காட்சி 42 / 61
காட்சி 42]
காட்சி 42]
மூல ஸ்கேன் 140, 141
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பாளையக்காரர் அரண்மனை
பாளையக்காரர், கோபாவேசமாக அங்குமிங்கும் உலவிக் கொண்டிருப்பதிலிருந்து இந்தக் காட்சி துவங்குகிறது. வேதாளம், பக்கத்திலே நின்றுகொண்டிருக்கிறான். திருசங்கு, சுகதேவைக் கெடுத்து தன் மகளைக் கொடுக்க முயற்சித்த செய்திகளையெல்லாம் வேதாளம்—பாளையக்காரரிடம் சொல்லிவிட்டான் போலும். இல்லாவிட்டால் பாளையக்காரர் அவ்வளவு கொதிக்க வேண்டியதில்லை.
பலதேவர்: திருசங்கு...வரட்டும் அவன் இங்கே—என்ன பாடுபடுத்துகிறேன். நல்லவனைப்போல நடந்து நரிவேல நடத்தியிருக்கிறானே—நயவஞ்சகன்!
வேதாளம்: நல்லவர்களை இந்தக் காலத்தில் நம்பக் கூடாது.
பலதேவர்: சரி—சுகதேவனை எப்படிக் கண்டுபிடிப்பது?
வேதாளம்: அது ஒன்றும் பெரிய காரியமல்லே... நான் கண்டுபிடிக்கிறேன்.
பலதேவர்: எவ்வளவு பொருள் அழிந்தாலும் சரி; என் மகன் என்னிடம் அழைத்துவந்தால் போதும். சுகதேவ் வராவிட்டால்—ராணி இறந்தேவிடுவாள்!
வேதாளம்: சுகதேவ் காணுமற் போன செய்தி யாருக்கும் தெரியவேண்டாம். நானே தந்திரமாகக் கண்டு பிடித்துவந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன்.
பலதேவர்: மிகவும் நன்றி. செலவுக்காக ஐநூறு பொன் தருகிறேன். சுகதேவ் கிடைத்துவிட்டால், உமக்குப் பரிசாக ஐநூறு பொன் தருகிறேன்.
வேதாளத்தினால் பேச முடியவில்லை. நல்ல வேளையாக மயக்கமடைந்து விடாமல் சமாளித்துக் கொண்டான். ஆயிரம் பொன்னல்லவா கிடைக்கப் போகிறது அவனுக்கு!—
வேதாளம்: பெருமைக்கு பிறப்பிடமே! பரிசுக்காகவா நான் பாடுபட்டுப் போகிறேன். பாளையக்காரர் குடும்பத்துக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்யாவிட்டால் பாபமல்லவா பாம்பாக வந்து கடிக்கும்.
பலதேவர்: நன்றியுள்ளவனே! கடவுள் நமக்குத் துணை புரியட்டும். சென்றுவா!
★ ★ ★
வேதாளம், மாளிகையை விட்டு வெளியேறுகிறான்—அவன் இதய ஆலயின் ஓசையைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
“துன்பம் துணையோடு வரும். இன்பம் தனியாக வரும் என்கிறார்களே; அது தவறு. வேதாளத்தின்மீது இன்பம் எறும்பு வரிசை போலல்லவா படையெடுக்கிறது! பலருடைய வேதனையிலேதான் ஒருவன் வளமாக வாழ முடிகிறது இந்த உலகத்திலே நானும் உல்லாசமாக வாழவேண்டாமா? ஒருவனை அடித்துத்தான் ஒருவன் சாப்பிடுகிறான். ஈ, சிலந்திக்கு ஆகாரம். சிலந்தி, பல்லிக்கு ஆகாரம். பல்லி, பூனைக்கு ஆகாரம். பூனை குறவனுக்கு ஆகாரம். அதேவிதம்தான், என் வழியும்! நானும் மனிதன்—எனக்கும் சந்தோஷம் வேண்டும்—சகல செளபாக்கியங்களும் வேண்டும். வேகமாகப் போகும் என்னுடைய வளர்ச்சி. ஒருவேளை என்னை பழுதூரின் பாளையக்காரனுக்கூட ஆக்கிவிடலாம். போகிறபோக்கிலே உழன்ற புத்தன்—காலக்கோளாறால் போதிமரத்தடிக்குப் போனான். பல்லேந்திக் கிடந்தவன் ஜகம்புரட்டும் சாணக்கியனானான்! வேதாளத்தின் முயற்சிகள்; பெளர்ணமிக்காலத்திலே சந்திரனைத் தொட எழும்பும் சமுத்திரத்தின் அலைகளல்ல! கருமேகத்திலிருந்து பூமியைத் தொட முனையும் நீர்த்துளிகள். ஒரு குளிர்காற்றுதான் தேவை! கொட்டும், மழை! குவியும் அதிர்ஷ்டம்!”
பேசிக்கொண்டே போய்விடுகிறான்.
★