காட்சி 45 / 61
காட்சி 45]
காட்சி 45]
மூல ஸ்கேன் 146, 147, 148
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[அடைக்கலபுரி தேவாலயம்
மணியோசை கேட்டபடி யிருக்கிறது. இளந்துறவி சுகதேவ் நிஷ்டையிலிருக்கின்றவன் போலும்! முத்தாயி ஜபம் மும்முரமாக நடைபெறுகிறது. அப்போது, ஒரு நரைத்ததாடி சாமியார் அங்குவருகிறார். இவர் யார் இந்தப் போலிச் சாமியார்? சுகதேவுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கட்டும்; நமக்குத் தெரியட்டும்—வேதாளம் தான் வெண்டாடி சாமியாக வந்திருக்கிறான் என்பது!—வேதாளம், சுகதேவிடம் வருகிறான்.
வேதாளம்: இளந்துறவியே!... முதலில் என் வாழ்த்துக்கள்.
சுகதேவ்: வெண்டாடிப் பெரியவரே! உலகம் பொய்!—உமக்கு என்னவேண்டும்.
வேதாளம்: பொய்யான இந்த உலகத்தின் மெய்யான இளைஞரே! உமக்கு எவ்வூர்? உம்மைப் பார்த்தால்—ஏதோ உள்ளங்கவர்ந்த ஒரு பொருளை பறிகொடுத்தவர் போலத் தோன்றுகிறதே!—
சுகதேவ்: அதிசயமனிதர் நீர்! அகத்தில் உள்ளதை எப்படிக் கண்டீர்?—எவ்வாறு விண்டீர்?—திரிகால முனரும் தேவாமிர்தமா உண்டீர்?
வேதாளம்: தம்பி—காதலில் தோற்றவன் நீ என்பது என் ஞானக்கண்ணில் தெரிகிறது—மெய்தானே?
சுகதேவ்: ஆமாம்—எப்படித் தெரியும் உமக்கு?
வேதாளம்: உத்தமர்களுக்கு உலகின் ஒவ்வொரு கோடியும் தெரியும். நீ ஓர் அரண்மனைவாசி! ஆரணங்கின் மயக்கத்தால் ஆசிரமத்து வாசியாகி விட்டாய்—இல்லையா?
சுகதேவ்: ஆமாம் ஸ்வாமி—ஆரணங்குகளின் மயக்கம் விட்டவர்களே ஆசிரம வாசிகளாக முடியுமென்பார்கள். நானோ—அந்த மயக்கத்தாலே கட்டுண்டு ஆண்டியாகியிருக்கிறேன்.
வேதாளம்: அதிசயமல்ல—அரண்மனையை விட்டு ஆரண்யம் வந்தான் விசுவாமித்திரன்—அங்கும் விட்டபாடில்லை அழகிகளின் தொல்லை!—அவன் தவத்தின் மேன்மைக்கோர் எல்லை—மேனகா பெற்ற பிள்ளை!
சுகதேவ்: ஆகா! பழுத்த அனுபவமும், கொழுத்த பக்தியும் கொண்ட தவசிரேஷ்டரே! தங்களால் தான் நான் தன்யனாக வேண்டும். வரம் தாருங்கள்.
வேதாளம்: புரிகிறது அந்த நாலெழுத்து நங்கையை நீ அடைய வேண்டும்.
சுகதேவ்: மு...த்...தா...யி... ஆகா! சரியாகச் சொன்னீர் சற்குருவே! நாலு முத்துத்தான் அந்த நாரி மணியின் பெயர்.
வேதாளம்: அவளை உனக்கு நான் திருமணம் முடித்து வைக்கிறேன். இளம் வயதில் இந்தக் கோலம் வேண்டாம் உனக்கு! செய்ய வேண்டிய அக்கிரமமெல்லாம் செய்து விட்டு—தள்ளாத காலத்திலே ‘சிவ சிவா’ என்று கூவுவதே மனிதர்க்குத் தகுதியான செய்கை!
சுகதேவ்: (தாடி மீசைகளை கழற்றி எறிந்துவிட்டு) என் முத்தாயி கிடைத்து விடுவாளா? கேடாமல் வந்த என் தெய்வமே—முருகனுக்கும் வள்ளிக்கும் நடுவிலே வந்த நாரதனைப் போல முத்தாயிக்கும் எனக்கும் இடையிலே வந்த இறைவனது திருவருள் பெற்ற என்னப்பனே! போற்றி! போற்றி!
வேதாளம்: சரி வா—என்னுடைய இருப்பிடத்திற்குப் போகலாம்—விரைவில் முத்தாயி கிடைப்பாள்.
இருவரும் ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள். சாமியாரின் உதவியால் எப்படியும் தன் காதலி கிடைத்து விடுவாள் என்ற ஆசையில் சுகதேவ் வேதாளத்துடன் போகிறான். பாவம்; சர்ப்பத்தின் வாயை சந்தனக் கிண்ணம் என எண்ணிடுவனுக்கும்—சாமியாரை—வேதாளம் என்று உணராத சுகதேவனுக்கும் என்ன வித்தியாசம்!
★