமுறுகிறது. காற்று ஒரு மாதிரி வீசுகிறது. மின்னல்கள் கிளம்புகின்றன. முத்தாயி குழந்தையைத் தூக்கி வண்டியில் வைத்து வீடு நோக்கிப் புறப்படுகிறாள். வீடென்ன: அருகாமையிலா இருக்கிறது. மழையும் வந்துவிட்டது. காற்றும் முற்றி விட்டது. முத்தாயி குழந்தையுடன் ஒதுங்குவதற்குக் கூட வீடுகள் எதுவுமில்லை, அவசர அவசரமாக ரதவண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறாள். மழையின் காரணமாக வேதாளமும், சுகதேவும் வேகமாக நடந்து வருகிறார்கள். காற்று இன்னும் பலம் பெறுகிறது. மழைத்துளிகளோ சவுக்கின் நுனிபோல உடம்பில் தாக்குகின்றன. மலைகள் உருளுவது போல இடி குமுறுகிறது. முத்தாயி திக்கு தெரியாதவளாகிறாள், குழந்தையோ வீரிட்டலறுகிறது. குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு ஓடுகிறாள். இந்த நிலையில் தனவணிகர் வீட்டில் குழந்தையின்னும் வரவில்லையே என்ற ஏக்கம் பிறக்கிறது. குதிரை பூட்டிய பல்லக்கு வண்டி தயாராகிறது குழந்தையைத் தேட!

மழையுடனும் காற்றுடனும் போராடி முத்தாயியின் மீது ஒரு மரமும் முறிந்து விழுகிறது. குழந்தையுடன் முத்தாயியும் கீழே விழுகிறாள். இந்த நல்ல காரியத்தை செய்துவிட்டு அந்தப் பெருங்காற்றும் ஓய்வு பெறுகிறது. அப்போது தனவணிகர் ஓட்டி வரும் வண்டி அங்கே வந்து நிற்கிறது. தனவணிகர் அவசரமாக கீழே இறங்குகிறார். குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். குழந்தைக்கு உயிர் இருப்பதை உணருகிறார். “தெய்வமே! இந்த ஏழையைக் காப்பாற்றினாய்” என்று பாராட்டி விட்டு அந்தச் செல்வர் தன் குழந்தையுடன் வண்டியில் போய்விடுகிறார். மரக்கிளையில் அடிபட்டுப் பேச முடியாமல் கிடக்கும் முத்தாயி தனவணிகரின் கருணை வழியும் செய்கையை பார்த்தபடி படுத்திருக்கிறாள். ஏழைகளால் வேறென்ன செய்ய முடியும்!