பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 38 / 61

காட்சி 38]

காட்சி 38]

மூல ஸ்கேன் 132, 133

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[தளபதி மாளிகை

தளபதி வெற்றிவேலனின் பாசறை மாளிகை. அங்கே பள்ளியறையில் உலவிக் கொண்டிருக்கிறான்—வெற்றிவேலன். முத்தாயி வந்துவிடுவாள், வந்ததும் இந்த லோகத்தை மறந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டு அலைகிறான் அங்குமிங்கும்.

“முத்தாயி! உனக்காக நாள்பட்டுமே காத்திருக்கிறேன்—அதோ வானத்து சந்திரிகையும் காத்திருக்கிறது. கோபப் பெண்ணே! குளிர்மொழிப் பாவாய்! ஏன் இன்னும் வராமலிருக்கிறாய்?..... அந்தக் குதிரை வீரர்கள் மண்டுகளா? அல்லது புரவிகள்தான் ஏன் அவசரம் புரியாதவைகளா? எவ்வளவு நேரம்! எவ்வளவு நேரம்! அப்போதே சொன்னேன்—ஆனந்த புரத்துக்கும், தலைநகருக்கும் ஒரு குறுக்குப் பாதை போடவேண்டுமென்று! இந்த அசட்டு ராஜா கேட்டிருந்தால்—இப்போது எவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என் முத்தாயி!”

இப்படி உளறியபடியே உலவிக்கொண்டிருக்கும் அவன் காதில், குதிரைகள் ஓடிவரும் குளம்படிச் சப்தங்கள் கேட்கின்றன. பரபரப்புடன் வெளியே கிளம்புகிறான் வெற்றிவேலன். மாளிகையின் முன்புறத்துக்கு ஓடுகிறான். குதிரைகள் வந்து நிற்கின்றன. குதிரையின் மீது இருக்கும் பெண்ணின் மேல் அவன் பார்வை விழுகிறது.

“முத்தாயி வந்துவிட்டாயா?” என்ற ஒரே வெறிப் பாய்ச்சலுடன் அவளைப் போய்த் தூக்கிக் கொண்டு, பள்ளியறைப் பக்கம் ஓடுகிறான். பெண்ணின் உடலைத் தூக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சியிருந்தாலே, கனம்தெரியாது போலும். மஞ்சத்தில் கொண்டு போய் அவளைப் படுக்கவைத்தான். பள்ளியறைக் கதவைத் தாளிட்டான். இரண்டு மதுக் கிண்ணங்களை எடுத்து அருகிலே வைத்துக் கொண்டான். “முத்தாயி, முத்தாயி” என்று அன்பு ததும்ப அழைத்தான். அவள் இப்பக்கம் திரும்பவேயில்லை. அவளது வாய் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.
“ஆகா—உனது பொன்மொழி சிந்தும் இதழ்கள் யார் மூடியது? இந்தக் குதிரைக்காரப் பயல்கள்—முட்டாள்கள்!”

என்றபடி வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டான். அவ்வளவுதான் உடனே கரகரத்த குரலில், சுகதேவ் அழுவதற்குத் தொடங்கினான். வெற்றிவேலன் திடுக்கிட்டுப் போய், சுகதேவை கூர்ந்து கவனித்தான். ஆம்—முத்தாயி அல்ல! சுகதேவ்தான்! வெற்றிவேலனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. சுகதேவை பலமாக அறைந்துவிடுகிறான்.

சுகதேவ்: அப்பா பிரபுவே! என்னை அடிக்காதீர்கள்.

வெற்றிவேலன்: நீ எப்படி இங்கு வந்தாய்?

சுகதேவ்: நானும் முத்தாயியும்—அவள் ஆணாகவும், நான் பெண்ணாகவும் வேஷம் போட்டுக்கொண்டு—ஆற்றங்கரை ஓரத்திலே—ஆனந்தமாக விளையாடுவதற்குச் சென்றோம், அப்போது ஏற்பட்டது பிரபு இந்த ஆபத்து.

வெற்றிவேலன்: முட்டாள்! வெளியில் சொல்லாமல் ஓடு—இதைவிட்டு!

சுகதேவ்: கண்ணே முத்தாயி! நல்ல வேளை, நீ தப்பிவிட்டாய்—நீ எங்கு போனாயோ—நான் உன்னை எங்கு கண்டு தேடுவேன்?

வெற்றிவேலன்: இங்கு நிற்காதே, ஓடு!—

சுகதேவன் பயந்து நடுங்கி அறைவிட்டு ஓடிவிடுகிறான்.