காட்சி 41 / 61
காட்சி 41]
காட்சி 41]
மூல ஸ்கேன் 137, 138, 139
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[திருசங்கு வீடு
வேதாளம், திருசங்கு வீட்டின் கதவைத் தட்டுகிறான். திருசங்கு வெளியே வருகிறான். அவன் முகம் வாட்டமாக யிருக்கிறது.
திருசங்கு: என்ன சமாச்சாரம்?
வேதாளம்: நல்ல சமாச்சாரம்தான்—திருசங்கு! பாளையக்காரர் மகனை நீ ஏமாற்றிக் கெடுத்துவிட்டாய் என்று உன்மீது வழக்கு ஏற்பட்டால் என்ன செய்வாய்?
திருசங்கு: வழக்கா?
வேதாளம்: ஆமாம்—அதற்கு இதோ ஆதாரம்! சாமியாராகப் போய்விடப் போகும் சுகதேவின் ஓலையே சாட்சி!
திருசங்குவிடம் கடிதத்தைக் காட்டிவிட்டு தன் கையிலேயே பத்திரப்படுத்திவிடுகிறான்.
திருசங்கு: எனக்கு ஒன்றுமே புரியவில்லையே—நான் நினைத்ததைப் போலவும் நடக்கவில்லை போலிருக்கிறதே. அப்படியானால் முத்தாயி எங்கே போனாள்?
வேதாளம்: எங்கு போனாளோ. என்ன சொல்கிறாய்! பலதேவரிடம் இந்த ஓலையைக் காட்டட்டுமா—அல்லது என்னை நல்லது செய்துகொள்கிறாயா?
திருசங்கு: என்னய்யா—எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்.
வேதாளம்: திருசங்கு—தீயை அணைப்பதாயிருந்தால், எனக்கு நூறு பொன் தரவேண்டும். இல்லையேல் இது
பலதேவரிடம் காட்டப்படும். பாளையக்காரர் குடும்பத்திலே சம்பந்தம் நடத்த சூழ்ச்சிசெய்தாய் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாவாய்—என்ன பதில் சொல்லுகிறாய்?
திருசங்கு: ஒரு பதிலுமில்லை. நீ எதுவேண்டுமானாலும் செய்துகொள்—நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.
வேதாளம்: அப்படியானால் வந்ததை அனுபவித்துக்கொள். மகளைக் காட்டி மாளிகையைப் பிடிக்க எண்ணினாய்... என் செயல் எண்ணியபடி நடந்தால் சுகன் ஒன்றேது. தூண்டில் போட்டாய் பெரிய மீனைப் பிடிக்க... பாவம் தூண்டியிலேயிருந்த சிறிய மீனும் துள்ளிப்பாய்ந்து விட்டது.
திருசங்கு: சூழ்ச்சிக்காரா! நீ ஏன் இதில் வீணே தலையிடுகிறாய்... போ உடனே!
வேதாளம்: பிறகு யார் தலையிடுவது? பலதேவர் குடும்ப பதவைக் கெடுக்க சல்லடம் கட்டிக் கொண்டு நிற்கிறாய் சண்டாளன் நீ! விஷயம் தெரியாத இளைஞனை ஏமாற்றி... விவாக சுப முகூர்த்தமா நடத்துகிறாய்... ரகசிய கல்யாணம்—கண்ணாடி மாளிகை... உன்னை யெல்லாம் விட்டுக்கூடாது. குதூகாரன்! வஞ்சகன்! குடும்பங் கெடுப்பவன்! பெண்ணைக் காட்டி கண்ணை மறைக்கும் பேய்—உன்னை என்னபாடு படுத்துகிறேன் பார்!
வேதாளம் போய் விடுகிறான். திருசங்கு கலங்கிப் போய் வீட்டுக்குள் திரும்புகிறான். எத்தனையோ பேராசைக் கோட்டைகள் எல்லாம் இடிந்து தூளாகிக் கிடக்கின்றன அவன்
முன்னே! பொன்னகருக்குச் செல்ல அவன் அமைத்த நூலேணி சுக்கல் சுக்கலாக அறுந்து போய் விட்டது. மகள் மாளிகை ராணியாகி மகிழலாம் என காத்திருந்தான். இப்போது மாளிகையின் வாயிற்படி ஏறக்கூட அவனுக்கு உரிமையில்லை. அவனைச் சுற்றிலும் பயங்கர மேகங்கள் இருளைப் பொழிகின்றன. அவன் இருதயம் படபடவென அடித்துக் கொள்கிறது. மங்கிப் போய் விட்ட அவனது கண்கள் வீட்டின் உத்திரத்தை கூர்ந்து பார்க்கின்றன. அவனது கையிலே ஒரு அழுத்தமான கயிறு. அதை உத்திரத்தில் கட்டுகிறான். கதவைத் தாளிடுகிறான்.
“ஆகாயமளாவ ஆசைப்பட்டேன். என் ஆசையெல்லாம், இந்த அழுத்தமான கயிற்று வளையத்துக் குள்ளேயே அடங்கி விட்டது.”
என்று கூறிக் கொள்கிறான். அவ்வளவுதான்! சாவின் மீது பாய்ந்து விட்டான். இனி மேல் அவனை யாரும் குற்றவாளி என்று கூறி கூண்டில் நிறுத்த முடியாது. பலதேவரின் பகையும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.
★