பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 35 / 61

காட்சி 35]

காட்சி 35]

மூல ஸ்கேன் 111, 112, 113, 114, 115

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[வேங்கைபுரம் தளபதி மாளிகை

தளபதியின் கையிலிருக்கும் இறகு பேனா எதையே கிறுக்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நெஞ்சிலே விழும் இறல் எட்டியும் விழுவதுண்டு. அதனால் தான் போலும், வெற்றி வேலன்—“முத்தாயி முத்தாயி” என்று கிறுக்கிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு வீரன் வந்து வணங்கி நிற்கிறான்.

வெற்றிவேலன் : என்ன ?

வீரன் : வேதாளமாம்—தங்களைக் காண அனுமதி கேட்கிறார்.

வெற்றிவேலன் : வேதாளமா? வரச்சொல்—வரச்சொல்!

வீரன் வெளியே போகிறான். தளபதியின் ஆவல் வீறிட்டெழுகிறது. வேதாளம் உள்ளே நுழைகிறான்.

வேதாளம் : அன்பு தங்கிய பிரபுவே! அடியேன் வணங்குகிறேன்.

வெற்றிவேலன் : வாரும் வேதாளம்! வெற்றியோடுதான் வந்திருப்பீர் என எண்ணுகிறேன்.

வேதாளம் : வெற்றியின் ஆரம்பந்தான் பிரபு! நமது புறா, புது வேடனிடம் சிக்கி இருக்கிறது.

வெற்றிவேலன் : என்ன — என்ன—?

வேதாளம் : முத்தாயி பற்றித்தான் சொல்லுகிறேன். முத்தனென்ற மரக்கிளையிலே இருந்த புறா, நீங்கள் வைத்த கண்ணியிலே விழாமல் — இப்போது, சுகதேவன் என்ற வேடனின் குறிக்கு இலக்காகித் தவிக்கிறது!

வெற்றிவேலன் : அப்படியா?—இனிமேல் எனக்கு நம்பிக்கை இல்லை.

வேதாளம் : தேருங்கள்—புயலடித்தாலும்—புறா—அந்தக் கிளையை விட்டுக் கிளம்பாது. அதனால், வேடன் குறி பார்ப்பதற்குள், கிளையை வெட்டி விட்டால் புறாவும் கிளையும் நீங்கள் வைத்த கண்ணியிலே விழுந்துவிடும். பிறகு கிளையை எடுத்து எறிந்து விட்டு, அந்தத் தங்கப் புறாவை தங்கள் புறாவாக்கிக் கொள்ளலாம்.

வெற்றிவேலன் : புரியும்படி சொல்லும்—புரியும்படி சொல்லும்.

வேதாளம் : சொல்கிறேன். சுகதேவனுக்கும், முத்தாயிக்கும் ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திருமணம் நடக்கப்போகிறது. நீங்கள், முத்தனிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, அவனைத் தந்திரமாக ஆனந்தபுரம் அனுப்பவேண்டும். அவன் போனால் அவனுடன் முத்தாயி கிளம்பி விடுவாள்!—பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம். உடனே முத்தனை அனுப்புங்கள்!

வெற்றிவேலன் : சரி! நீர் சற்று மறைவாக இரும்! நான் முத்தனை அழைக்கிறேன். ஏ, யாரங்கே? (வீரன் வந்திட) உடனே முத்தனை இங்கு கொண்டு வா! (வீரன் போகிறான்)

முத்தன் கட்டுப்பட்டிருக்கும் இடம்.

நில விலங்கிலிருந்து சற்று தண்டனையைத் தளர்த்தி, விலங்குமட்டும் பூட்டப்பட்டு முத்தன் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனை வீரன் வந்து அழைத்துச் செல்கிறான். முத்தன் தளபதியின் அறையில் நுழைகிறான். வேதாளம் அங்கில்லை.

வெற்றிவேலன் : வா—முத்தா! வா! நல்ல வாலிபனே! உன்னை நான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். முதலில் உன்னை நான் கண்டபோதே, குறுகுறுத்த உன் கண்களும் — பரபரப்பான உன் உடல் அசைவுகளும்—என் கருத்தைக் கவர்ந்தன. ஆனால் பாளையக்கார பலதேவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு உன்னை அதிகம் துன்புறுத்தி விட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

முத்தன் : அய்யா! திடீரென்று மாறி விட்டீர்களே! நான் திக்கற்றவன் என்பதை எப்படி உணர்ந்தீர்கள்? தெய்வமும் வந்து சொல்லியிருக்க முடியாதே!

வெற்றிவேலன் : மனிதனுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறது. மனிதன் மிருகமாக மாறும்போது அந்த மனச்சாட்சி புறாவாக மாறி அடங்கிக் கிடக்கும். மிருகத்தன்மை தோல்வியடையும் நேரத்தில் புறாவாகிப் போன மனச்சாட்சி புள்ளி மயிலாக எழுந்து நடனமாடும்! அந்த ஆட்டத்திலே தான் உண்மையின் அழகு ஒளிவிட்டு ஆரம்பிக்கிறது.

முத்தன் : ஆகா! சிறப்பான கருத்து. இந்த இடத்திலேயும் பிறக்கிறது—சேற்றிலே செந்தாமரை முளைப்பது போல்!

வெற்றிவேலன் : முத்தா! என் கண்ணைத் திறந்துவிட்ட நிகழ்ச்சி எது தெரியுமா? உன் அன்புக் காதலி முத்தாயியை சுகதேவன், பலவந்தமாக மணம் புரிய போகிறான். இந்தச் சேதி கேட்டதும் உன்பால் எனக்கு அன்பு ஏற்பட்டது. உனது காதலி உன் உதவியை எதிர்பார்த்து ஊசலாடிக் கொண்டிருக்கிறாள். நீ உடனே போக வேண்டும் அவளைக் காப்பாற்ற வேண்டும்.

முத்தன் : உண்மையாகவா?

வெற்றிவேலன் : ஆமாம். ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திருமணம்! அவன் ஆவி பிரிவதற்கு முன் நீ ஓடு! முத்தா! ஒன்று சொல்லுகிறேன். நீயும் முத்தாயியும் என் பாதுகாப்பில் இந்த ஊரிலேயே குடும்பம் நடத்தலாம்!—அதற்கென்ன இப்போது அவசரம்—உடனே போ! உன் உயிரினையானைக் காப்பாற்று!—உங்களின் உண்மைக் காதல் மலர் என்னுள் உதிர்ந்து போவானேன்?

முத்தன் : மிகவும் நன்றியுடையவன் அய்யா நான்!

வெற்றிவேலன் : இன்றே! இப்போதே ஓடு! இழந்த காதலைப் பெற்றிடு!

முத்தன் வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறான். அவனுக்கு ஒரே குழப்பம். அதற்குள் தளபதியின் அறையில் ஒரு சிறப்பு சப்தம் கேட்கிறது. முத்தன், ஒளிந்து நின்று கவனிக்கிறான். உள்ளே தளபதியும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வேதாளம் : சபாஷ் பிரபுவே! மிகவும் நன்றாக நடித்து விட்டீர்கள்.

வெற்றிவேலன் : சரியானபடி ஏமாந்து விட்டான் பயல்! வேதாளம்! அடுத்த ஏற்பாடு என்ன?

வேதாளம் : அடுத்ததா? சொல்கிறேன். முத்தன் எப்படியும் மீட்டு விடுவான். இருவரும் தப்பி ஓடி வருவார்கள். அப்போது நமது குதிரை வீரர்கள் சிலர் அவர்களைத் தாக்க வேண்டும்—முத்தனை விட்டு முத்தாயியைப் பிரித்து—அவளைத் தங்களிடம் கொண்டு வந்துவிட வேண்டும். முத்தன்—காதலி போன இடம் தெரியாமல் தவிப்பான். எங்கேடாவது கெட்டுப் போகிறான் நமக்கென்ன?

வெற்றிவேலன் : சரி, அப்படியானால் முத்தாயியைத் தூக்கிவர உமது தலைமையிலேயே குதிரை வீரர்களை அனுப்புகிறேன்.

வேதாளம் : சந்தோஷம்! நானும் உடனே புறப்பட்டு ஆனந்தபுரம் செல்கிறேன்! ஏனெனில் முத்தாயியை உயிரோடு உங்களுக்குத் தரவேண்டுமல்லவா?

வெற்றிவேலன் : சரி, வேதாளம்!

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்தன் ஒரு தீர்க்கமான முடிவுடன் அதை விட்டுப் போய்விடுகிறான்.