பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 43 / 61

காட்சி 43]

காட்சி 43]

மூல ஸ்கேன் 142, 143

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[அடைக்கலபுரி பட்டினம்

ஒரு தனவணிகர் வீட்டுத் தாழ்வாரம். அங்கே, தன வணிகரும், கையில் குழந்தையுடன் அவரது இல்லக் கிழத்தியும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே—ஒரு கூனன் என்று சொல்லத் தக்க அளவுக்கு முதுகு வளைந்தவனும்—நொண்டியான ஒரு பெரிய மீசைக்கார வாலிபன் நிற்கிறான். அவன் முத்தன் என்று சொல்லத் தேவையில்லை. அவனுக் கருகே முத்தாயி நிற்கிறாள்.

தனவணிகர்: உங்களால் என்ன வேலை செய்ய முடியும்.

முத்தாயி: இட்ட வேலையைத் தட்டாமல் செய்வோம்.

தனவணிகர்: நீங்கள் இருவருமே, வீட்டு வேலை செய்வ தாயிருந்தால் பரவாயில்லை...

முத்தாயி: ஆமாம்—அவர் நொண்டி வேலைகள் எதுவும் கவனிக்க முடியாது.

தனவணிகர் மனைவி: என் குழந்தையை நீ பத்திரமாக வளர்ப்பாயா?

முத்தாயி: வளர்க்கிறேன்ம்மா!—இதோ குழந்தை கூட என்னிடம் தாவுகிறது பாருங்கள். வாடா கண்ணு!

[குழந்தையை தூக்கிக் கொள்கிறாள்]

தனவணிகர் மனைவி: உன் பெயர் என்ன சொன்னாய்; பொன்னிதானே—?

முத்தாயி: ஆமாம்—அவர் பெயர்......

முத்தன்: அட நீ சொல்லாதே பாப்பம்—என் பெயர் பொன்னன்.

தனவணிகர்: சரி—பொன்னி, வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளட்டும். பொன்னு! நீ... முடிந்த வேலைகள் பார்!

பொன்னன்: உத்திரவு!

தனவணிகர்: பக்கத்திலே ஒரு குடிசையிருக்கிறது—அதிலே குடியிருந்து கொள்ளுங்கள். உணவு இங்கே தரப்படும். ஊதியம் எதுவும் கிடையாது தனியாக!

பொன்னி: சரி—

பொன்னன்: மிகவும் வணக்கம்—சொல்லியபடி நடக்கிறோம்.

தனவணிகர்: உம்—வேலைகளே கவனியுங்கள்.