காட்சி 44 / 61
காட்சி 44
காட்சி 44
மூல ஸ்கேன் 144, 145
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
முத்தாயி தனவணிகரின் குழந்தையை மிகவும் அன்புடன் வளர்க்கிறாள். அதனுடன் விளையாடுவதும்—ஆடுவதும் பாடுவதும்—அவளுக்கு உற்சாகத்தைத் தருகின்றன. முத்தன் வீட்டு வேலைகள் கவனிக்கிறான். ரதம்போன்ற ஒரு சிறு வண்டியிருக்கிறது. அதிலே குழந்தையை உட்கார வைத்துக் கொண்டு உல்லாச கீதம் பாடிக்கொண்டே—முத்தாயி அந்த வண்டியை கடற்கரைக்கு தள்ளிக்கொண்டு போகிறாள். குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிவிட்டு இரவின் தொடக்கத்திலே வீட்டுக்கு வந்து சேருகிறாள். தனவணிகரும், அவரது இல்லாளும் தேவாலயம் சென்று சாமி தரிசனம் செய்து வீட்டுத் திரும்புகிறார்கள். தேவாலயத்தின் முகப்பிலுள்ள மண்டபத்திலே ஒரு இளந்துறவி கறுத்த தாடி மீசையுடன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவரது கண்கள் போவோர் வருவோரை கூர்மையாகப் பார்க்கின்றன. பெண்கள் யாராவது அருகேசென்றால் “முத்தாயி” “முத்தாயி” என்று ஸ்தோத்தரிக்கிறார். இப்போது அந்த சாமியார் யார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். காதலியைப் பறிகொடுத்த சுகதேவின் நிலைமைது! தனவணிகரும் அவர் துணைவியும்—இளந்துறவியை வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். எல்லோரை யும்போல! இளந்துறவி அங்குவந்த வேதாளத்தின் கண்ணிலும் பட்டுவிடுகிறான். வேதாளம் உடனே அதைவிட்டு மறைந்து விடுகிறான். வேதாளத்தின் விசித்திர மூளையில், எத்தகைய விஷ யோசனை பூத்திருக்கிறதோ யார் கண்டது! ஆலயத்திலிருந்து திரும்பிய வீட்டுக்காரியிடம்—குழந்தையை ஒப்படைத்துவிட்டு முத்தாயி, தன் குடிசை நோக்கிப் போகிறாள்.
குடிசையிலே முத்தன் காத்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் அவர்களுக்குப் புதிய நாள் தானே!—இருவரும் தழுவிக் கொள்கிறார்கள்.
முத்தன்: அப்பா—நீ ஒரு புதுமையான நெருப்பு.
முத்தாயி: என்ன—நெருப்பா?
முத்தன்: ஆமாம் உன்னை நீங்கினால் சுடுகிறது. நெருங்கினால் குளிர்கிறது.
முத்தாயி: சரிதான் வள்ளுவரே!...
முத்தன்: எதைப்பார்த்தாலும் உன் நினைப்புதான் வருகிறது...
முத்தாயி: அப்படியா? அது ஆபத்தாயிற்றே—
முத்தன்: ஏன்?
முத்தாயி: ஒரு கிழவியைப் பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
முத்தன்: அப்போதும் உன்னைத்தான் கற்பனை செய்வேன். கிழவியின் கூந்தலில்போல வெள்ளை உள்ளம். அவள் முதுகின் கூனல்மாதிரி வளைந்த உன் புருவம். அவள் நடுங்கும் உடம்புமாதிரி... நடுங்கும் உன் தங்க உடம்பு. அவள் கையிலேயிருக்கும் ஊன்றுகோல் மாதிரி......
முத்தாயி: ஏன் அத்தான்!—நீங்கள்!
முத்தன்: ஏன் கண்ணே!
முத்தாயி: உஸ்—இது அடுக்குமா!
முத்தன்: ஆணும் பெண்ணும் தனியே இருந்தால்—அடுக்கா—அந்தப்புரம் எல்லாம் ஒன்றுதான்.
இருவரும் இன்பகீதம் இசைக்கிறார்கள். இரவு அவர்களை வாழ்த்துகிறது.
★