பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 46 / 61

காட்சி 46]

காட்சி 46]

மூல ஸ்கேன் 149, 150

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[முத்தன் குடிசை

தனவணிகர் வீட்டுக்கு குழந்தையை வைத்துக் கொண்டு முத்தனும், முத்தாயியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அன்பு மொழியும் பாட்டைக் கேட்டுக் கொண்டு அந்தத்தளிரும் ஈறுகாட்டி சிரிக்கிறது—முத்தன் முத்தாயியிடம்—

முத்தன்: இதுமாதிரி நமக்கொன்று...!

முத்தாயி: இன்னும் எட்டு மாதம் பொறுத்திருங்கள்.

முத்தன்: அப்படியா? என்னிடம் சொல்லவே இல்லையே ஆமாம்! நம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?

முத்தாயி: நம் இருவர் பெயரையும் சேர்த்துவைத்து விடுவது.

முத்தன்: அதுதான் சரி—உன்பெயர் முதல் இரண்டு எழுத்தையும் என்பெயர் கடைசி இரண்டு எழுத்தையும் சேர்த்து—உன் முதலிரண்டு எழுத்து... “முத்”—என் கடைசி இரண்டெழுத்து “தன்”—முத்தன்!... சே! சே!... ஹாஹா-ம் என்பெயர் முதலிரண்டு எழுத்து... உன்பெயர் கடைசி இரண்டெழுத்து... என் முதலிரண்டு எழுத்து... “முத்”... உன் கடைசி இரண்டெழுத்து... “தாயி”... முத்தாயி!... அடாடாடா!... வரமாட்டேன் என்கிறதே.

முத்தாயி: அப்படியானால் இரண்டுபேரின் முதல் இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வைத்துவிடுவோம்—முத்! முத்! மும்முத்!

முத்தன்: தம்!

இருவரும் அவர்களாகவே சிரித்துக் கொள்கிறார்கள்.

முத்தாயி: சரி—நேரமாகிறது. நான் குழந்தையை கடற்கரைக்கு அழைத்துப் போகவேண்டும்.

முத்தன்: சீக்கிரம் வந்துவிடு! மழை வரும்போலிருக்கிறது.

முத்தாயி—குழந்தையை ரதவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு புறப்படுகிறாள்.