பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 32 / 61

காட்சி 32]

காட்சி 32]

மூல ஸ்கேன் 105, 106

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[வேங்கைபுரம்

வீரர்களின் பாசறை... மதுக்கிண்ணங்களும் அதை ஏந்தி நிற்கும் மங்கையர்களும்! இதழிலே மதுக்கிண்ணங்களை வைத்தபடி அவர்களின் மடியிலே படுத்திருக்கும் போர் வீரர்கள். வீரர்களின் நிலையே இதுவானால்—சேனாதிபதியின் நிலை எப்படியிருக்கும். பட்டுமெத்தை—அதிலே சாய்ந்து கிடக்கும் வெற்றிவேலன். தலை தூக்க முடியாத அளவுக்கு போதை. நாவு எப்படி அசைகிறது என்பதை உணரமுடியாதபடி வெறியுணர்ச்சி. அவனைச் சுற்றிப் பெண்கள் அவர்கள் மீது சுழலும் அவன் கண்கள். அவனது சிவந்த விழிகளை வெற்றி கொள்ளும் பாவையரின் பவள இதழ்கள். வேலையும், வாளையும் ஏந்தி களம் புகுந்து பகைவரின் தலைகளைக் கையிலே ஏந்தும் வீரர்கள், மதுக்கிண்ணங்களை ஏந்தி—மலரடிகளை வருடிக் கிடந்தனர். தளபதி வெற்றிவேலனின் பிறந்த நாளாம் அன்று! அதை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆட்டமும், பாட்டும், கூத்தும், கூவலும், காதற்பேச்சும், காமச்சேட்டையும், சேனைத் தலைவனின் பிறந்த நாள் விழாவுக்கு மெருகேற்றின.

"ஆயிரங் கிண்ணம் மதுவும் சரி; உன் அதர பானம் ஒரு துளியும் சரி" என்று வீரர்கள் புகழ்ந்தனர்.
"யானையின் மத்தகம் போன்ற உன் தோளிலே சாய்வது தான் எத்தனை சுகம் எனக்கு" என்று பெருமூச்சு விட்டனர் அழகிகள்.

கோலாகாலம்! கொண்டாட்ட வாத்தியம்! கும்மாளம்! குதூகலம்! அனைத்தையும் காதில் வாங்கியபடியே அங்கே யொருவன் கிடக்கிறான், கடுமையான தண்டனைக்கு உட்பட்டு!

"முத்தாயி! முத்தாயி!" என்று அவன் வாய் புலம்பியபடியிருக்கிறது. தளபதியின் இருப்பிடத்திற்கு அருகாமையிலே—வீரர்களின் கொண்டாட்டக் கூட்டத்திற்கு எதிர்ப்புறத்திலே—நில விலங்கு பூட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறான் முத்தன். அவனது உடலிலேயிருந்து வியர்வை மழை பொழிந்த வண்ணமிருக்கிறது. குனிந்த நிலையிலிருந்து அவனால் நிமிர முடியாதபடி கையும், காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. கழுத்திலே தாங்கமுடியாத வலி. அந்த வலியைப் போக்கும் வலிமை வாய்ந்த கரம் இங்கில்லை; பழுதூரில் திருசங்குவின் வீட்டில் இருக்கிறது. இடுப்பை வெட்டி எறிந்து விட்டாலும் பரவாயில்லையே என்று எண்ணுகிற அளவுக்கு சொல்லொணாத வேதனை. ஒவ்வொரு எலும்பிலும் ஒரு ஈட்டி பாய்ச்சப்பட்டு, நரம்புகளிலே ஊசி ஏற்றப்பட்டு, தசைகளை யெல்லாம் உளியால் செதுக்கினால் எப்படியிருக்குமோ—அப்படியிருந்தது அவனுக்குக் கஷ்டம்!
"முத்தாயி" என்று புலம்புவது மட்டுமே அவனுக்கு ஆறுதலாகயிருந்தது.