பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 34 / 61

காட்சி 34]

காட்சி 34]

மூல ஸ்கேன் 108, 109, 110

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[திருசங்கு வீடு

ஒரு மூலையிலே உட்கார்ந்து கன்னங்களைக் கண்ணீரால் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள் முத்தாயி!—அப்போது திருசங்கு நுழைகிறான். அவன் கையிலே சுகதேவ் எழுதிய கடிதம் இருக்கிறது. அதை மறைத்து வைத்துக்கொள்கிறான்.

திருசங்கு: முத்தாயி!... முத்தாயி! என்னம்மா இப்படி வருத்தமாகவே யிருக்கிறாய்?...

முத்தாயி: காரணமா கேட்கிறீர்கள்?

திருசங்கு: நீ சந்தோஷமாக யிருக்க வேண்டுமென்று தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.

முத்தாயி: அப்பா!

[பேசமுடியாமல் திணறி அழுகிறாள்]

திருசங்கு: இப்போது என்னம்மா வந்துவிட்டது! ஆறுதலாக இரு.

முத்தாயி: மல்லிகைக் கொடியின் வேரை அறுத்து விட்டு, அதன் மலருக்கு நீரூற்றி என்னப்பா பயன்?

திருசங்கு: வேரை, நான் அறுக்கமாட்டேன் அம்மா! பயப்படாதே—உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும்.

முத்தாயி: அப்பா!

திருசங்கு: உற்சாகமாயிரு! உன் கவலை யெல்லாம் நீங்கும். மடத்திலே குருபூஜை வேறு நடக்கப்போகிறது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமாயிருக்கும். நீயும் குதூகலமாயிரம்மா!

முத்தாயி: ஒளிக்குப் பக்கத்திலே யிருந்தாலும் நிழல் இருளாகத்தானிருக்கும். உற்சாக நிகழ்ச்சிகள் எவ்வளவு இருந்தாலும், என் உடைந்த உள்ளத்திற்கு மருந்தேது தந்தையே!

திருசங்கு: மகளே! நான் செய்த தவறுகளை மறந்து விடு. பாழும் பொருளாசையால் பைத்தியக்காரன் போல நடந்துவிட்டேன். உங்கள் தூய்மையான அன்பைத் துண்டாட நினைத்த இந்த துரோகியை மன்னித்துவிடம்மா!

முத்தாயி: அப்பா!

[என்று கதறி தந்தையின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.]

திருசங்கு: அழாதே—உன்னையும், முத்தனையும் சேர்த்து வைக்க தீர்மானித்துவிட்டேன். உடனே புறப்படு!

முத்தாயி: எங்கேயப்பா?

திருசங்கு: கேளம்மா! நீ முத்தனைக் காதலிக்கிற விஷயம் பாளையக்காரருக்குத் தெரிந்துவிட்டது. சுகதேவனுக்கும் உனக்கும் திருமணம் நடப்பதை விரும்பாத பாளையக்காரர் உன்னை உடனே முத்தனுக்கு மணமுடிக்கும்படி கட்டளையிட்டுவிட்டார்!

முத்தாயி: ஆகா! அவர்கள் சுயநலம் என் சோகத்தைத் துடைத்துவிட்டது!

திருசங்கு: முத்தனை விடுதலை செய்யுமாறு பாளையக்காரர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களும் அவனை விட்டுவிடுவார்கள்.

முத்தாயி: வந்துவிடுவாரா அவர்?...

திருசங்கு: இங்கு வரமாட்டான். பாளையக்காரர் உத்திரவு என்ன தெரியுமா?...

சுகதேவன், உன்னைத் தூக்கிப்போய் கல்யாணம் செய்திட முடிவு செய்திருக்கிறான். அதிலிருந்து தப்புவதற்கு, உடனே நாமிருவரும் ஆனந்தபுரம் என்ற ஊருக்கு செல்லவேண்டும். அங்கே முத்தன் வருவான். உங்கள் திருமணம் முடிந்துவிடும். எல்லா ஏற்பாடுகளையும் உன் நன்மைக்காக பாளையக்காரரே கவனிக்கிறார்.

முத்தாயி: அப்பா!... என்னையே என்னால் நம்பமுடியவில்லை. இந்த இன்பமான செய்தியைக் கொண்டு வந்த உங்களை வணங்குகிறேன். நான் ஏதாவது வேகத்தில் பேசியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள்!

திருசங்கு: சரியம்மா! உடனே ஆனந்தபுரம் புறப்பட ஏற்பாடுகளைக் கவனிப்போம்.

முத்தாயி: வேறு என்ன வேலையப்பா அதைவிட, எனக்கு!

புறப்படத் தயாராகிறார்கள். வண்டியும் வாசலில் வந்து நிற்கிறது. முத்தாயி களிநடனம் புரிந்தபடி காதலனைக் காண பயணமாகிறாள்.