பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 36 / 61

காட்சி 36]

காட்சி 36]

மூல ஸ்கேன் 116, 117, 118, 119, 120, 121, 122

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகை

[இரவு நேரம்]

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெறுகின்றன. கண்ணாடி மாளிகையின் உச்சியிலே சுகதேவ் நின்று கொண்டு முத்தாயி வருகையை எதிர்பார்த்திருக்கிறான். வாயிற் புறத்தில் குதிரை வண்டி வந்து நிற்கிறது. அதிலிருந்து திருசங்கும், முத்தாயியும் இறங்குகிறார்கள். முத்தாயி மேலே நிற்கும், சுகதேவனைப் பார்க்கவில்லை. அவள் சந்தோஷமுடன் உள்ளே செல்கிறாள். அதற்குள் மாளிகையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்ட சுகதேவன் அவர்களைக் கூடத்தில் சந்திக்கிறான். சுகதேவனைக் கண்டதும் முத்தாயிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. உலகமே சுழல்கிறது அவளுக்கு! மயக்கமுற்றுக் கீழே விழுந்து விடுகிறாள்.

சுகதேவ் : என்ன என்ன?

திருசங்கு : ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிட்டது! சந்தோஷத்தால் இருதயம் பட்டபாட்டுக்கு மல்லவா தம்பி!—

சுகதேவ் : ஆமாம் ஆமாம் — எனக்கூட இப்போது அப்படித்தான் அடித்துக் கொள்கிறது!—

திருசங்கு : சரி — நீங்கள் மேலே போங்கள்!— நான் பிறகு வருகிறேன்.

சுகதேவ் : மேலே போய்விடுகிறேன், ஆனந்தமாகப் பாடிய படியே!—

மாளிகையின் ஒரு அறையிலே மயக்கம் சிறிது தெளிந்து கண்விழிக்கிறாள் முத்தாயி! அவள் விழிகளில் நீர்வீழ்ச்சிகள் கொட்டுகின்றன. பக்கத்திலேயிருக்கும் திருசங்கு, தன் கையிலே வைத்துள்ள ஆபரணங்களை அவளிடம் காட்டுகிறான்.

திருசங்கு : முத்தாயி—இவைகளைப் பார்! முத்துமாலையும் ரத்தினமும் வைரமும் பதித்திட்ட ஆபரணங்கள்! பளபளக்கும் பட்டாடை! ஜொலிக்கும் வைரம்!—மதிப்பு வாய்ந்த ரத்தினம்!—பெண்ணே! இவைகள் எல்லாம்.....

முத்தாயி : உங்கள் மானத்திற்குத் தரப்பட்ட விலை!—உங்கள் மகள் மீது வீசப்படும் வலை!

முத்தாயி அந்த ஆபரணங்களைக் கீழே தட்டி விடுகிறாள். அவைகள் இறைந்து சிதறுகின்றன.

திருசங்கு : சொல்வதைக் கேள்!

முத்தாயி : எதுவும் சொல்ல வேண்டாம்! எல்லாம் விளங்கி விட்டது. சிப்பியே முத்தைக் கொண்டுவந்து சேற்றில் போடுகிறது. செந்தாமரைக் கொடியே, இதழ்களை உதிர்த்து எருமைக்குத் தருகிறது.

திருசங்கு : அழகாகப் பேசுவது பெரிதல்ல. நீ இப்படிப் பேச காரணமாயிருக்கிற கல்வி, நான் பாடுபட்ட திரவியத்தால் கிடைத்தது உனக்கு—காதல் இதனை கண்டபடி கத்துகிறதே! அந்த முத்தன் உன்னுடைய அழகைத்தான் காதலிக்கிறான். ஞாபக மிருக்கட்டும்—பாளையக்காரர் மகன் எந்த அழகுக்காகத் தவங்கிடக்கிறானே, அந்த அழகான உடல், நான் வளர்த்தது — நான் வளர்த்தது! எனக்கு துரோகம் பண்ணாதே.

முத்தாயி : சே! உங்கள் மகளிடமா இப்படிப் பேசுகிறீர்கள்?

திருசங்கு : மகள்! மகளாயிருந்தால் தகப்பனுடைய மனதை இப்படி எரிய விடுவாளா? நீ மகளாயிருந்தால் — ஒரு வயதான தகப்பன். வாஞ்சையுள்ள தகப்பன்—வறுமையிலே பல நாள் கஷ்டப்பட்டவன்—இப்போது வாழ்ந்து பார்க்கலாமென்று நினைக்கிறேனே—அதற்குத் துணை புரிவோம் என்று எண்ணமாட்டாயா?

நான் வாழ்வதற்காக—உன்னை யென்ன; தீயிலா குதிக்கச் சொல்லுகிறேன்? பெரிய தியாகமா பண்ணச் சொல்லுகிறேன்? தேடக் கிடைக்காத இடம்—அந்த இடத்து தெய்வமாக வைத்துப் போற்றுகிறேன் என்கிறேன், நீ தேம்புகிறாய்—விம்முகிறாய்—புலம்புகிறாய்—புத்தியற்றவளே!

முத்தாயி : அப்பா—ஒரே ஒரு உதவி செய்யுங்கள்—என்னைக் கொன்று விடுங்கள்!

திருசங்கு : கொல்வதற்காக இவ்வளவு செலவழித்து வளர்க்க வேண்டியதில்லை உன்னை!

முத்தாயி : வளர்த்ததற்காக, உயிரோடு வைத்துக் கொல்லுகிறேன் என்கிறீர்களா? அப்பா! என்ன சித்ரவதை செய்யாதீர்கள்—உங்கள் மகள் கேட்கும் கடைசி வேண்டுகோள்—வெளியிடும் இறுதியான ஆசை—என் வாழ்வை நெருப்பாக்கி விடாதீர்கள் அப்பா!

திருசங்கு : எத்தனையோ ஆசைகள் உனக்கு நான் நிறைவேற்றியிருக்கிறேனே — நீ தான் எனது முதலும் கடைசியுமான இந்த ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாதா?

முத்தாயி : பல முறை உனக்கு இளநீர் வாங்கியிருக்கிறேன். ஒரு முறை உன் தலையில் விழுகிறேன் என்று தென்னை மரம் சொல்வதற்கும் — நீங்கள் சொல்வதற்கும் என்னப்பா வித்தியாசம்?

திருசங்கு : ஓ — அதிகப் பிரசங்கி!— அடங்கிக்கிட!— காலையிலே உனக்கும், இளவரசருக்கும் திருமணம். தயாராகிக்கொள்!—

திருசங்கு வேகமாகப் போய் விடுகிறான் அதை விட்டு. முத்தாயி அங்கேயே சுருண்டு விழுகிறாள். தெரு பக்கமாகப் போன திருசங்கு அங்கே வேதாளம் வருவதைப் பார்க்கிறான். வேதாளத்தைக் கண்டதும் அவனுக்கோர் புது நம்பிக்கை பிறக்கிறது. அவனது யோசனைப்படி தானே ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையில் ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே திருசங்கு ஆவலுடன்—

திருசங்கு : வாருங்கள், நல்ல சமயத்தில் வந்தீர்கள்.

வேதாளம் : என்ன திருசங்கு எல்லாம் நல்லபடி ஏற்பாடாகி விட்டதல்லவா?

திருசங்கு : ஏற்பாடுகள் எல்லாம் சரி, ஒரே ஒரு குறை தான்.

வேதாளம் : என்ன அது?

திருசங்கு : சுகதேவை மணந்திட முத்தாயி மறுக்கிறாள்.

வேதாளம் : சரி தான் போ! சாப்பாடு தயாரா, சோறு தான் இல்ல என்பது போல் இருக்கிறது இது! இருவருமே ஒன்றுபட்ட காதலர்கள் என்றீர்களே முன்பு!

திருசங்கு : முத்தாயி ஒரு முரட்டுப் பெண்! அவள் பிடிவாதத்தை என்னால் மாற்ற முடியவில்லை நீங்கள் தான் எப்படியாவது......

வேதாளம் : முயற்சிக்கிறேன் இப்போது அவள் எங்கே இருக்கிறாள்.

திருசங்கு : உள்ளே தானிருக்கிறாள்.

வேதாளம் : சரி நீங்கள் யாரும் வராதீர்கள் நான் அவளை சரி செய்கிறேன்!

திருசங்கு : நான் அதிர்ஷ்டசாலி தான் - எப்படியாவது அவள் நல்வழிக்கு அழைத்து வாருங்கள்.

வேதாளம், முத்தாயி இருக்குமிடத்திற்குச் செல்கிறான். திருசங்கு, படிகளில் ஏறி சுகதேவிடம் போய் விடுகிறான். முத்தாயி தரையில் விழுந்து கிடப்பதை வேதாளம் பார்க்கிறான்.

வேதாளம் : முட்டாள் பெண்ணே! எழுந்திரு! ஏன் இப்படிப் படுத்திருக்கிறாய்? பேசமாட்டாயா? சரி தான் துக்கப்பட்ட இதுதான் நேரமா? கடல் குமுறிக் கொண்டிருக்கிறது - நீ என்னமோ கட்டு மரத்தில் உட்கார்ந்து ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கிறாயே! ஆகவேண்டியதைப்பார். அன்புள்ள சிறுமியே! அழுவதால் ஆபத்தைக் கரைத்துவிட முடியாது!

முத்தாயி வேதாளத்தைப் பார்த்து எழுந்து உட்காருகிறாள்.

வேதாளம்: ஏன் அழுகிறாய்?

முத்தாயி: ஊர் சிரிக்கிறது! நான் அழுகிறேன்!

வேதாளம்: உண்மைதான் ஆணும் கொழுந்து மனம் படைத்த கோதையே-கொந்தளிப்பிலிருந்து மீள்வதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணருவாய்!

முத்தாயி: மீள்வதற்கு வாய்ப்பா?

வேதாளம்: ஆமாம், வாய்ப்புத்தான்! உன் விடுதலைதான்! வேதனை விலகுகிறது என்ற அறிகுறி தான், வேதாளத்தின் வடிவத்திலே வந்திருக்கிறது.

முத்தாயி: என்ன சொல்கிறீர்கள்?

வேதாளம்: முத்தனும் நானும் எவ்வளவு நேசமுடன் பழகினோம் என்பது உனக்குத் தெரியாது. நீ கொடுத்தனுப்பிய பொன்னி சமதி, வாயில் போட்டுக் கொண்டு விட்டாள்! முத்தன் பாசறை சிறையில் அடைக்கப்பட்டு விட்டான். நான் அரும்பாடு பட்டு சேமித்து வைத்திருந்த திரவியத்தைக் கொடுத்து, இப்போது அவனை மீட்டு விட்டேன்.

முத்தாயி: ஆ! என் முத்தன் விடுதலை அடைந்து விட்டாரா?

வேதாளம்: அய்யோ. பரிதாபத்துக்குரிய பாவையே—தூங்கமில்லாத உனக்கு இவ்வளவு கஷ்டங்கள் வரலாமா? இன்னும் கேள் இன்பச் செய்தியை! உன் அப்பன்-கொடியவன் உன்னை ஏமாற்றி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தான் என்பது எனக்குத் தெரிந்து—உடனே ஓடி வந்தேன் உன்னைக் காப்பாற்ற! கல்யாண விருந்தினன் போல வந்து என் நண்பனின் காதலியை விடுவிக்க முயலுகிறேன்!

முத்தாயி: அப்பா, நீங்கள் பல்லாண்டு வாழ்க ...

வேதாளம்: இந்த அக்கிரம உலகத்தில் என்னம்மா ஆயுள் நீளவேண்டும் — அது தொலையட்டும்—இதைக்கேள் இளஞ்சிட்டே! இன்றிரவே முத்தன் இங்கு வருவான் — நீ அவனுடன் புறப்பட்டு வந்துவிடு!

முத்தாயி: அவர் வருவாரா?

வேதாளம்: வராமல் இருப்பானா? ஜாக்கிரதை—மிகவும் தந்திரமாக நீங்கள் இருவரும் வெளியேறவேண்டும். சரி, நான் அதிக நேரம் தாமதிக்கக் கூடாது — வெளியே சென்று வேண்டியதைக் கவனிக்கிறேன்.

முத்தாயி: உங்களே எப்படி நான் வாழ்த்துவேன்! நீங்கள் பரோபகாரி — நல்லவர் — உண்மையின் உருவம்—உத்தம சிரேஷ்டர்.

வேதாளம்: உலகத்திற்கு நல்லது கெட்டது தெரிய வில்லையம்மா—ஜாக்கிரதை—நான் வருகிறேன்.

வேதாளம் வெளியேறுகிறான். வேதாளத்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருசங்கு — ஆவலுடன் “என்ன ஆயிற்று” என்று வினவுகிறான். “வெற்றிதான்” என்று வேதாளம் கூறியதும் திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. இருவரும், சுகதேவ் இருக்குமிடத்திற்குச் செல்லுகிறார்கள். சுகதேவ் வேதாளத்தை மிகவும் உற்சாகமுடன் வரவேற்கிறான். இங்க நிலமை இப்படியிருக்க—முத்தன் என்ன ஆனான் என்று பார்ப்போம்.