பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 37 / 61

காட்சி 37]

காட்சி 37]

மூல ஸ்கேன் 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[ஆனந்தபுரம்

ஆனந்தபுரத்தின் ஆற்றங்கரை யோரமாக ஒரு வயதான கிழவன் கம்பூன்றி நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவனது வெண்ணிறத் தாடி நிலவிலே அசைந்தாடியபடி இருக்கிறது. கூரிய கண் படைத்த அவனுக்கு காதுகளும் மிகக் கூர்மை போலும்! ஏனெனில், சில குதிரைகள் தனக்கும் சப்தத்தைக் கேட்டு ஒரு மரத்துக்குப் பின்னே ஒளிந்துகொள்கிறான். சப்தம் வந்த திசை நோக்கிப் பார்க்கிறான். நாலைந்து குதிரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன் பக்கத்திலே சில வீரர்கள் ஒளிந்த நிலையில் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிழவனும்—அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை இமை கொட்டாமல் கவனிக்கிறான். குதிரைகள் இருக்குமிடத்தை நோக்கி ஒரு மனிதன் மெதுவாக நடந்து வருகிறான். அவன் வேதாளம்தான்! அவனைக் கண்டதும் வீரர்கள் எழுந்து நிற்கிறார்கள். வேதாளம் மெல்லிய குரலில் பேசுகிறான்.

“முத்தாயி எப்படியும் வெளியேறிவிடுவாள். ஏனெனில் அவளுக்குத் திருமணம் பிடிக்கவில்லை. முத்தனும் அவளும் இந்த ஊராக கடந்து செல்ல இதைத்தவிர வேறு வழியில்லை. நாம் மிகவும் கவனிப்பாக இருக்கவேண்டும். முத்தாயியை மட்டும் தாக்கிக்கொண்டு கிளம்பி விடுவோம்—எவ்வோரும் விழிப்பாக இருங்கள்.”

இவைகள் எல்லாம் மரத்தடியில் ஒளிந்திருந்த கிழவன் நன்றாகக் கேட்டுக்கொள்கிறான்.

பிறகு மெதுவாக அங்கிருந்து நழுவி நடக்க ஆரம்பிக்கிறான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவனால் வேகமாக நடந்து செல்ல முடிகிறது. அவன் போய்க்கொண்டே இருக்கிறான். கடைசியாக அவனது கால்கள்—கண்ணாடி மாளிகைக்குப் பின்புறமுள்ள ஒரு தோட்டத்தின் பக்கத்தில் போய் நிற்கின்றன. சூனலாயிருந்த அவனது முகம் நிமிர்கிறது. கண்ணாடி மாளிகையை நெருங்குகிறான் கிழவன். மாளிகையின் பலகணிப் பக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிற பெரிய கொடிகளைப் பிடித்துக்கொண்டு மேல் நோக்கி ஏறுகிறான். அப்படி ஏறும் முயற்சியிலே வெற்றியும் பெற்றுவிடுகிறான். மாளிகையின் உட்புறத்திலே அந்த கிழவன் இறங்கி விடுகிறான். மெதுவாக நடக்கிறான் பூனைபோல்—ஒரே அமைதி—முத்தாயி இருக்கும் அறையின் பக்கம் வந்துவிடுகிறான். இந்த சமயத்தில் திருசங்குவும்—சுகதேவனும் மாளிகை மேற்புறத்திலே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.

சுகதேவ்: ஆகா! இந்த அழகான நிலாவெளிச்சத்திலே இன்றைய தினம்—உம்முடன் நின்றுகொண்டிருக்கிறேன். நாளையதினம் நானும்—முத்தாயியும் இந்தத் தேன் நிலவை அனுபவிப்போம்.

திருசங்கு: நீங்களும்—நானும் அதிர்ஷ்டசாலிகள் தான் தம்பி! நான் உங்களை மருமகனைப் பெற்றேன்—நீங்கள் என் மகளை மனைவியாகப் பெற்றீர்கள்.

சுகதேவ்: அதிலென்ன சந்தேகம்—இந்த நிலவுகூட அதைத்தான் சொல்லுகிறது.

திருசங்கு: சரி தம்பி — இங்கேயே இருங்கள் — நான் போய் முத்தாயி தூங்கிவிட்டாளா என்று பார்த்து வருகிறேன்.

சுகதேவ்: ஆமாம். தூங்கிவிட்டால் தூங்கச் சொல்லும். நாளைக்கு நான் தூங்கவிடமாட்டேன்—பேசிக் கொண்டே இருப்பேன்.

திருசங்கு கீழேயிறங்கிப் போகிறான்.

அங்கே, முத்தாயி இருக்கும் அறைக்குள்ளே கிழவன் நுழைந்துவிடுகிறான். அவனைக் கண்ட முத்தாயி திடுக்கிடுகிறாள்.

“முத்தாயி! பயப்படாதே—நான்தான் முத்தன்” என்கிறான் கிழவன். முத்தாயி அவனைக் கட்டிக்கொண்டு ‘அத்தான்’ என்று இன்பச் சொல்லுதிர்த்து கண்ணீர் விடுகிறாள்.

முத்தன்: பேசிக்கொண்டிருக்க நேரமில்லை — உடனே புறப்படவேண்டும்.

முத்தாயி: நீங்கள் வருவீர்கள் என்று வேதாளம் சொன்னார்.

முத்தன்: வேதாளம்! விஷப்பாம்பு அவன். முத்தாயி எப்படியாவது சுகதேவின் நீ இங்கே வரும்படி செய்யவேண்டும்.

முத்தாயி: சுகதேவனா? ஏன்?

முத்தன்: என் தெரியுமா? நாம் இப்போது வெளியேறுவதென்றால் சாதாரணமல்ல—நம்மைச் சுற்றி ஆபத்து காத்திருக்கிறது.

அந்த சமயத்தில் திருசங்கு வரும் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை கேட்டதும், முத்தன் அங்குள்ள திரை மறைவில் ஒளிந்து கொள்கிறான். திருசங்கு, முத்தாயி விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து,

திருசங்கு: முத்தாயி, இன்னும் தூங்கவில்ல?

முத்தாயி: தூக்கம் வரவில்லையப்பா! யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன்.

திருசங்கு: என்னம்மா யோசனை?

முத்தாயி: அந்த வேதாளம் வந்து — எனக்கு அறிவு புகட்டி விட்டார் — இத்தனை நாளும் புத்தி கெட்டுப் போய் அந்த முத்தனை நம்பியிருந்தேன்.

திருசங்கு: மகளே! நீ தான் பேசுகிறாயா? — ஆகா — வேதாளம் சொன்னது சரிதான்—முத்தாயி! உன்னைப் பெற்ற பயன் இப்போதே அடைந்தேன்.

முத்தாயி: அப்பா! ஒரு உதவி செய்வீர்களா?

திருசங்கு: ஆயிரம் செய்வேன் — சொல்லு?

முத்தாயி: காலையில் எனக்கும் சுகதேவருக்கும் திருமணம்! இப்போது நான் அவரை சந்தித்து சில விஷயங்கள் பேச வேண்டும்! — அவரைப் பார்க்க வேண்டுமென்று மனமும் துடிக்கிறது!

திருசங்கு: என் ஆசை மகளே! இதுவா பிரமாதம்—இப்போதே அனுப்புகிறேன்—

திருசங்கு, அதைவிட்டு வேகமாக மேல் மாளிகைக்குப் போகிறான். சுகதேவிடம்—

திருசங்கு: தம்பி! என் தங்கமகள் இன்னும் தூங்கவில்லை.

சுகதேவ்: ஏன்?

திருசங்கு: எங்கிக் கொண்டிருக்கிறாள்—தங்களைக் காண வேண்டுமென்று!

சுகதேவ்: அப்படியா?

திருசங்கு: இப்போதே உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

சுகதேவ்: ஆகா என் காதல்தேவி! இதோ வருகிறேன். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருந்தால் சும்மாயிருக்குமா? - மாமா! நீர் நன்றாகத் தூங்கலாம் — நான் வருகிறேன்—

சுகதேவ், உடனே கண்ணாடியிடம் சென்று தன்னை அலங்காரம் செய்து கொண்டு புறப்படுகிறான். இதற்குள்—முத்தன், முத்தாயியிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிவிட்டு மாளிகையை விட்டு வெளியேறி விடுகிறான். முத்தாயி, சுகதேவின் வருகைக்காக காத்திருக்கிறாள். சுகதேவும் ஆனந்த சாகரத்தில் மூழ்கி உள்ளே நுழைகிறான். அவனைக் கண்டதும் அவள் எழுந்து மரியாதையுடன் தில் குனிந்து நாணமுடன் ஒரு மூலையில் போய் நிற்கிறாள்.

சுகதேவ்: கண்ணே! என்னே என் அழகித்தாய்? அட—ஆட பேசமாட்டாயா? இவ்வளவு வெட்கமா உனக்கு?

முத்தாயி: வெட்கம் ஒன்றுமில்லை. பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் நாணம்.

சுகதேவ்: வா - அருகில் வந்து உட்கார்!

முத்தாயி: ஊஹூம்! — அதெல்லாம் திருமணமான பிறகு.

சுகதேவ்: திருமணந்தான் ஆகப் போகிறதே—முத்தாயி என்னிடம் உனக்கு இவ்வளவு பிரியம் இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை.

முத்தாயி: அதிருக்கட்டும் — உங்களிடம் ஒரு சேதி பேச வேண்டும்.

சுகதேவ்: சேதியா?—காதலன்—காதலி—கட்டிலறை—சிற்றின்பக் கூடாரமே தவிர சேதி பேசும் இடமல்ல கண்ணே!

முத்தாயி: இந்தக் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது.

சுகதேவ்: என்ன பேச வேண்டும் — பேசு!

முத்தாயி: ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

சுகதேவ்: ஆண் பாதி! பெண் பாதி! ஆணும் பெண்ணும் அர்த்தநாரீசுவரர் களாகவே சிருஷ்டிக்கப்பட்ட வேண்டும் என்பது என் கொள்கை. நான் ஆண்டவனாயிருந்தால் அப்படித்தான் செய்வேன்.

முத்தாயி: ஆகா — சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் சிக்கலான பெரும் விஷயத்தை! உங்களை அடையும் பாக்கியம் பெற்ற பெண் அதிர்ஷ்டசாலி தான்! — இன்னுமொன்று கேட்க வேண்டும்—

சுகதேவ்: கேள்!

முத்தாயி: அதை நான் கேட்டு—நீங்கள் உடனே சொல்ல முடியாது! — நீண்ட நேரம் பேசவேண்டும்.

சுகதேவ்: பேசுவோம் — பரவாயில்லை. உன்னுடன் பேசுவதைத் தவிர எனக்கு வேறென்ன இன்பம் இருக்கிறது?

முத்தாயி: அருமையான நிலவு — இருவரும் ஆற்றங்கரைப் பக்கம் போய் சுவையான கதைகளைப் பேசுவோமே!

சுகதேவ்: ஆகா — நினைத்ததைச் சொன்னாய் — வா! புறப்படு என் கண்ணே!

முத்தாயி: உஸ் — தொடக்கூடாது. இதெல்லாம் நாளைக்கு! — வாருங்கள் போகலாம்.

சுகதேவ்: தயாராயிருக்கிறேன்.

முத்தாயி: ஆணும் பெண்ணும் சமம் என்றீர்களே; நீங்கள் பெண் உடையிலும்—நான் ஆண் உடையிலும் செல்லலாமா?

சுகதேவ்: அய்யோ பெண் உடையிலா?

முத்தாயி: பார்த்தீர்களா! — பெண் என்றால் இழிவா?

சுகதேவ்: இல்லை இல்லை — யாராவது பார்த்தால் — வெட்கமாகயிருக்கும்.

முத்தாயி: யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தானே போகப் போகிறோம் — நீங்களும் நானும் ஒருயிரும் ஈருடலும் என்கிறபோது — நீங்கள் என் ஆடைகளையும் — நான் உங்கள் ஆடைகளையும் அணிந்து கொள்வதிலே என்ன தவறு!

சுகதேவ்: தவறேயில்லை! தங்க கட்டியே! நீ சொல்வது போலவே செய்கிறேன்.

சுகதேவ், தன்னுடைய ஆடைகளை கழற்ற ஆரம்பிக்கிறான். அவளும், திரை மறைவிலே சென்று — தன் ஆடைகளைக் கழற்றி அவனிடம் வீசுகிறாள். இருவரும் உடைமாற்றிக் கொள்கிறார்கள். சுகதேவ், பெண்ணாகவும் — முத்தாயி, ஆணாகவும் தோன்றுகிறார்கள். பிறகு, இருவரும்—யாருக்கும் தெரியாமல், மாளிகையின் பின்புறம் வழியாக ஆற்றங்கரையை நோக்கிச் செல்லுகிறார்கள். ஆற்றங்கரையிலே காத்திருக்கும் குதிரைவீரர்கள் யாராவது அப்பக்கம் நடமாடுகிறார்களா என்று கவனித்தபடி உலவுகிறார்கள். அவர்கள் கண்ணிலே ஒரு ஆணும் பெண்ணும் வருவது தெரிகிறது. அவர்கள் யாருக்காக வழிமேல் விழி வைத்திருக்கிறார்களோ: அந்த முத்தாயி வந்துவிட்டாள் என்று புரிப்படை கொள்கிறார்கள்.

ஒருவன்: முத்தன் - முத்தாயி இருவருமே வருகிறார்கள்.

மற்றவன்: சரி — புறப்படுங்கள்.

குதிரைகள் தடதடவெனக் கிளம்புகின்றன. சுகதேவும், முத்தாயியும் நடந்துசெல்லும் பாதையில் அவர்கள் குதிரைவீரர்கள் வந்து நிற்கிறார்கள். சுகதேவ் திடுக்கிறான் — குதிரைவீரர்கள் அவனை விடுவார்களா? பாவம் — அவன் தான் முத்தாயி உடையிலே இருக்கிறானே — சுகதேவ் பெண் எனக் கருதப்பட்டு பிடிக்கப்படுகிறான். முத்தாயி அதைவிட்டு ஓடிவிடுகிறாள். வீரர்களும் அவளைப் பின்தொடரவில்லை. பிடிபட்ட சுகதேவின்வாய் கட்டப்படுகிறது—குதிரையிலே தூக்கிவைத்துக்கொண்டு வீரர்கள் புறப்படுகின்றனர். முத்தாயியை தன்னுடைய தலைவனின் பள்ளியறை விருந்தாகக் கொண்டு போகிறோம் என்பது அந்த அப்பாவிகளின் நினைப்பு.

ஆண் உடையிலே இருக்கும் முத்தாயி, ஆற்றங்கரை ஓரத்திலே வந்து தன் காதலனைத் தேடுகிறாள். ஒரு புதரிலிருந்து முத்தன் புறப்பட்டு அவளிடம் வருகிறான்.

முத்தன்: முத்தாயி!

முத்தாயி: அத்தான் - அருமையாக அமைந்து விட்டது நாடகம்? இனி அடுத்தது என்ன?

முத்தன்: முத்தத்திற்கு பிறகே முழுதும் சொல்லப்படும். அதோ பார் - நிலவும் மேகமும் தழுவிக் கொள்வதை!

இருவரும் வானத்தைப் பார்க்கிறார்கள் முகிலும் நிலவும் முத்தமிடுகின்றன.